Friday, 5 April 2019

சினிமா விமர்சனம் - சூப்பர் டீலக்ஸ்

#Super_Delux

பேசப்பட வேண்டிய திரைப்படம் .... எத்தனையோ புத்தகங்களின் வழியே சமூகத்திற்குக் கடத்தப்பட வேண்டிய கருத்துகளை பளிச்சென புரியும்படி அடித்தட்டு மக்களும் எளிதில் உணர்ந்து கொள்ளும் வகையில் திரைப்படமாகத் தந்திருக்கும் இயக்குநரை வாழ்த்த வேண்டும்.

பதின் பருவ விடலைப் பருவ பையன்களுக்கு மத்தியில் உடலுறவு குறித்த எதிர்பார்ப்புகள் வீட்டில் பெற்றோர் இல்லாத நேரத்தில் CD வாங்கிப் பார்த்து தீர்த்துக் கொள்ளும் சமூகமாகத் தான் இந்த சமூகம் இருக்கிறது.

(இது குறித்து சக ஆசிரியர்களிடம் பேசுகையில் அவர்களது பகிர்வுகள் நம்மை திடுக்கிட வைக்கின்றன. 11 வருடம் முன்பு தாம்பரம் பகுதி மெட்ரிக் பள்ளியில் இது போன்ற நீலத் திரைப்படம் என வழக்கில் உள்ள CDக்கள் 500க்கும் மேல் ஒரே நாளில் பிடிபட்டுள்ளது. விசாரித்ததில் அவரவர் அம்மாக்கள் வேலைக்குச் சென்ற பிறகு மாணவர்கள் 4 /5 பேர் சேர்ந்து ஒருவரது வீட்டில் இப்படங்களைப் பார்ப்பது கண்டறியப்படுகிறது. ஏறத்தாழ 11 வருடங்கள் கழித்து சினிமாவில் இதே காட்சி இடம் பெறுகிறது )

அது போன்று தவறுகின்ற குழந்தைகள் சமூக விரோத செயல்களுக்காக பயன்படுத்திக் கொள்ளும் கூட்டம் கழுகுகளாய் நம் சமூகத்தில் சுற்றிக் கொண்டு இருப்பதும் எதார்த்தமாகத் திரைக் கதையாக்கப்பட்டிருக்கு.

அப்போ நமது கல்வி முறையின் சறுக்கல்கள் அறிவியலை இதுவரை சரியாக போதிக்காதது தான் எனலாமா ?

ஒரு புறம் மதத்தின் பேரில் கடவுளின் பேரில் வெறி பிடித்து அலையும் மனிதர்கள் உயிர் போகும் தருவாயில் கூட மருத்துவத்தை விஞ்ஞானத்தை நம்பாமல்  கடவுள் சிலை முன்னே மன்றாடும் பழக்கம் , அவர்களுக்கு யார் புரிய வைப்பது ? கடவுள் மீது நம்பிக்கை வைப்பது வேறு , மூடநம்பிக்கையாக காயம் பட்ட இடத்திலிருந்து கொட்டும் ரத்தத்தை கடவுள் நிறுத்துவார் அற்புதங்கள் படைப்பார் என அவர் தலையை உருட்டும் கூட்டம் , காலம் காலமாக சிந்தனையை மாற்ற விடாமல் குருட்டு நம்பிக்கை வைத்திருக்கும் மக்களின்  ஒரு பிரிவினரை உணர்த்தி அது வெறும் கல் தான் எனப் புரிய வைக்க முயன்றிருக்கிறதும் அதற்கான நடிப்பை மிஷ்கின் வெகு தத்ரூபமாக செய்திருப்பதும் க்ளாசிக் , இதுவும் சமூகத்தை அப்படியே காட்டுகிறது  .

இந்த வேளையில்  காயம் பட்ட சிறுவனை கடவுளின் நம்பிக்கையிலிருந்து காப்பாற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அரசியல்வாதி ஒருவரை (கவுன்சிலர் ) துணைக்கழைக்கும்  வேலையில்  , அவரது முயற்சியை தொடர்ந்து வீடியோ வாக்கி இணையத்தில் பகிர ஒரு உதவியாள் ... என்னங்கடா நடக்குது ? வரலாறு முக்கியமில்ல , வீடியோ எடுப்பது இன்றைய நடைமுறை தானே .. அதுவும் பதிவு செய்யப்பட ,

திருநங்கைகளுக்கு நமது சமூகம் பல வழிகளில் தரும் அழுத்தங்கள் , உறவுகளின் புறக்கணிப்பு , சாடைப் பேச்சுகள் , பலவித மனிதர்களும் அவர்களை நடத்தும் வேதனை மிகு அணுகுமுறைகள் , காவல் துறையின் அதிகாரிகள் அளவில் அவர்களுக்கு இழைக்கப்படும் பாலியல் தொல்லைகள் , பள்ளிகளில் சிறு மாணவர்கள் பார்வையில் அவர்களை 9 என்பதும் , உஸ் என்று     கிண்டல் செய்வதும் மிக மிக எதார்த்தமாகக் காட்டப்பட்டுள்ளது.

