Friday 5 April 2019

வாசிப்பை நேசிப்போம் ...#கல்வி_ஒருவர்க்கு_....

#கல்வி_ஒருவர்க்கு_....

நூல் பற்றி ..

இது ஒரு தொகுப்பு நூல் , கல்வி குறித்து பலரும் எழுதியுள்ள கட்டுரைகளை , தத்துவத் துறையில் முனைவர் பட்டம் பெற்று  , கிராமப்புற மாணவர்களின் கல்விக்காகவேர்கள் அமைப்பை நடத்தி வரும் விரிவுரையாளர்
ச .பாலகிருஷ்ணன் என்பவர் தொகுத்தளிக்க
, 2013இல் புலம்பதிப்பகம்வெளியிட்டுள்ளது, பக்கங்கள் 216 ஐக் கொண்டுள்ள இந்நூல் ,கல்வித் துறை சார்ந்து கல்விச் சமத்துவத்தை எதிர்நோக்கித் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஆளுமைகள் பலரால் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு .

கல்வியின் நோக்கமே விடுபட்டவர்களை சேர்த்துக் கொள்வது , ஆனால் ஏதாவது காரணம் காட்டி கிராமப்புற மாணவர்களைப்  புறந்தள்ளும்  போக்கு தொடர்ந்து நடந்து வருகிறது என்பதை இங்குப் பதிவு செய்வது கவனம் எடுக்க வேண்டிய ஒன்றாக நாம் பார்க்க வேண்டும். 

மொத்தம் 22 கட்டுரைகள் உள்ளன  , மெக்காலே கல்வி முறை பற்றிய முதல் கட்டுரையில்  , முனைவர் தவி. வெங்கடேஸ்வரன் குறிப்பிட்டுள்ள தகவல்கள் நம்மை சிந்திக்க வைக்கின்றது. கல்வி மறுக்கப்பட்ட சமூகம் கல்வி கிடைக்கும் வாய்ப்பாக அமைந்ததாக
அதைப் பார்க்க வைக்கின்றது. நவீனக் கல்வி தான் மூட நம்பிக்கைகளை ஒழிக்கும் அறிவியல் முறைக்  கல்வியாக மெக்காலேவால் வடிவமைக்கப்பட்டு இந்தியாவிற்கு வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கதாக எண்ணுகிறேன்.

அடுத்ததாக என்னைக் கவர்ந்தது, பாகுபடுத்தும் கல்வியைக் கட்டமைத்தல் என்ற முனைவர் வசந்தி தேவி Vasanthi Devi அவர்கள் எழுதிய கட்டுரை . … எப்போதும் போல காட்டமாக தன் பாணியில் நம் நாட்டுக் கல்வியின் குறைபாடுகளை சுட்டிக் காட்டுவதோடு , உயர் கல்வியிலிருந்து தொடக்கக் கல்வி வரை பரவியுள்ள நோயை மாற்றுவது எப்போது?  என்கிறார் . மேலும் பல இடங்களில் பெற்றோரின் பேராசை , பாடத்திட்ட சுமையின் அழுத்தம் இப்படி பல வித காரணங்களின் வழியே எப்படி கல்வி ஏமாற்றப்படுகிறது  என்பதை வஞ்சப் புகழ்ச்சி அணியில் எள்ளி நகையாடுவதும் சில பகுதிகளில் இவரது கட்டுரையில் காண முடிகிறது.

தொடர்ந்து முனைவர் சு .இரவிக்குமார் காரல் மார்க்ஸின் வரிகளான , ஒவ்வொன்றுக்கும் பின்னால் ஒரு வர்க்கம் ஒளிந்து கொண்டிருக்கிறது என்பதின் அடிப்படையில் வர்க்க சமுதாயத்தில் கல்வியும் வர்க்கநலன்களைச் சார்ந்தே வடிவமைக்கப்படுவதாக தனது  கொள் வினை கொடுப்பினை , பொதுக் கல்வியும் ஊடகங்களும் என்றகட்டுரைையில் தந்துள்ளார்.

ஊடகங்கள் மக்களிடம் பரப்பும் உளவியல்களே அரசுப் பள்ளிகள் குறைந்து தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் பெருக்கத்திற்குக் காரணம் என வலுவான கருத்தை முன்வைத்து இக்கட்டுரையாளர் வாதம் செய்வது வரவேற்கத் தக்கது.

காலத் தேவையான கலாச்சார மாற்றங்கள் என்ற பெயரில் சி. என். மாதவன் Madhavan Narasimhachari N தந்துள்ள எழுத்துகள் அருகாமைப் பள்ளி , பொதுப் பள்ளி குறித்த கவலைகளையும் தனியார் பள்ளிகளை பிராண்ட் படுத்தும் நிலையையும் தொடர்பு படுத்தி விவாதித்துள்ளார்.

