Wednesday 2 September 2020

ஒற்றை வைக்கோல் புரட்சி 

மசானபு ஃபுகோகோ 

வெளியீடு :

.தன்னறம் - குக்கூ காட்டுப்பள்ளி 

இது ஒரு மொழி பெயர்ப்பு நூல் - தமிழில் பூவுலகின் நண்பர்கள் மொழிபெயர்த்துள்ளனர். அட்டை வடிவமைப்பு இரா. தியாகராஜன் மிக நேர்த்தியாக வடிவமைத்துள்ளார்  . புத்தகம் முழுக்க ஒளிப்படங்களை நமக்காகத் தந்திருப்பவர் க்ரகோரி ஹால் பர்ட் என்ற கனடா நாட்டு திரைப்படக் கலைஞர் .

இந்தப் புத்தகத்தின் மையத் தத்துவம்  இயற்கையை நம்புங்கள் என்பதே. இது வேளாண்மையைப் பற்றி மட்டும் பேசப்படும் புத்தகம் அல்ல. வாழ்க்கையின் தத்துவங்களாக வேளாண்மையை இயற்கையோடு இணைத்து எவ்வாறு நடைமுறைப்படுத்துவது எனப் பேசும் புத்தகமாகப் பார்க்கலாம் .

நூலாசிரியர் ஃபுகோகாவின் வாழ்வியல் தத்துவம் தான் இந்த நூல். 

இதில் திணை 1 , 2 , 3 , 4 , 5 என ஐந்து பகுதிகளின் கீழ் 39 தலைப்புகளில்  ஃபுகோகாவின் தத்துவங்கள் பகிரப்பட்டுள்ளன. 

இவரது நடைமுறைகளை இங்குள்ள நிலங்களுக்கு அப்படியே அமல்படுத்த முடியாது என்றாலும் பகிரப்பட்டுள்ள  செயல்முறைகளை அவரவர் நிலத்தில் பின்பற்றுவதற்கான எல்லா சாத்தியக் கூறுகளும் அடங்கியிருக்கின்றது.

திணை -1 இல் , தானியக் கதிர்கள் , மானுடம் எதையுமே அறிந்திருக்கவில்லை , கிராமத்திற்கு திரும்புதல், எதுவும் செய்யாமல் ஒரு வேளாண்மை , இயற்கைக்குத் திரும்புதல் இயற்கை வேளாண்மையின் பரவலின்மை , மனித இனத்திற்கு இயற்கையைத் தெரியாது என்ற ஏழு தலைப்புகளில் ஃபுகோகா அழுத்தமான தத்துவத்தைப் பதிவு செய்கிறார். 

ஆம்... நம் தன்முனைப்பை விட்டொழிப்பதே இயற்கையுடன் ஒன்றிணைவதற்கான மிகச் சிறந்த வழியாகப் பார்க்கப்படுகிறது. இவர் வேளாண்மை செய்யும் பூமியை 25 ஆண்டுகளாக உழப்படவேயில்லை என்பது தான் முதல் திணையின் அடிப்படை செய்தி. நவீன வேளாண்மை முறையுடன் இவரது இயற்கை வேளாண்மை முற்றிலும் முரண்பட்ட தத்துவத்தைக் கைக்கொள்கிறது.. நூறு விளக்கங்கள் அளிப்பதைக் காட்டிலும் தான் நம்பும் ஒன்றுமே செய்யத் தேவையற்ற வேளாண்மை என்ற தத்துவத்தை 1938 இல் நடைமுறைப் படுத்த ஆரம்பித்து அதில் வெற்றியும் கண்டிருக்கிறார். அறிவியல் குறித்தும் ஏராளமான தத்துவ உண்மைகளை புத்தகம் முழுவதும் முன் வைத்து நேரடி வாழ்க்கையுடன் தொடர்பு படுத்துகிறார். 

திணை - 2  இந்த இரண்டாவது பகுதியில் இயற்கை வேளாண்மையின் அடிப்படைகள் , களைகளின் ஊடே பயிர்கள் , வைக்கோலுடன் பயிர்கள் , நிலத்தில் நீர் தேக்காமல் நெற்பயிர். பழ மரங்கள் , பழம் விளையும் பூமி , காட்டுச் செடி போல காய்கரி வளர்ப்பு , வேதிப் பொருட்களை விலக்கிட விதிகள் , அறிவியலின் எல்லை என ஒன்பது தலைப்புகளில் வாழ்வியல் நடைமுறைகள் பகிரப்பட்டுள்ளன . 

எல்லாவகையான பயிர்களையும் பயிரிட உழுதல் புரட்டிக் கொடுத்தல் ஆகியவற்றை நிறுத்த வேண்டும் . இயந்திரங்களையும் மனிதனால் உருவாக்கப்பட்ட வேதிப் பொருட்களையும் பயன்படுத்துவதை விடுத்து , வைக்கோலைப்  பரப்புதல் , தீவனப் பயிரை வளர்த்தல் ஆகிய முறைகளையேப் பின்பற்ற வேண்டும் என்ற தத்துவத்தை நிகழ்த்திக் காட்டுகிறார். களைகளைப் பிடுங்குவது குறித்து தான் நாம் நமது ஊர்களில் பார்த்திருப்போம். ஆனால் ஃபுகோகா களைகளை அப்படியே விட்டு வளர்க்கிறார். வைக்கோலை வயலில் பரப்புவது தான் மிக அடிப்படைப் பணியாகவே செய்கிறார்.