ஒரு இளம் கணவன் மனைவிக்கிடையில் இருக்கும் எதார்த்த வாழ்க்கை , முன்பே காதலித்த கல்லூரி நண்பனுடன் பேசியதால் அவனது கஷ்டத்தைப் போக்கி மன அழுத்தத்தைப் போக்கும் எண்ணத்தில் வீட்டிற்கு அழைக்க , உடலுறவு நிகழ்ந்து விட அதை இயல்பாக ஒத்துக் கொண்டு மன்னிப்பு கேட்கும் பெண்ணின் உண்மை நிலை , இறந்து போகிறான் காதலன் அதை கணவன் மனைவியுமாக இணைந்து அப்புறப்படுத்த முயலும் போது ,  கண்காணித்து சாட்சி உருவாக்கி அதைக் கொண்டே  அந்தத் தம்பதியரை மிரட்டி மனைவியை தன்னுடன் அனுப்ப கணவனையே ஏவி விடும் காவல் தெய்வம் (போலீஸ்) ...அப்பப்பா .... எத்தனை விதமான புரையோடிய சமூகமாய் இருக்க ..... அதையும் அனுசரித்துப் போகும் மனநிலை .

நீ ஆம்பளையா இரு இல்லாட்டி பொம்பளயா இரு , எப்படி வேணா இரு ஆனா ... எங்க கூட இருந்து தொலச்சுட்டுப் போயேன்னு ஒரு 5 வயசு பையன் , அப்பா பாசத்தால்  பேசும் வசனங்கள் நெகிழ வைக்குது.

டாக்டர் , டிரைவர் மாதிரி விபச்சார படங்களில் நடிப்பதும் ஒரு தொழில் தான் , லட்சக்கணக்கான பேர் அதைப் பார்க்கும் நிலையில் இருக்க , அவர்களைக் கேள்விக்குள்ளாக்காமல் நடிக்கும் என்னை அசிங்கப் படுத்துவது எந்த விதத்தில் சரி என சமூகத்தை அறைகிறார் ரம்யா .

நகம் வெட்டிக்கிற மாதிரி , முடி வெட்டிக்கிற மாதிரி , என் உடலை மாத்திக்கிட்டு எனக்குப் புடிச்ச மாதிரி வாழறேன் என்ற திருநங்கையாக வரும்  விஜய் சேதுபதியிடம், நீ சொல்வது நியாயம் தான் , ஆனா இங்க  நியாயம் வேற , நடமுறை வேற ன்னு சம்மட்டில அடிப்பது போல பூக்கார அம்மா சொல்வது செம.

எல்லாமே தற்செயலாத்தான்  நடக்குது.  நம்ம கிட்ட நிறைய கற்பிதங்கள் இருக்கு அதை மாற்றி மகிழ்ச்சியா வாழுங்க என்று ஒரு மெஸேஜ் சொல்ல வராங்க.

அதோடு ....... சமூக எதார்த்தத்தைப் பதிவு செய்கிற இப்படம் மன உணர்வுகளை அடுக்கடுக்காகப் பதிவு செய்கிறது .ஒரு காமெடி டிராக் இல்ல , பாட்டு இல்ல , மியூசிக் இல்ல .... ஆனா அப்படி ஒரு அட்டகாச நிறைவைத் தரும் படமாக இருக்கு.

#உமா

வாசிப்பை நேசிப்போம் - புனைவும் நினைவும்

#புனைவும்_நினைவும்   #நூல்

வெட்ட வெளியில் ஒரு கரிசல் கிராமம்

மிகச் சமீபத்தில் பதிப்பிக்கப்பட்ட (2018) நூல் ... நூலாசிரியர் சமயவேல் Samayavel Karuppasamy தன் எழுத்துகள் வழியாக அவரது ஊரின் பழக்க வழக்கம் , மக்களின் வாழ்வியல் நெறி , வழிமுறைகள் , சமயம் , வழிபாடு , பண்பாடு , மதம் , சாதி உள்ளிட்ட செய்திகள் , அவர்களின் பொழுது போக்கு என அத்தனையையும் கண் முன்னே கொண்டு வருகிறார்.

இரு பகுதிகளாக எழுதப்பட்டுள்ள நூல் 135 பக்கங்களை உள்ளடக்கியுள்ளது. முதல் பகுதி முழுவதும் கலாச்சார எச்சங்கள் என்ற தலைப்பில் மேற் சொன்ன அத்தனையையும் தருகின்ற இவர் இரண்டாம் பகுதியில் ஊரில் எனது மனிதர்கள் என்ற தலைப்பில் ஒரு 12 மனிதர்களைப் பற்றி குறிப்பிடுகிறார்.

பாரதியின் எட்டயபுரத்திற்கு அருகில் இருக்கும் ஒரு கரிசல் கிராமமான வெம்பூர் தான் நூலாசிரியரின்  கிராமம். பல நண்பர்களின் நினைவூட்டுதலாலும் ஒரு நண்பரின் தூண்டுதலாலும் இதை எழுதியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்  சமயவேல்.

