Wednesday 2 September 2020

இனி விதைகளே பேராயுதம் 

கோ .நம்மாழ்வார். 

குக்கூ காட்டுப்பள்ளியால் வெளியிடப்பட்டிருக்கும் இப்புத்தகம் 2012 இல் முதல் பதிப்பாக வெளிவந்துள்ளது .

ஆசிரியரின் பயணத்தடங்கள் , வாழ்வாதாரம் சிதைத்த பச்சைப் புரட்சி , கேடு செய்யும் வணிக முறை உழவாண்மை ,நவீன வேளாண்மை ஒரு வணிகம் அறிவியல் அல்ல , விஞ்ஞானிகள் தடம் மாறினார்கள் , இயற்கையும் உழவாண்மையும் , அடிக்கடி கேட்கப்படும் வினாக்கள் , சில விளக்கங்கள் , இனி விதைகளே பேராயுதம் , முடிவுரை என்ற 10 தலைப்புகளில் நம்மாழ்வாரின் உரைகள் நம்முடன்  உரையாடல்களாக நீள்கின்றன. 

இப்புத்தகம் வெளிவந்து ஏறத்தாழ 8 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் , நம்மைச் சுற்றி நூற்றுக் கணக்கான இளைஞர்கள் நடைமுறையில் விதைகளை ஆயுதமாக்கி வருவதைக் காண்கிறோம் என்பதை இங்கு நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இயற்கைக்கு விரோதமானவைகளே 

இன்று நம் நிலத்தை ஆள்கின்றன. 

எமது வானத்தின் கூக்குரலைக் கூட

கேட்க முடியாதவாறு

பசித்தவர்களின் அழுகையை 

விநோத பிணிகளின் விசும்பலை 

செத்துக் கொண்டிருக்கும் பூமியின் குரலை 

கேட்க முடியாதவாறு செவிடுகளாக

இரத்தம் பீறிடக் காயம் பட்ட யூ மி 

பாலை நிலங்களை பிரசவிக்கிறது

நாம் இயற்கைக்கு விரோதமான காலத்தில் வாழ்கிறோம். 

மறுபடியும் இதை நாம் இயற்கையானதாக்க வேண்டும் 

நமது பாடல்களின் மூலம் 

நமது அறிவார்ந்த சீற்றத்தின் மூலம் ....

என்ற சூழலியலாளர் கென் ஸரோ விவா வின் வார்த்தைகளைக் கொடுத்துள்ளது புத்தகம் . இங்கு நாம் அனைவரும் இதை  உள்வாங்க வேண்டும் என எண்ணுகிறேன். 

இந்தப் புத்தகம் வேளாண் தொழில் நுட்பத்தை விளக்கும் தொகுப்பல்ல , மாறாக மண்ணோடு அன்பை விதைத்தெடுக்கும் வாழ்வியலைத் தரும் பக்கங்களையே உள்ளடக்கியதாக இருப்பதால் இதைப் புரிந்து கொள்ள வேண்டும் , அதற்கு முதலில் இப்புத்தகத்தை வாசிக்க வேண்டும் .

நம்மாழ்வாரின் அனுபவங்கள்  முதல் கட்டுரையில் இடம்பெற்றுள்ளது . ஆய்வுப் பண்ணை அனுபவங்கள் வழியாக , ஆய்வுகள் எதுவும்  உழவர்களுக்குப் பயனளிக்கவில்லை என்பதை மிகத் தெளிவாக விளக்கியுள்ளார் - அதில் ஒரு வரி ... தேவையான அறிவுரைகள் டெல்லியிலிருந்து தான் வந்தன .இங்குள்ள நம்ம ஊர்  விவசாயிகளுக்கு எந்தவிதத்திலும் அது பயன்படவில்லை என்கிறார். அதை தற்போதைய தேசியக் கல்விக் கொள்கை 2020க்குப் பொருத்திப் பார்க்கலாம். டெல்லியில் தயாரித்த கொள்கையால் நம்ம ஊர்க் குழந்தைகளுக்கு எந்த நல்லதும் நடக்கப் போவதில்லை என்பதை சொல்லாமலேயே புரிந்து கொள்ள முடிகிறது. அரசுப் பணியைத் துறந்து இவரது அனுபவம் நிலம் நோக்கி பண்ணைகள் , காடுகள் உற்பத்தி , உழவு , பல மாவட்டங்களைச் சென்றடைந்து உழவர்களுடன் வாழ்க்கை என விரிகிறது. 