மொ. பாண்டியராஜன்  தந்துள்ள சமச்சீர் கல்வி பிறப்பும் - இறப்பும் என்ற பகுதியில் 1975 இல் உருவான 10 ஆண்டுக் கல்வித்திட்டம் முதல் இன்றைய நடைமுறையில்  இருக்கும்  சமச்சீர்  வரை பேசப்பட்டு இருக்கிறது.  தமிழக அரசு சமச்சீர்க் கல்வியை செயல்படுத்துவதில் செய்த தவறுகள் , ABL முறை , பேரா முத்துக்குமரன் கமிட்டி அறிக்கை என நிறைய தெளிவான வரலாறுகள் இடம் பெற்றுள்ளது வரவேற்கத் தக்கது.

நல்ல ஆசிரியர் எவ்வாறு நல்ல நாடகக் காரராக இருக்கிறார் என்பதை முன்வைத்து , நாடகம் உருவாக்குவதென்பது  கற்றல் - கற்பித்தல் இணைந்த ஒரு கல்விப் பணி என்று பொழுது போக்க மட்டுமே  அல்ல கலை , மாறாக பொழுதை அறிவு வயப்படுத்துவதும் அது , வகுப்பறைக் கல்வியான நிகழ்த்து முறைக் கல்விக்கான ஆசிரியர் ஒரு நல்ல நடிகராக இருப்பார் என வாதிடுகிறார் மு.இராமசாமி , இங்கு பிரளயன்  Pralayan Shanmugasundaram Chandrasekaran
அவர்கள் கண் முன் வருகிறார் , அவரது படைப்பான கல்வியியல் நாடகமும் நம்மை இந்தக் கட்டுரையோடு பிரயாணம் செய்கிறது. அதே போல் அனைவரும் அறிந்த அரசுப் பள்ளி ஆசிரியர் தெரு விளக்கு கோபிநாத்  Street Light Gopinath
போன்ற நாடகக் கற்பித்தல் முறையை அன்றாட வகுப்பறைகளில்  பயன்படுத்துவோரும் நம் நினைவில் வருகின்றனர்.

வகுப்பறை ஜனநாயகம் பற்றி பேசுகிறது கே. எஸ் கனகராஜின் கட்டுரை , உயர் கல்வி , கல்லூரி குறித்து பேசுகிறது கல்விக்கு ஏது வேலி ? என்கிற இரா. முரளியின் கட்டுரை .

மதுக்கூர் இராமலிங்கம் எழுதிய கானல் நீராகுமோ கல்வி ?என்ற கட்டுரை , சமூகத்தின் கல்வித் தாகம் அதிகரித்திருந்தாலும் கானல் நீராகத் தான் கல்வி இருந்து வருகிறது என்பதைப் பதிவு செய்துள்ளது.

ரமணன் தந்துள்ள பாடறியேன் ..படிப் பறியேன் , பள்ளிக் கூடம் தானறியேன் என்ற கட்டுரை ஆய்வுகளுடன் புள்ளி விபரங்களின் வழியே கல்வி நிதி நகர , கிராமங்களில் எவ்வாறு ? மாநில அரசும் மத்திய அரசும் எவ்வளவு கல்விக்காக செலவழிக்கிறது ? தனியாரின் செலவு எவ்வளவு ?பாலினப் பிரிப்பு என விவரங்களுடன் தருகிறது.

ஒளிபடைத்த கண் என்ற தலைப்பில் அமர்த்தியா சென் தந்துள்ள கட்டுரை வேறு மாதிரியான சிந்தனையை நமக்குக் கொடுக்கிறது. நம் இந்தியக் குழந்தைகளது சாப்பாடு குறைவு , ஊட்டக் குறைவு பிரச்சனைகளைக் கூறி , இந்தியாவில் தான் பள்ளிக்குச் செல்லாத குழந்தைகள் அதிகம் என்கிறார். நாம் தரமான பள்ளிகளை இன்னும் அதிகம் திறக்க வேண்டும்.  பெண் குழந்தைகளைப் படிக்க வைப்பதில் பெற்றோரின் நிலையும் அரசின் நிலையும் என்ன என்பதை PROBE (PUBLIC REPORT of BASIC EDUCATION) அறிக்கை கொண்டு  விளக்குகிறார். கழிப்பறை வசதிகள் இல்லாதது தான் முதல் குறையாக உள்ளது.