துள்ளு மாவும் துயர நெருப்பும் அத்யாயம் என்னை எனது  வளர்ந்த நாட்களுக்கும் , எனது ஊருக்கும் அழைத்துச் சென்று விட்டது. இந்த ஒரு அத்யாயம் மட்டுமல்ல மொத்த புத்தகமும் வாசிக்க வாசிக்க என்னை இன்னொரு நினைவுக்கு அழைத்துச் செல்கிறது ,

பண்டிகைகளும் விழாக்களும் நம் இளமைக்கால நினைவுகளும் எல்லோருக்கும் பசுமரத்து ஆணியாகப் பதிந்து இருக்கும் , அந்தப் பசுமையை தொட்டு உணர்ந்து சுவாசித்து ரம்மியமாக ரசிக்க வைத்து நெகிழ வைக்கிறது துள்ளு மாவு எழுத்துகள் . கஞ்சி ஊற்றும் பண்டிகை எங்கு ஆரம்பித்து எப்படி மக்களிடையே உறவுப் பாலம் அமைத்து ஒற்றுமையை  வலுக்கச் செய்தது பற்றிய பகிர்வுகள் சிறப்பாக இருக்கின்றது. பல துவையல்களின்  பெயரில் ஏரோப்ளேன் துவையல் தான் நான் கேள்விப் படாத ஒன்று.

உருமித் திரியும் தற்கொகொலைகள் பக்கங்களைப் படிக்கும் போது இன்றைய பொள்ளாச்சி , கோவை குழந்தைகளின் பாலியல் வன்கொடுமைகள் மனதில் வந்து போகின்றன. இப்படி ஒவ்வொரு கிராமங்களிலும் ஆண்களின் பாலியல் மற்றும் உளவியல் பிரச்சனைகளுக்கும் பெண்களையே பலி கொடுத்துக் கொண்டுள்ளோம்  என்பதை மீண்டும் மீண்டும் நினைவூட்டுவது போலவே உள்ளது இந்த உருமியின் துயரம் .

கடவுள் பற்றிய பொய் நம்பிக்கைகள் உதிரத் தொடங்கிய பஞ்ச காலம் பற்றி குறிப்பிட்டுள்ள காலத்தைத் துரத்திய மனிதர்களை வாசிக்கும் போது எனது அம்மாவும் பாட்டியும் அடிக்கடி சொல்லி என் மனதில் பதிந்திருந்த பஞ்ச காலம் தான்  நினைவுக்கு வந்தது.

கண்மாய்களைப் பற்றிய வாசிப்பில் கூட எனது இளமைக் காலம் , ஏற்றம் இரைக்கும் கிணறு , வாய்க்கால் சலசலப்பு
, ஊரில் மழைக்காலத்தில் கேட்கும் தவளைச் சத்தம் இவைதான் என்னை ஆட்கொண்டது.

கரம்பை யுத்தம் முழுவதும் , கரம்பை மண் பற்றிய விளக்கமும் அது எவ்வாறு தோட்டங்களில் கலந்து வெள்ளாமையை மீட்டெடுக்கிறது என்பதையும் , அது திருடப்படுவதன் சம்பவங்களும் தான் வருகின்றன. கட்சிகளும் ஜாதிகளும் பின்னிப் பிணைந்த நமது மக்களாட்சியில் , ஜாதிகள் மக்களாட்சி முறையின் கழுத்தை அறுத்துக் கொண்டிருப்பதை நிகழ்ச்சிகளின் பதிவுகளால் நம்மை வந்தடையச் செய்கிறார் நூலாசிரியர்.

1972 இலேயே தன் ஊரில் பாரதி இளைஞர் மன்றத்தை உருவாக்கி , பாரதி படிப்பகம் ஏற்படுத்தியதையும்  கண்மாய்க்கு அணை வழியே நீர் கொண்டு வர அரசு செலவிட்ட தொகை சரியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதா என ஆய்வு செய்து , பிரச்சனைகளைக் களைய 500க்கும் மேற்பட்ட மக்களிடம் கையெழுத்து வாங்கி ஆட்சியரை சந்தித்து செய்த பணிகள் இவரை ஒரு சமூக செயல்பாட்டாளராக ஏறக்குறைய 50 ஆண்டுகளுக்கு முன்பே அடையாளப்படுத்துகிறது. சிட்டிசன் திரைப்படத்தில் அத்திப்பட்டு அணை காணாமல் போன கதையை என் மனம் இதோடு இணைத்துப் பார்த்தது.

கனவின் இருள் பெய்யும் பாவைக் கூத்து
வாசிக்க வாசிக்க என் ஜலகை ஊரில் தை மாதம் நடக்கும் கூத்துகள் நினைவுக்கு வருவதோடு , 10 மணிக்கு ஆரம்பிக்கும் கூத்துக்கு சாக்குப் பையோடு பக்கத்து வீட்டு பார்வதி அக்காவுடன் போய் நடுஜாமம் வரை சந்தைக் கடை மணளல் உட்கார்ந்து பார்த்து வரும் நாட்கள் கண்களின் வழியே மனதை ஈரப்படுத்தியது.

