Friday 5 April 2019

வாசிப்பை நேசிப்போம் - கல்வி

#நூல்_விமர்சனம் :

#எல்லோருக்குமான_கல்வி_எங்கே?

இது ஒரு பெரிய நூல் இல்லை  , 30 பக்கங்கள் கொண்ட கல்வி சாசனம் என்று கூறலாம். பக்கங்கள் அனைத்தும் எழுத்துகளால் நிரப்பப்படவில்லை , அரசின் மெத்தனத்தால் விளிம்பு நிலை மக்கள் இழக்கும் கல்விக்கான வெளியும் , மேட்டிமை வர்க்கக் குழந்தைகளும் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்வதும் என்று கல்வியின் தளத்தில் உள்ள சமமற்ற தன்மையும் அதன் மோசமான விளைவுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது .

கோபங்கள் நிறைந்து கடுமையான சொற்களால் சாடுவதும் படிப்பவர் நமது ஜனநாயக அமைப்பு சீர்கெட்ட கல்வியால் புரையோடி இருப்பதை சுட்டிக் காட்டுவதுமாக அடுத்தடுத்த வரிகள் நமக்குள் உணர்ச்சிவசப்பட வைத்து சரியில்லாத கல்வியை சகித்து வாழாதே மனிதா என சாட்டையடி தருகிறது.

1966 இலேயே கோத்தாரிக்கல்விக் குழு சொன்ன வாக்கியம் - இந்தியாவின் தலைவிதி அதன் வகுப்பறைகளில் தீர்மானிக்கப்படுகிறது என்று ஆரம்பிக்கும்  இந்நூல் , ஜனநாயக இந்தியா  உருவாக வேண்டும் என்ற கருத்துடன் முடிகிறது.

கல்வி என்றால் என்ன என்பதற்கான பல உயிருள்ள வாசகங்களும் தரப்பட்டுள்ள இந்நூலில் , கல்விக்கென்று வரி வசூலித்துக் கொண்டு அதை விலை கொடுத்துப் பெற வைப்பது சமூகக் குற்றம் என்றும் அழுத்தமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது  .

ஐக்கிய நாடுகள் சபையின் கல்வித் தர வரிசையில் இந்தியாவின் இடம் 2013 இல் 131/188 ம் , 2015 இல் 145/191 ம் , 2018 இல் 130/188 என்றும் தரப்பட்டு நம்மை திடுக்கிட வைக்கிறது.

கொடிய ஏற்றத் தாழ்வுகள் கொண்ட கல்வி தான் இந்தியாவின் தோல்விக்குக்  காரணம் என்பதை ஆதாரங்களுடன் முன் வைக்கிறது இந்நூல். அதிலும் இந்தியச் சாதியச் சமுதாயத்தின் அடித்தட்டினரான தலித்துகள் , பழங்குடியினர் , நிலமற்ற பிற்பட்ட ஏழையினர் மற்றும் சில மத சிறுபான்மையினரே பெரும்பாலும்   பாதிக்கப்படுபவர்கள் என்கிறது இந்த நூல்.

மேலும்இந்தியக் கல்வியின் வர்க்க - சாதியத் தன்மைக்குக் காரணம் தனியார்மயமாதலும் வணிகமயமாதலும் தான். அரசு தன் தார்மீக அடிப்படைப் பொறுப்பை உதறியதே என்றும் பதிவு செய்கிறது.

வளர்ந்த நாடுகள் அனைத்தும் ஒரே வகையான கல்வி அமைப்பையே பெற்றுள்ளது , அது பொதுப்பள்ளி அமைப்பு என்ற அருகமைப் பள்ளி முறையே , இத்தனைக்கும் முதலாளித்துவ நாடுகளே என்றாலும் மக்கள் நல அரசுகள் ( Welfare States ) அவை .