தஞ்சை , புதுக்கோட்டை மாவட்டங்களில் மேய்ச்சல்  தரிசு நிலங்களைக் காடாக்கிய திட்டம் செயல்பட்டது பற்றி அறிந்து கொள்ள முடிகிறது புதுச்சேரியில் இருந்த உழவு - மனிதன் - சூழல் என்ற அமைப்புடன் இணைந்து செய்த பலவற்றையும் அறிய முடிகிறது.  கொழுஞ் சி ஆராய்ச்சிப் பண்ணை உருவான விதம் குறித்தும் , தமிழ்நாடு முழுவதும் இயற்கை உழவர் ண்மையில் ஆர்வமுடைய தனி நபர்களையும் தொண்டு நிறுவனங்களையும் இணைத்து லீஸா என்ற வலைப் பின்னல் உருவானதையும் புரிந்து கொள்ள முடிகிறது. இறுதியாக 2009 இல் கரூர் மாவட்டத்தில் உருவான  நம்மாழ்வாரின் உயிர்ச் சூழிய நிறுவனம் , வானகம் உருவாவை குறித்தும் புரிந்து கொள்ள முடிகிறது. 

நாம் பாடப்புத்தகத்தில் படிக்கும் பசுமைப் புரட்சியின் முகத்திற்கும் இங்கு அறிந்து கொண்ட பசுமைப் புரட்சிக்கும் உள்ள நீண்ட இடைவெளியைப் புரிந்து கொள்வதோடு எத்தனைத் தவறாகக் குழந்தைகளுக்குக் கற்றுத் தருகிறோம் பல ஆண்டுகளாக என்ற வேதனையும் நம்மை வதைக்கிறது. 10% உழவர்கள் மட்டுமே பயனடைந்த ஒரு திட்டத்தை நாட்டின் பொருளாதார வளர்ச்சியோடு இணைத்து பெருமை பேசி மார்தட்டிக் கொள்ளும் ஒரு அரசியல் அவலத்தைத் தோலுரிக்கிறது இந்தப் புத்தகம் . 

உழவிலும் உணவிலும் பன்மயம் திட்டமிட்டு அழிக்கப்பட்டு வருவதும் ஆறாயிரம் ஆண்டு கால வளர்ச்சி  கடந்த ஐம்பது ஆண்டுகளில் பின்னோக்கித் தள்ளப் பட்டுள்ள அநீதிமுறைகள் , ஏமாற்று வேலைகள் உட்பட அனைத்தும் கோடிட்டு காட்டப்பட்டுள்ளது  .

பொன்னு விளையற பூமி என நமது விவசாயிகள் தங்கள் நிலங்களைப் பற்றிக் கூறுவதன் அர்த்தம் புரிகிறது. விவசாயம் ,உழவு , உழவாண்மை , கால்நடைகள் இவற்றின் தொடர்பையும்  நமது நாட்டின் அடிப்படைப் பெயரான இந்தியா ஒரு விவசாய நாடு என்பதிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது. 

சுற்றுச் சூழல் குறித்த புரிதல்களை , உணவுப் பயிர்கள் , விளைச்சல் , நிலத்தின் தன்மை ,உரமிடுதல் , உணவுச் சங்கிலி என இவற்றின் வரிசையில் புரிந்து கொள்ளக் கூடிய பகுதிகள் நம்மை ஏராளமாக சிந்திக்க வைக்கின்றன. கல்வி அரசியல் என்று கூறிக்கொண்டு பதட்டப்படும் நமக்கு விவசாய அழிவு அரசியலை கல்விக்குள் நேர்மறையாகக் கொண்டு வந்துள்ள விபரீதங்கள் புரிகின்றன. 

உரத்திற்கும் எருவிற்கும் வேறுபாடு தெரியாத மாணவரைத்தான் பாடப் புத்தகங்கள் உருவாக்கி வருகின்றன .அறிவியல் பாடத்தில் நாம் படிக்கும் காற்றில் 78% நைட்ரஜன் என்பது உண்மை என்றால் நைட்ஜனை உப்பு உரமாக ஏன் மண்ணிற்குப் போட வேண்டும் என்ற கேள்வியைக் கேட்கும் மாணவர்களை நாம் உருவாக்கவில்லையே .