இங்கு கீதாரி ,பாவைக் கூத்துக் குடும்பம் , நிகழ்த்து கலைகள் இவற்றை சுவாரஸ்யமாகக் கூறும் ஆசிரியர் ஜடாயு போர் பற்றி விரிவாகக் கூறியுள்ளார். கலாச்சாரத்தின் நுண்ணிய வேர்களை அறியாதவர்களால்  தான், பாவைகள் தீப்பிடித்து எரியும் காட்சிகளைப் படமாக்க முடியும் என்று வருத்தப் படுகிறார் தசாவாதாரக் கதையின் காட்சிகளைக் கூறி வருந்துகிறார் .

இப்படியாக சேத்தாண்டி ஊர்வலம் , கோயிந்தா கோய்ந்தா , மனசுக்குள் மத்தாப்பு கொளுத்தும் பெரிய கார்த்திகை , எங்க ஊர் வெம்பூர் , ஊர் நீங்குதல் என்பதான மேலும் சில தலைப்புகளில்  எழுதியுள்ளார். சாதிப் பிரச்சனை , இரட்டை டம்ளர் முறை பற்றி கூட பேசுகிறது நூல். அதன் தொடர்ச்சியாக 
25 வருடத்திற்கு முன் இன்றுள்ள எடப்பாடி ஊரின் 10 கி.மீ தூரத்தில் கட்டி நாயக்கன்பட்டி என்ற சிறு கிராமத்து அரசுப் பள்ளி மாணவி ஒருவருக்கு கண் பார்வை போனது பற்றிய வரலாறு உங்களுக்கு நினைவிருக்கலாம்  , அங்கே பிரச்சனையே இந்த இரட்டை டம்ளர் முறை தான்.

ஊரின் வரைபடமும் புத்தகத்தின் 96 , 97 ஆம் பக்கங்களில் தரப்பட்டு இரண்டாம் பாகத்தில் எனது மனிதர்கள் என்ற தலைப்பில் அவரது நினைவில் நிற்கும் மறக்க முடியாத  மனிதர்களுடனான அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.

படிக்கும் ஒவ்வொருவருக்கும்  மனசை இலேசாக்க அவரவர் வாழ்க்கை , ஊர் ,மக்கள் என அழைத்துச் செல்லும் நல்ல தொரு படைப்பு .இதன் அட்டைப்படம் நம்மை மெதுவாக தொட்டு ரசிக்க வைக்கிறது.

இதன் ஆசிரியர் சமயவேல் அவர்களைக்
கேட்க, நூல் தனைஅடுத்த நாளே அனுப்பி வைத்தார், அன்பும் நன்றியும் தங்களுக்கு .

வாசிப்பு தொடரும்
உமா

வாசிப்பை நேசிப்போம் - ரபேல் ஊழல்

#நாட்டை_உலுக்கும்_ரபேல்பேர_ஊழல்

#நூல்விமர்சனம்

திரும்பிய பக்கம் எல்லாம் ஊழல் எனப் புலம்பும் நம்மைப் போன்ற சாதாரண குடிமக்களுக்கு இந்தப் புத்தகத்தின் செய்திகள் அனைத்தும் பேரதிர்ச்சியாக இருக்கிறது.  ஆம் , நம்மைச் சுற்றி சின்ன சின்ன விஷயங்கள் ( உ. ம் ) ரேஷன் கடை ஊழல் , அரசு கட்டிடம் கட்டுவதில் ஊழல் , சாலை போடுவதில் ஊழல் என இவற்றையே கண்டு பொங்கி அடுங்கும் மனோபாவம் , புலம்பும் மனோபாவம் , கண்டும் காணாமல் போகும் மனோபாவம் ,நமக்கென்ன என்ற மனோபாவம் கொண்டு அணுகும் போது இத்தனை லட்சம் கோடிகளை ஊழலில் பார்த்து அது பற்றி கடந்து போகும் மனோபாவம் கொண்ட கைப்பாவை மக்களாகவே ஆக்கப்பட்டிருக்கிறார்கள்  மக்கள்.

என்றால் அப்படியே விட்டு விடுவதா ? கூடாது என்று தான் 48 பக்கங்களை ஒரு பெரும் போராட்ட நாட்களோடு நேற்று இரவு இப்புத்தகத்தை வெளியிட்டது பாரதி புத்தகாலயம். எஸ்.விஜயன் எழுதி ரூ 15க்கு விற்பனைக்கு வந்துள்ளது .

இதில் வருவதெல்லாம் என்னென்ன ? பாதுகாப்பு அமைச்சகம் , விமான உற்பத்தி , இராணுவத் தளவாடம் , அம்பானி , போர் விமானம் , தணிக்கை அமைப்பு , உச்ச நீதிமன்றம் , நிபுணர் குழு
தேர்தல் பத்திரம் (Electoral Bond)
இத்யாதி இத்யாதி ....

விமானத்தை அண்ணாந்து பார்த்து பெருமூச்சு விடும் மக்களே பெரும்பான்மையானவர் நமது நாட்டில் , இவர்களை ஏமாற்றி விடலாம் என்று தான் மக்களைக் காக்க வேண்டிய வேந்தர் கூட்டம் இப்படி வில்லத்தனமான வேலை எல்லாம் தைரியமா செய்யுது.