திசை ...3

ஒரு விவசாயிடமிருந்து , கடினமான பிரச்சனைக்குத் தீர்வு , கடின உழைப்பின் அறுவடை , .இயற்கை உணவின் விநியோகம் , வாணிபப் பயிர்கள் ஏமாற்றி விடும் , ஆய்வுகள் யாருடைய நன்மைக்காக, மனிதனுக்கான உணவு , பயிரின் கருணைக் கொலை , இயற்கையோடு இயைதல் , இயற்கை வேளாண்மை வழி முறைகள் என்ற பத்து தலைப்புகளில் பல உண்மைகளைப் புரிய வைக்கிறார் நூலாசிரியர்.

.நாம் இன்று பேசும் உணவு மாசு , வண்ண ேமற்றும் உணவுப் பொருட்கள் , பழங்கள் , காய்கள் பல நாட்கள் கெடாமல் இருப்பதற்காக செய்யப்படும் வேதியியல் செயல்கள் என நீண்ட செய்திகள் பேசப்படுகின்றன. அதற்கு மாறாக இயற்கை வேளாண்மையில் என்ன செய்யலாம் ,தான் என்ன செய்து வருகிறார் என்பதையும் நமக்கு விளக்கியுள்ளார். 

திணை - 4 ... உணவு பற்றிய குழப்பங்கள் , இயற்கை உணவுச் சக்கரம் , உணவுக் கலாச்சாரம் , வாழ்க்கையும் உணவும் , உணவுப் பழக்கங்கள் , உணவும் வேளாண்மையும் என்ற ஆறு தலைப்புகளில் முழுக்க முழுக்க உணவிற்கான தத்துவங்களைத் தருகிறார் ஃபுகோகா . கலாச்சாரம் என்பது எப்போதும் அன்றாட வாழ்வோடு நெருங்கிய தொடர்புடையது , மனிதனுக்கும் இயற்கைக்கும்  இடையே ஏற்படும் கூட்டிணைவில் உதிக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. உண்மையான கலாச்சாரம் இயற்கையினுள்ளிருந்து பிறக்கிறது. அது எளிமையானது , சாதாரணமானது அதிலிருந்து எத்தகைய உணவு உண்மையான கலாச்சாரத்தின் வெளிப்பாடாக அமைகிறது என்ற தத்துவங்களை இப்பகுதியில் ஃபுகோகா பதிவு செய்கிறார். 

இறுதிப் பகுதி  திணை 5 என்பதில்  ... அறிவின் மூடத்தனம்,  யார் அறிவிலி ? மனிதன் இன்னும் பிறக்காதவன் - இன்னும் இறக்காதவன் , அறிவியலின் மாயை , சார்புக் கொள்கை , போரும் அமைதியுமற்ற   ஒரு கிராமம் , ஒற்றை வைக்கோல் புரட்சி என்ற தலைப்புகளில் பல தத்துவ வாதங்களை உண்மையின் வடிவில் பதிவு செய்கிறார். 

ஒற்றை வைக்கோல் புரட்சியின் தத்துவத்தை நிரம்பத் தரும் பகுதிகளாக இத்தலைப்பிற்கான பகுதிகள் அமைந்துள்ளன. 

மொத்தத்தில் வேளாண்மை என்பது ஒரு தொழில் அல்ல , அது ஒரு வாழ்வியல் என்ற தத்துவத்தை தன் வாழ்வின் நிகழ்வு , அன்றாடப் பணிகள் வழியே நமக்கு அளிக்கிறார் ஃபுகோகா . காந்தியம் போல இது ஒரு வாழ்வியல் தத்துவம் , ஃபுகோகாவைப் பின்பற்றும் மாணவர்கள் அவருடனே தோட்டப் பகுதியில் தங்கி இயற்கை வேளாண்மையில் ஈடுபடுவது , பல நாடுகளில் இருந்து இவரது பண்ணைகளைப் பார்வையிட , ஆய்வு செய்ய வரும் ஆராய்ச்சி மாணவர்கள் , ஆசிரியர்கள் , கல்லூரிப் பேராசிரியர்கள் என பல அனுபவங்களை ஃபுகோகா நம்முடன் பகிர்கிறார்.  உழவு என்பதே விவசாயத்தின் அடிப்படை என எண்ணியிருக்கும் நாம் இந்த நூலை வாசித்து முடிக்கும் போது வைக்கோல் மட்டும் போதும் என்ற முடிவுக்கு வருகிறோம். மாடு கட்டி ஏறு பூட்டி உழவோட்டி என்ற காட்சிக்கே இடமின்றி வைக்கோலைப் பரப்பும் காட்சிகள் விழியில் நிறைகின்றன. ஒற்றை தானியம் , ஒற்றை வைக்கோல் இந்த பிரபஞ்சத்தின் அடி நாதமாக அமையும் தத்துவத்தை இந்நூல் நமக்குத் தருகிறது. நாமும் கூட இது போன்ற ஒன்றுமே செய்யாத இயற்கை வேளாண்மை வைக்கோல் புரட்சியைக் கையில் எடுத்தால் என்ன என்ற எண்ணத்தை விதைக்கிறது. 

சு.உமாமகேஸ்வரி 


No comments:

Post a Comment