யாரோ சொன்னதைக் கிளிப்பிள்ளை மாதிரி இங்கு சொல்லி , மக்களை நம்ப வைத்ததன் விளைவு பெரும் சீரழிவைத் தந்து வருவதை நாம் எப்போது உணரப் போகிறோம்  ?

உயிரினப் பன்மை குறித்து இன்று உலகம் முழுவதும் பேசப்பட்டாலும் இங்கு அது அழிக்கப்படுகிறது என்பதே உண்மை . 2000 ஆண்டுகளுக்கு முன்பு 2000 வகை உணவுப் பொருட்களை உண்டு வந்த மக்கள் இன்று 20 வகை உணவுகளை மட்டுமே உண்பதன் காரணம் என்ன ?உயிரினப் பன்மை அழிக்கப்பட்டது தானே. 

குள்ள ரகப் பயிர் வெள்ளத்தில் மூழ்கிப் போகிறதே.. ஏன்?எப்போதெல்லாம் ஒட்டு ரக விதைகள்  பயன்படுத்தப்பட்டனவோ அப்போதெல்லாம் ரசாயன உரம் அதிகமாக விற்பனையாகியுள்ளது. பூச்சிக் கொல்லிகளும் அதிகம் விற்பனையாகியுள்ளது. விதை - உரம் - பூச்சிக்கொல்லி மூன்றுக்கும் ஒரு தொடர்பை வளர்த்து வாணிக அரசியல் நடப்பதை உணர முடிகிறது. 

மரபு முறை உழவர்களின் அனுபவங்கள் புறந்தள்ளப்பட்டு வீரிய விதைகளை மட்டும்  திணித்ததன் விளைவு தான் வெள்ளம் , பஞ்சம் எல்லாமும் . பருவக்கால மழை மாறிவிட்டது , பருவ நிலை மாற்றத்தால் சுற்றுச் சூழல் கெட்டுவிட்டது. அதற்கு ஒவ்வாத பயிரிடல் முறைகளைக் கைக் கொள்வதன் விளைவு தான் தொலைக்காட்சி மற்றும் செய்தி ஊடகங்களில் நாம் காணும் வெள்ளத்தில் பயிர் மூழ்கி லட்சக்  கணக்கான ரூபாய் விவசாயிகளுக்கு நட்டம் என்பது. 

உணவுச் சங்கிலியில் கால்நடை கழற்றி விடப்பட்டு சிதைத்த டிராக்டர் கதைகள் விவசாயிகளின் சோக வரலாறைத் தாங்கி வலம் வருகின்றன. இந்திய உழவர்களுக்குக் கற்றுக் கொடுக்க நம்மிடம் எதுவுமில்லை என 1885 இல் இங்கிலாந்திலிருந்து வந்த உழவியல் நிபுணர் கடிதம் எழுதினாராம் .12 மாதங்கள் இந்தியாவைச் சுற்றி வந்த பின்பு அவர் இப்படி எழுதியதை வரலாறு பதிவு செய்கிறது. 

வியாபாரிகள் லாபம் ஈட்டவே பச்சைப் புரட்சி வந்துள்ளது .இரண்டாம் உலகப்போர் முடிவடைந்த காலத்தில் வெடி உப்பு தொழிற்சாலைகள் எல்லாம் உர உற்பத்தியில் ஈடுபட்டன , வெடி உப்பு வியாபாரிகளின் லாபத்திற்காக புகுத்தப்பட்ட உத்திதான் இந்தப் பசுமைப் என்ற பச்சைப் புரட்சி என்பது நம்மை திடுக்கிட வைக்கிறது. 

நவீன பண்ணை முறை விவசாய நிலத்துடன் சேர்ந்து சுற்றுச் சூழலையும் நாசமாக்கி வருவதை ஒவ்வொரு பக்கமும் நமக்கு பளிச் பளிச் என்று விளக்குகிறது .. விவசாயம் என்பது நமது  வாழ்க்கை முறை , ஆனால் அதை தொழில் முறையாக மாற்றி அமைத்து எல்லா வளங்களையும் இழக்க வைத்திருக்கின்றது இந்த வணிக முறை உழவாண்மை . ஒரு ரூபாய் போட்டால் ஒன்றே கால் ரூபாய் கிடைக்க வேண்டும் என்று தான் பசுமைப் புரட்சியை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளனர் ..