இப்படிப் பாருங்கள் ..இந்த ரபேல் ஊழலை ஒப்பிடும் போது மினியேச்சர் ஊழல் விவகாரங்களை உள்ளடக்கிய சமூகத்தில் தான் நாம் வாழ்கிறோம். என்றாவது இந்த மினியேச்சர் ஊழல்களைப் புறந்தள்ளாமல் எதிர்க்கத் துணிந்து கேள்வி கேட்கிறோமா ? நமது ஒவ்வொருவரது பணி சார்ந்த துறையிலும் இது போன்ற ஊழல்களை சமீப காலங்களில் ஏராளமாக சந்தித்து வருகிறோம்.
உதாரணம் : கல்வித்துறை  ... இதில் கூட கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் 38 கோடி ஊழல் என்று பல தொலைக்காட்சி , இதழ்களில் தொடர்ந்து செய்தி வந்தது. அது உண்மையா ? பொய்யா ? அல்லது அதன் முடிவு என்ன எதுவுமே பேசப்பட வில்லை. இப்படி சின்ன ஒரு இடத்தில்  குறைவான  பணப்புழக்கம் உள்ள இடத்திலேயே இத்தனை கோடிகள் ஊழல் , அதுவும் மக்களின் வரிப்பணம் , எதுவுமே கண்டு கொள்ள ஆளில்லாத ஒரு சமூகம் , அப்படி என்றால்  பெரிய நாடு , கைக்கு எட்டாத தூரம்காதுக்கு எட்டாத செய்திகள் மக்கள் ஏமாற்றப்பட்டு இவ்வளவு லட்சம்கோடிகளின் ஊழல் ..

டென்டர் வாங்கி ஒரு ஒப்பந்தம் போடுவது தான் முறை எனத் தெரிந்தும்  அனைத்தையும் ஒதுக்கி , ஆறு நிறுவனங்கள் சமர்ப்பித்த தொழில்நுட்ப
விபரக்குறிப்புகளின் அடிப்படையில் அவற்றை மதிப்பீடு செய்யும்
பணி கண்துடைப்பாக
நடைபெற்று ,தொழில்நுட்ப பரிசீலனையில் ரசியாவின் மிக்-35
மட்டும்தான் விமானப்படை முடிவு செய்திருந்த அனைத்துத்
தேவைகளையும் நிறைவேற்றும் விதமாக இருந்த போதிலும் , ரஷ்யா
பாரம்பரியமாக  தேவையான ராணுவதளவாடங்களை இந்தியாவிற்கு தருவதில்  முதல் இடம் வகிக்கும் நாடாக இருந்த போதும் அதைத் தவிர்த்து பிரெஞ்சு நாட்டின் தசால்ட் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது முதல் , பல பல முடிச்சுகள் ..

ஏறத்தாழ இராணுவத் தளவாட உற்பத்திக் கொள்கையில் 30 ஆண்டுகளுக்கு மேலாக ஊழல் நடப்பதைப் பதிவு செய்கிறது இப்புத்தகம் , அப்போ  தலைமுறை தலைமுறையா
மக்கள் ஏமாந்து வருவது பெரும் அவலமில்லையா ?

கல்வி எதுக்கு ? நியாயம் ? மக்களாட்சி ? நீதிமன்றம் ? அரசியல் சாசனச் சட்டம் ?
இதுக்கெல்லாம் என்ன அர்த்தம் ?
அப்புறம் எதுக்கு நீதி நூல்கள் எல்லாம் சொல்லித் தறீங்க ?  யாரை ஏமாத்தறீங்க ?

சட்டப் பூர்வமா ஊழலை அல்லவா இந்த அரசு செய்துள்ளது ?இந்திய நீதித்துறை வரலாற்றில் இது ஒரு தவறான
முன்னுதாரணமாகி விட்டதை நாம் எப்படி அனுமதிப்பது ?

விசாரணைக் கமிஷன்களிலிருந்தும் வழக்கிலிருந்தும் மாட்டிக்
கொள்ளாமல் விஞ்ஞான பூர்வமாக செய்யப்பட்டு வந்த ஊழலை எப்படி ஏற்றுக் கொள்வது ?

விழிப்புடன் இருப்போம் இனிவரும் நாட்களிலாவது...

குறைந்தபட்சம் நிகழ்கால வரலாற்றை சரியாகக் குழந்தைகளிடம் கொண்டு செல்ல வாவது ஆசிரியர்கள் இந்தப் புத்தகத்தைக் கட்டாயம் உடனடியாகப் படிக்க வேண்டும். வரலாறு தவறாக எழுதப்படாமல் இருக்கவும்   கவனமாக வரும் நாட்களை எதிர் கொள்ள வேண்டும்

உமா

வாசிப்பை நேசிப்போம் - கல்வி

#நூல்_விமர்சனம் :

#எல்லோருக்குமான_கல்வி_எங்கே?

இது ஒரு பெரிய நூல் இல்லை  , 30 பக்கங்கள் கொண்ட கல்வி சாசனம் என்று கூறலாம். பக்கங்கள் அனைத்தும் எழுத்துகளால் நிரப்பப்படவில்லை , அரசின் மெத்தனத்தால் விளிம்பு நிலை மக்கள் இழக்கும் கல்விக்கான வெளியும் , மேட்டிமை வர்க்கக் குழந்தைகளும் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்வதும் என்று கல்வியின் தளத்தில் உள்ள சமமற்ற தன்மையும் அதன் மோசமான விளைவுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது .

கோபங்கள் நிறைந்து கடுமையான சொற்களால் சாடுவதும் படிப்பவர் நமது ஜனநாயக அமைப்பு சீர்கெட்ட கல்வியால் புரையோடி இருப்பதை சுட்டிக் காட்டுவதுமாக அடுத்தடுத்த வரிகள் நமக்குள் உணர்ச்சிவசப்பட வைத்து சரியில்லாத கல்வியை சகித்து வாழாதே மனிதா என சாட்டையடி தருகிறது.

1966 இலேயே கோத்தாரிக்கல்விக் குழு சொன்ன வாக்கியம் - இந்தியாவின் தலைவிதி அதன் வகுப்பறைகளில் தீர்மானிக்கப்படுகிறது என்று ஆரம்பிக்கும்  இந்நூல் , ஜனநாயக இந்தியா  உருவாக வேண்டும் என்ற கருத்துடன் முடிகிறது.

கல்வி என்றால் என்ன என்பதற்கான பல உயிருள்ள வாசகங்களும் தரப்பட்டுள்ள இந்நூலில் , கல்விக்கென்று வரி வசூலித்துக் கொண்டு அதை விலை கொடுத்துப் பெற வைப்பது சமூகக் குற்றம் என்றும் அழுத்தமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது  .

ஐக்கிய நாடுகள் சபையின் கல்வித் தர வரிசையில் இந்தியாவின் இடம் 2013 இல் 131/188 ம் , 2015 இல் 145/191 ம் , 2018 இல் 130/188 என்றும் தரப்பட்டு நம்மை திடுக்கிட வைக்கிறது.

கொடிய ஏற்றத் தாழ்வுகள் கொண்ட கல்வி தான் இந்தியாவின் தோல்விக்குக்  காரணம் என்பதை ஆதாரங்களுடன் முன் வைக்கிறது இந்நூல். அதிலும் இந்தியச் சாதியச் சமுதாயத்தின் அடித்தட்டினரான தலித்துகள் , பழங்குடியினர் , நிலமற்ற பிற்பட்ட ஏழையினர் மற்றும் சில மத சிறுபான்மையினரே பெரும்பாலும்   பாதிக்கப்படுபவர்கள் என்கிறது இந்த நூல்.

மேலும்இந்தியக் கல்வியின் வர்க்க - சாதியத் தன்மைக்குக் காரணம் தனியார்மயமாதலும் வணிகமயமாதலும் தான். அரசு தன் தார்மீக அடிப்படைப் பொறுப்பை உதறியதே என்றும் பதிவு செய்கிறது.

வளர்ந்த நாடுகள் அனைத்தும் ஒரே வகையான கல்வி அமைப்பையே பெற்றுள்ளது , அது பொதுப்பள்ளி அமைப்பு என்ற அருகமைப் பள்ளி முறையே , இத்தனைக்கும் முதலாளித்துவ நாடுகளே என்றாலும் மக்கள் நல அரசுகள் ( Welfare States ) அவை .

1.அனைவருக்கும் கல்வி ,
2. இலவசக் கல்வி ,
3.கல்விக்கான நிதி ,
4.அருகமை -பொதுப்பள்ளி
5. பள்ளியின் தரம் உறுதி செய்யப்படல்
6. கல்வியின் உள்ளடக்கம்
7. தாய் மொழி வழிக் கல்வி
8 .ஆசிரியர் பயிற்சி
9. மதிப்பிட்டு முறைகள்
10. கல்வியின் நிர்வாக அமைப்பு
11. பட்டியலினக் குழந்தைகளுக்குச் சிறப்பு ஏற்பாடுகள் ,
12. பழங்குடியினர் குழந்தைகள்

என 12 தலைப்புகளில் நடைமுறை எதார்த்தம் என்ன , கல்வி உரிமைச் சட்டம் என்ன சொல்கிறது என மிக விளக்கமாகவும் அரசும் கல்வித்துறையும்  இவற்றை எவ்வாறு அணுக வேண்டும்  என்று மிக அற்புதமாகப் பதிவு செய்கிறது நூல்.

மேலும் இவற்றில் அரசு உடனடியாக செய்ய வேண்டிய செயல் திட்டமாக இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 , கல்வி உரிமைச் சட்டத்தில் புதிய வதிகள் உருவாக்கம் மற்றும் கல்விக்கான நிதி இவற்றை மட்டுமே முன்னிலைப்படுத்தியும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நூல் முழுவதும் 13 படங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் 11 படங்கள் ..டேஞ்சர்  ஸ்கூல் என்ற புத்தககத்தின் கருத்தியல் படங்கள் , அவை ஒவ்வொன்றும் அப்பட்டமாக நம் கல்வி முறையின் அவலத்தைக் கூறுகிறது.படங்களே கூட நம்மோடு  நிறையப் பேசுகின்றன .

