Wednesday 2 September 2020

மார்க்சியம் என்றால் என்ன ?

ஒரு தொடக்க நிலைக் கையேடு 

நூலாசிரியர் குறித்து :

 சு.பொ. அகத்தியலிங்கம் இந்நூலை எழுதியவர் , மூத்த ஊடகவியலாளர் , எழுத்தாளர் .சாதியம் வேர்கள் விளைவுகள் சவால்கள் , விடுதலைத் தழும்புகள் , புரட்சிப் பெரு நதி , சே குவேரா கனல் மணக்கும் வாழ்க்கை உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர் . தமிழக அரசு விருது உள்ளிட்ட பல வருதுகள் பெற்றவர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தில் தலைமைப் பொறுப்பில் இருந்தவர். தீக்கதிர் பொறுப்பாசிரியராகவும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினராகவும் செயலாற்றியவர். 

நூல் குறித்து …

இந்தப் புத்தகத்தை வாசிக்க வாசிக்க மிக எளிமையாகப் புரிகிறது .தமிழ் இலக்கியப் பரப்பிலிருந்து ஏராளமான மேற்கோள்களை எடுத்து  இந்தப் புத்தகத்தில் பொருத்தமாக பல இடங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. 

மார்க்சியம்   என்ற தத்துவத்தைப் பற்றிய புரிதலை சிறு குழந்தைகளுக்குக் கற்றுத் தருவதைப் போல மிக மிக எளிய நடையில் இப்புத்தகம் தருகிறது. கருத்து முதல் வாதம் , பொருள் முதல் வாதம் என்ற தத்துவப் போர் உலகம் முழுக்க நடந்து கொண்டே இருக்கிறது. தமிழகத்தில் குறிப்பாக சமீப காலங்களில் முகநூலில் இந்தத் தத்துவங்கள் குறித்து கருத்து மோதல்களை வெகுவாகப் பார்க்கலாம். இவை குறித்த முரண்பாடுகளை மிக அழகாக விளக்கியுள்ளது நூல் .23 பாகங்களாக ஒவ்வொரு பக்கத்திலும் மார்க்சிய தத்துவம் என்றால் என்ன , மதங்கள் - ஆன்மிக சித்தாந்தம் - அறிவியல் கோட்பாடுகளுடனான பொருள் முதல் வாதம் எப்படி செயல் வடிவில்  இருக்கின்றது எனத் தெள்ளத் தெளிவாக நமக்குப் புரிய வைக்கிறது. வேதங்களின் வடிவில் கூறப்படும் சித்தாந்தங்கள் - கருத்து முதல் வாதத்தில் இருந்து விலகாத மனிதர்கள் - நிலையான பொருள் முதவாதக் கொள்கையுடையவர்கள் பற்றி வாழ்வியல் நடைமுறைகளுடன் விரிவாக்கம் தரப்பட்டுள்ளதை நமது வாழ்வியலுடன் ஒப்பிட்டுப் பார்க்க முடிகிறது. 

தனி மனிதருக்கும் சமூகத்துக்கும் உள்ள உறவை எவரொருவர் மிகச் சரியாகப் புரிந்து கொள்கிறாரோ அவரே தனி மனித உறவைச் சரியாகப் புரிந்து கொள்வார் என்ற தத்துவத்தைப் புரிந்து கொள்ள பல பக்கங்கள் உதவுகின்றன. 

இறுதியாக நான் புரிந்து கொண்டது மார்க்சியம் என்பது இயங்கியல் பொருள் முதல் வாதம் தான். எனது வாழ்க்கை கூட இந்தப் புள்ளியில் தான் இயங்கிக் கொண்டுள்ளது என சுய பரிசோதனை செய்து முடிவுக்கு வர உதவியது நூல். அடிப்படையில் எளிமையாக ஆரம்ப நிலை புதிய வாசகரை மனதிற் கொண்டு எழுதப்பட்டுள்ளது என்றாலும் மற்றவருக்கு இந்தத் தத்துவத்தை புரிய வைக்க முயலும் ஒருவரும் வாசிக்க மிக முக்கியமான நூல். 


No comments:

Post a Comment