உணவுச் சங்கிலியைச் சிதைக்கும் இரசாயனமும் மண்ணின் உயிரோட்டத்தைச் சிதைக்கும் பாடங்கள் தான் கல்லூரிப் பாடங்களாக இருந்து வருகின்றன . விஞ்ஞானிகள் விவசாயிகளுக்குத் தவறான திசையைக் காண்பித்த வரலாறுகள் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன.

மசானோபு ஃபுகோகோ ஆய்வு செய்த Uயிர் முறைகள் குறித்து விளக்கம் தரும் பகுதிகள் விவசாயத்தைப் புரிய வைக்கின்றன. உணவுச் சங்கிலிக்கு உயிரூட்டும் நமது ஊர் விவசாயிகளின் உழவாண்மையும் , இயற்கையும் இடத்திற்கேற்ற பயிரிடுதல் முறைகளும் எவ்வாறு நிலத்தை வளமாக்கி விடுவதைப் புரிந்து கொள்ள இயலுகிறது .

உயிர் இயங்கியலைப் புரிந்து வியக்க முடிகிறது. 

ஒரு விடுகதை ..

அடி காட்டி வே

நடு மாட்டிலே 

நுனி வீட்டிலே …. நமது அன்றாட விவசாய முறையை மிக எளிதாகப் புரிய வைக்கும் விடுகதை இது. 

நாம் சிறுவயதில் பீக் காடுகளில்  வண்டுகள் கூட்டத்தைப் பார்த்திருப்போம் .மண்னைக் கிளறி மண் துகள்களைக் காற்றினால் சுவாசிக்க வைக்கும் வல்லமை அந்த வண்டுகளுக்கு  இருப்பதை நினைவு படுத்திப் பார்க்கலாம் .இன்று வீட்டுக்குள்ளேயே கழிப்பறை வந்தது. பீக்காடுகள் மறைந்தன . வண்டினமும் அற்றுப் போய்விட்டது. 

அப்போதெல்லாம் மழைக் காலங்களில் மண்புழுவும் பூச்சி , வண்டுகள் என மண்ணைக் கிளறி கிளறி உயிர்ப்பூட்டும் . இப்போது உங்களைப் போட்டு போட்டு மண்ணின் நுண் உயிர்களை சாகடித்து செத்த மண்ணாக்கி விட்டோம் . கொழிஞ்சி செடிய  நெல்லங்காட்டுக்கு எருவாப் போடுவதையும் பார்த்திருப்போம் . கொழிஞ்சிக்கு மாற்றாக உப்பு உரம் போட்டு நெல் வயலை மலடாக்கிய காலம் தான் உணவுச் சத்துப் பற்றாக்குறையால் பல நோய்களுக்கான காலமாக மாறியுள்ளது. 

எல்லாவற்றிலிருந்தும் மீண்டு வர நமக்கான உணவை நாமே விளைவிக்க , நமது ஆதியைப் புரிந்து கொள்ளவே இந்தப் புத்தகம் என்பதை நாம் புரிந்து கொள்ள முடிகிறது. 

ஒன்றுமில்லாத நிலத்தை எப்படி விளைச்சல் பூமியாக மாற்றுவது என்பதை செயல்முறையில் வெற்றி பெற்ற விவசாய மனிதர்கள் வழியே விளக்குகிறார் நம்மாழ்வர். மாணவர்களிடத்தில்  பள்ளி வயதில் இவற்றை விதைக்க வேண்டும் .எத்தனையோ பள்ளிகளில் காய்கறித் தோட்டம் , மூலிகைத் தோட்டம் , அடர்வனம் என விவசாயப் பணிகளைப் பயிற்சியாக மேற்கொள்கின்றனர். இதை ஒரு பயிற்சியாக அறிமுகப்படுத்த , நம்பிக்கையைத்  தர , வழிகாட்ட ,சரியான பாதையைத் தேர்ந்தெடுக்க இந்தப் புத்தகம் உதவும் . சூழலையும் இயற்கையையும் மீட்டெடுத்து மனிதன் ஆரோக்கியமாக வாழ இப்புத்தகத்தை வாசிப்பது ஒரு வழி முறையாகும் .

சு. உமாமகேஸ்வரி 

ஆசிரியர் 

No comments:

Post a Comment