இப்புத்தகம் கல்விக்கான கொள்கை அறிக்கையாக பள்ளிக் கல்விப் பாதுகாப்பு இயக்கத்தால் உருவாக்கப்பட்டது , இதன் எழுத்துக்கான உள்ளடக்கம் பெரும் பகுதி அமைப்பின் தலைவர் Dr  Vasanthi Devi அவர்களுடையது , குழுவின் செயலர்  Krishnamoorthy Jayaraman வழிகாட்டி Dr SSR, மற்றும் மாநிலக் குழுவின் உறுப்பினர் சிலரது ஆலோசனைகளையும் ஏற்று எழுத்துருவாக்கம் செழுமைப்படுத்தப்பட்டது.

இதன்  நூல் வடிவமைப்பு முழுவதும் பேரா . ச. மாடசாமி அவர்களது தலைமையில்  , பாரதி புத்தகாலயத்தால் Puthagam Pesuthu
இணைந்து செய்யப்பட்டுள்ளது. ஓவியங்களின் தேர்வு  , மற்றும் 2 ஓவியங்கள் , அட்டைப்படத் தேர்வு ( மதுரை மு.தென்னவன் ஜனநாயக வகுப்பறை இவரது பள்ளிக் குழந்தைகள் ) இவற்றின் உதவி  கலகல வகுப்பறை
சிவா மேற்கொண்டுள்ளார். புத்தகம் ஒன்றின் விலை ரூ 10 .

கடந்த பிப்ரவரி (2019) 20  ஆம் தேதி தான் புத்தகம் சென்னை பத்திரிக்கையாளர் சந்திப்பில் கல்வியறிக்கையாக வெளியிடப்பட்டது. இதுவரை 4650 புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டு தமிழகம் முழுவதும் பரவலாக சென்று சேர்ந்துள்ளது என்பதும் , அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் இதைத் தங்கள்  தேர்தல் அறிக்கையில் சேர்த்துக் கொள்ள பள்ளிக் கல்விப்  பாதுகாப்பு இயக்கம்  வேண்டுகோள் விடுத்து நேரில் சந்தித்து ஒப்படைத்தது என்பதும் கூடுதல் தகவல்கள் .

நிகழ்கால கல்வி தளத்தில் பணிபுரிவோரும் பெற்றோரும் சமூகத்தின்பால் அக்கறை கொண்ட செயல்பாட்டாளர்கள் , அரசு அதிகாரிகள் , நல்ல அரசைத் தரக் காத்திருக்கும் அரசியல்வாதிகள் என அனைவரும் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய புத்தகம் . என்னைப் புத்தக விற்பனையாளராக மக்களிடையே பரிணமிக்க வழி ஏற்படுத்திய முதல் முக்கியப் புத்தகம் .

தொடரும்
உமா

Wednesday, 6 February 2019

காப்புரிமை

நவம்பர் 21 / 2018

         நவம்பர் மாத மாலை அது.....
ஒரு புயலின் அடை மழை நாள். மாலை 6 மணிக்கே கும்மிருட்டாய் இருந்தது எழும்பூர் சாலை , கன்னிமாரா நூலகத்தின் எதிரே இக் ஷா மையத்தில் நுழைந்தேன் , உள்ளே பிரளயன்  தோழர் இன்னும் சிலர் மட்டுமே இருந்தனர்.

அப்போதும் வெளியே சோ.... என மழை தொடர்ந்தது. தோழர் முத்து  , தோழர் ரோஹினி , தோழர் நக்கீரன் கோபால் , தீக்கதிர் புகைப்பட கலைஞர் ஜாஃபர் அண்ணா இவர்கள் மட்டுமே எனக்கு கொஞ்சம் அறிமுகமானவர்கள்  , கொஞ்சம் கொஞ்சமாக இவர்களிடம் பேச நேரம் கிடைத்தது.

நான் சில நண்பர்களை எதிர்பார்த்தும் சென்றிருந்தேன். அவர்களால் வர இயலவில்லை.

அது ஒரு மொழிபெயர்ப்பு புத்தக வெளியீடு விழா , கொஞ்ச நாட்கள் முன்னால் தான் கருத்துரிமை பற்றிய நிகழ்வுக்குச் சென்றிருந்தேன்.

அதையடுத்து ... காப்புரிமை என்ற சொல் தான் என்னை ஈர்த்திருந்தது ,
இந்த விழாவின் மையம் , காப்புரிமை கொத்தவால் என்ற இந் நூலின் மொழிபெயர்ப்பாளர் நாடகப் பிதாமகர் என்று கூறப்படும் பிரளயன் Pralayan Shanmugasundaram Chandrasekaran
என்பதாலேயும் அவரது அழைப்பிற்கிணங்க சென்றேன்.

இது ஒரு விழிப்புணர்வு நூல் , நாடகச் செயல்பாடுகளில் சிறந்த நடைமுறைகளுக்கான கையேடு , பிரித்வி தியேட்டர் குழுவின் முன்னெடுப்பாக ,
இந்தியா தியேட்டர் ஃபாரம் வெளியிட்டுள்ள நூல் .

இது பற்றி பேசிய பொழுது ஒவ்வொருவரும் அவரவர் சொந்த அனுபவத்தில் காப்புரிமை எவ்வாறு மற்றவரால் எல்லை மீறப்பட்டது என்று பகிர்ந்து கொண்டதிலிருந்து இந்நூலைப் புரிந்து கொள்ள ஆரம்பமாகப் பார்த்தேன் நான்.