டியூஷன் வகுப்புகள் பள்ளிக் கல்வியின் செயல்திறன் (efficience) எவ்வளவு மோசமாகி வருவதற்கும் பொருளாதாரக்கோணத்தின் ஒரு பார்வையில் விளக்கும் இவர் , பள்ளிக் கல்வி எதற்காக ? என்ற கேள்விக்கான பல விஷயங்களை அடையாளம் காட்டுகிறார்.
சமூக வாய்ப்பை உருவாக்கித் தரும் பள்ளியின் அனுபவத்தை மிக அழகாகத் தரும் இக்கட்டுரை  2004 இல் எழுதப்பட்டு அருணா ரத்தினம் Aruna Rathnam மொழி பெயர்த்து இருப்பது சிறப்பு , ஆனால் இங்கு பேசப்படும் பிரச்சனைகள் 15 வருடங்கள் கடந்தும் முடிவுக்கு வராமல் இருப்பது கண்டு அரசின் மீது
சீற்றம் கொள்ள வழி வகுக்கிறது.

பொன்னுராஜ்.வி என்பவர் ஆசிரியர்களுக்கான சமூக அங்கீகாரம் பற்றி சில அலசல்களையும் முதலாளித்துவ சமூகத்தின் கல்வி , என்று இன்னும் சில உபதலைப்புகளில்  வரலாற்றுப் பார்வையைத் தருகிறார்.

சாலை செல்வம் தந்துள்ள பெண் கல்வி என்ற தலைப்பிலான கட்டுரையில்  பிரச்சனையின் வடிவங்களில் வித்தியாசங்களைக் காட்டுகிறார். தலித் பெண் குழந்தையாயிருந்தால் , மாற்றுத் திறனுள்ள பெண் குழந்தை , பொருளாதாரத்தில்  பின் தங்கிய விட்டுப் பெண் குழந்தை , இப்படி பலவற்றிலும் பாகுபாடு உள்ளது. முற்போக்கான சிந்தனை முறையைக் கொண்ட பள்ளிகளும் கல்வி முறையும் வீடுகளும் அரிதாகவே உள்ளன  என்ற அவரது கருத்து நாம் எதை நோக்கிப் பயணிக்க வேண்டும் என்பதைக் காட்டுகிறது .

தொடர்ந்து கல்வி உரிமைச் சட்டம் வரமா ? சாபமா? மார்க்ஸ் .அ தந்துள்ளதும் , நூலகம் பற்றிய ஐ.ராமமூர்த்தி கட்டுரையும் , தனியார் கல்வி தரமானது அல்ல என்ற பேராசிரியர் கல்யாணியின் நேர்காணல் கட்டுரையும் கூட வேறு வேறு தளத்திற்கு நம்மை அழைத்துச்  செல்கின்றன.

ஆசிரியர்கள் வாசிப்புப் பழக்கமற்றிருப்பதால்  என்ன நிலை , உலகளவில் ஆசிரியர்கள் வாசிக்க வேண்டிய சில புத்தகங்கள் என்ற விதத்தில் ஆசிரியர்களை விரல் நீட்டி விமர்சிப்பதை இன்றைய தமிழக ஆசிரியர்கள் ஏற்றுக் கொண்டே ஆகவேண்டும்.

ஆரோக்கிய மற்ற அரசுப் பள்ளிகளின் அவலத்தை கழிப்பறை காணாத கல்விக் கூடங்கள் என்ற தலைப்பில்  சாடுகிறார் பரமேசுவரி , இன்றைய நிலைகளும் அதுவாகவே இருப்பது அவமானம் ,

எழுத்துலகில் பெரிய முரணை உருவாக்கியவராக  சூழலை எதிர் கொண்ட பெருமாள் முருகன் சமச்சீர் கல்வி நீடிக்குமா என்ற தலைப்பில் தந்த கட்டுரை அடித்தட்டு பிரிவிலிருந்து கல்வி கற்க வரும் குழந்தைகளை மனதில் வைக்கக் கூறுவதோடு கல்விக்க ட்டணங்கள் பற்றி ஒரு பெரிய விவாதம் வைக்கிறார் .

இறுதியாக கல்விப் போராட்டம் என்பதைக் கருத்தியல் போராகப் புரிந்து கொள்ள வேண்டும். அரசியல் போராட்டத்தின் ஒரு அங்கமாகக் கல்வியையும் … இணைத்து அணுக வேண்டும் , கல்வி ஜனநாயக உரிமை என தனது கட்டுரையை முடிக்கிறார் , தொகுப்பாளர் ச.பாலகிருஷ்ணன்.

கல்வித் தளம் சார்ந்து பணிபுரியும் யாரும் கட்டாயம் படிக்க வேண்டிய ஒரு நல்ல புத்தகம் இது.கல்வி  வரலாற்றை அறிய  சுருக்கமான நூலாகவும் இதைக் கொள்ளலாம்.

பெருமூச்சு வாங்கி , உடனடியாக நம்மை அடுத்த பணிகளை  நோக்கி முடுக்குகிறது இந்த நூல்.

வாசிப்பு தொடரும்
உமா

No comments:

Post a Comment