1.அனைவருக்கும் கல்வி ,
2. இலவசக் கல்வி ,
3.கல்விக்கான நிதி ,
4.அருகமை -பொதுப்பள்ளி
5. பள்ளியின் தரம் உறுதி செய்யப்படல்
6. கல்வியின் உள்ளடக்கம்
7. தாய் மொழி வழிக் கல்வி
8 .ஆசிரியர் பயிற்சி
9. மதிப்பிட்டு முறைகள்
10. கல்வியின் நிர்வாக அமைப்பு
11. பட்டியலினக் குழந்தைகளுக்குச் சிறப்பு ஏற்பாடுகள் ,
12. பழங்குடியினர் குழந்தைகள்

என 12 தலைப்புகளில் நடைமுறை எதார்த்தம் என்ன , கல்வி உரிமைச் சட்டம் என்ன சொல்கிறது என மிக விளக்கமாகவும் அரசும் கல்வித்துறையும்  இவற்றை எவ்வாறு அணுக வேண்டும்  என்று மிக அற்புதமாகப் பதிவு செய்கிறது நூல்.

மேலும் இவற்றில் அரசு உடனடியாக செய்ய வேண்டிய செயல் திட்டமாக இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 , கல்வி உரிமைச் சட்டத்தில் புதிய வதிகள் உருவாக்கம் மற்றும் கல்விக்கான நிதி இவற்றை மட்டுமே முன்னிலைப்படுத்தியும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நூல் முழுவதும் 13 படங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் 11 படங்கள் ..டேஞ்சர்  ஸ்கூல் என்ற புத்தககத்தின் கருத்தியல் படங்கள் , அவை ஒவ்வொன்றும் அப்பட்டமாக நம் கல்வி முறையின் அவலத்தைக் கூறுகிறது.படங்களே கூட நம்மோடு  நிறையப் பேசுகின்றன .

இப்புத்தகம் கல்விக்கான கொள்கை அறிக்கையாக பள்ளிக் கல்விப் பாதுகாப்பு இயக்கத்தால் உருவாக்கப்பட்டது , இதன் எழுத்துக்கான உள்ளடக்கம் பெரும் பகுதி அமைப்பின் தலைவர் Dr  Vasanthi Devi அவர்களுடையது , குழுவின் செயலர்  Krishnamoorthy Jayaraman வழிகாட்டி Dr SSR, மற்றும் மாநிலக் குழுவின் உறுப்பினர் சிலரது ஆலோசனைகளையும் ஏற்று எழுத்துருவாக்கம் செழுமைப்படுத்தப்பட்டது.

இதன்  நூல் வடிவமைப்பு முழுவதும் பேரா . ச. மாடசாமி அவர்களது தலைமையில்  , பாரதி புத்தகாலயத்தால் Puthagam Pesuthu
இணைந்து செய்யப்பட்டுள்ளது. ஓவியங்களின் தேர்வு  , மற்றும் 2 ஓவியங்கள் , அட்டைப்படத் தேர்வு ( மதுரை மு.தென்னவன் ஜனநாயக வகுப்பறை இவரது பள்ளிக் குழந்தைகள் ) இவற்றின் உதவி  கலகல வகுப்பறை
சிவா மேற்கொண்டுள்ளார். புத்தகம் ஒன்றின் விலை ரூ 10 .

கடந்த பிப்ரவரி (2019) 20  ஆம் தேதி தான் புத்தகம் சென்னை பத்திரிக்கையாளர் சந்திப்பில் கல்வியறிக்கையாக வெளியிடப்பட்டது. இதுவரை 4650 புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டு தமிழகம் முழுவதும் பரவலாக சென்று சேர்ந்துள்ளது என்பதும் , அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் இதைத் தங்கள்  தேர்தல் அறிக்கையில் சேர்த்துக் கொள்ள பள்ளிக் கல்விப்  பாதுகாப்பு இயக்கம்  வேண்டுகோள் விடுத்து நேரில் சந்தித்து ஒப்படைத்தது என்பதும் கூடுதல் தகவல்கள் .

நிகழ்கால கல்வி தளத்தில் பணிபுரிவோரும் பெற்றோரும் சமூகத்தின்பால் அக்கறை கொண்ட செயல்பாட்டாளர்கள் , அரசு அதிகாரிகள் , நல்ல அரசைத் தரக் காத்திருக்கும் அரசியல்வாதிகள் என அனைவரும் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய புத்தகம் . என்னைப் புத்தக விற்பனையாளராக மக்களிடையே பரிணமிக்க வழி ஏற்படுத்திய முதல் முக்கியப் புத்தகம் .

தொடரும்
உமா

No comments:

Post a Comment