தேவிகா என்பவர் ஆரம்பத்தில் ரொம்ப நேரம் இப்புத்தகத் தயாரிப்பு பற்றிய 10 வருட அனுபவத்தைப் பற்றி பேசினார்.

தான் எழுதியவற்றை எந்த மாற்றமும் இல்லாமல்  அனுமதி கேட்காமல் வேறு பத்திரிகையில் வந்த கதையைப் பகிர்ந்தார் மூத்த பத்திரிகையாளர் தோழர் குமரேசன் Kumaresan Asak.கார்ப்பரேட்டுகளுக்காக உருவாக்கப்பட்டது தான் என எனக்கான புரிதல்.

எனது முகநூல் பதிவுகள் பலரும் பெயர் இல்லாமல் , வேறு பெயரில் வெளியிடுகின்றனர். தீக்கதிரில் நான் எழுதிய அதே கட்டுரை தினமணியில் அப்படியே வந்தது ... என வேடிக்கையாகவும் வேதனையாகவும் .... Copy left ஆக வேண்டுமென்றால்  Copy right என்றால் என்ன என்பதை அறிந்து இருக்க வேண்டும் என்கிறார்.
அனைவருக்குமான உணர்வாக சமூகத்தின் சொத்து என்பது வரவேண்டும் என்கிறார்.

தமிழின் முதல் நாடகம் இந்திரா பார்த்த சாரதியின் நாடகம் தான் 1970 இல் மழை ... கலை இலக்கிய வெளி மிகக் குறுகிய வெளி , இங்கு தான் சண்டை வருகிறது.

பிரளயன் நாடகம் ஆந்திராவில்  மொழி பெயர்க்கப்பட்டு இவரை அழைத்து பெருமைப் படுத்துகிறார். அவரும் மிக்க மகிழ்ச்சி என்கிறார். விட்டுக் கொடுத்து விடுகிறார். இது தான் இன்றைய நிலை என்றார் தேவேந்திர பூபதி  கவிஞர் .

எவரும் சுயம்பு இல்லை .. சமூகத்தில் கிடைக்கும் அனைத்தும் சமூகத்திற்கே சொந்தம் , ஆனால் ஒரு படைப்பாளியின் கண்ணோட்டம் சார்ந்து காப்புரிமை கொள்ளலாம். புதுமைப் பித்தன் , புலமைப் பித்தன் பற்றிய 2001 வழக்கு பற்றிக் குறிப்பிட்டு  ....பேசுகிறார் தோழர் முத்து R T Muthu .

நக்கீரன் கோபால் பேசும் போது , எந்திரன் - சர்க்கார் பற்றி பேசி  87 பக்கம் இப்புத்தகத்தில் வைத்துப் பேசினார்.

சினிமாவில் புகைப்படங்களை கேட்காம எடுப்பார்கள் , ரகுவரன் அவர்களது
ஃபோட்டோவை எல்லாரும் பயன்படுத்து வாங்க , யாரும் அனுமதி கேட்டதில்ல , ஆனா ஒரு இயக்குநர் அனுமதி கேட்டார் ... என்ற அனுபவத்தைப் பகிர்கிறார் தோழர் ரோகினி Rohini Molleti

இப்படியாக இன்னும் சிலர் பேச ,

Copy right
Copy left
Copy south
Creative Commense
அறம் சார்ந்த நிலைப்பாடு எடுக்க வேண்டும் ,பொருளாதார உரிமை
தார்மீக உரிமை (அ) ஆக்கிய உரிமை ,
இப்புத்தகம் காப்புரிமைக் கு எதிரானதா (அ) உடன்பாடாததா ... என்ற கேள்வி வர வேண்டும் என்கிறார் பிரளயன் .

MIT all research papers உம் Open Source ஆக்கிய ஒரு முக்கியமானவர் பற்றி பேசியதும்  ....அவர் தற்கொலை ... கட்டற்ற மென்பொருள் பற்றிய அரசியல் மாறுபாடு ஏற்பட்டுள்ளது பற்றியும் கூறி .

இந்தியா தியேட்டர் பாரம் எடுத்த ப்ராஜக்ட் - உயிர் வாழும் கதைகள் (நாடகம் நடிப்பவர்) பதிவு செய்ய ஒரு கையேடு தயாரித்தது.
மலையாளம் , மராத்தி , பெங்காலி , இந்தி , கன்னடம் ,தமிழ் - 6 மொழியில் வெளியிட்டு இருக்கோம், அதுவே இப்புத்தகம் என்றார் , பிரளயன் தனது ஏற்புரையில்  .

புத்தகத்தைப் பற்றி எழுத நினைத்தேன். அது இன்னொரு முறை தான் எழுத வேண்டும்.

ஏனோ இவற்றை மட்டுமே எழுதத் தோன்றியது.

அதே பிசுபிசுக்கும் சற்றே வேக  மழை , அங்கிருந்து கிளம்பினேன்.

ரொம்ப நாளாக மனதின் ஓரம் இது பற்றிய நினைவுகளுடன் , எழுதத் தோன்றியபடியே இருந்ததால் ..... இந்தப் பதிவு

உமா