Wednesday 2 September 2020

ஆதிவாசிகளின்  நிலத்தில் போன்சாய் 

இது ஒரு கவிதை நூல் , நமது குழுவில் சில மாதங்களுக்கு முன்பு முதல் ஆசிரியர் என்ற புத்தக விமர்சனம் எழுதியிருந்தேன் .சில பதிவுகளில் ஒன்றாக அதுவும்  தேர்வு செய்யப்பட்டதால் அன்புப் பரிசாக அனுப்பியிருந்தார் எழுத்தாளர் கயல் அவர்கள் .அவருக்கும் குழுவிற்கும் அன்பும் நன்றியும். 

இக் கவிதை நூலின் ஆசிரியர் முனைவர் கயல் , வேலூரில் தனது பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பை முடித்தவர். தற்போது வேலூர் அரசு கலைக்  கல்லூரியில் வணிகவியல் துறை உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார் மூன்று துறைகளில் முதுகலைப் பட்டமும் இரு துறைகளில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்.  இவரது மற்ற படைப்புகள் கல்லூஞ்சல் , மழைக் குருவி , ஆரண்யம் ஆகிய கவிதை நூல்கள் .இவற்றுள் மழைக் குருவி என்ற நூல் , பயணம் சிற்றிதழ் நடத்திய போட்டியில் சிறந்த கவிதை நூல் பரிசை வென்றுள்ளது .தற்போது இவர் இரு மொழிகளிலும் கவிதை , கட்டுரைகள் எழுதுவதும் மொழிபெயர்ப்பு செய்த கட்டுரை , கவிதைகளைத் தருவதும் அடிக்கடி முகநூலில் காண முடிகிறது .

ஆதிவாசிகளின் போன்சாய் என்ற இந்நூலின் பெயரே நமக்கு பலவற்றையும் பொருள் கொள்ள வைக்கிறது . ஆதிவாசிகளுக்கு  என்று ஒரு பொருள் உள்ளது. போன்சாயின் இயல்பும் நாமறிவோம் . இரண்டையும் இணைத்து அழுத்தமான பல செய்திகளை இக்கவிதை நூல் நமக்குத் தருகிறது. 

அன்றாடம் நாம் கடந்து போகும் பல்வேறுபட்ட நிகழ்வுகளின் அடிப்படை உயிர் முடிச்சுகளைத் தொட்டு உணர வைக்கிறார் கயல்.

தீராக் காதலுடன் 

முத்தமிடப்படாத உதடுகளுக்கே விதிக்கப்படுகிறது 

இன்னொரு பிறவி ..

இந்த மூன்று வரிகள் ஏழு சீர்கள்  மட்டுமே கொண்ட வரிகள் எவற்றையெல்லாம் நமக்கு  உணர்த்திவிடும் என்பதை நான் சொல்ல வேண்டியதே இல்லை. 

ஒவ்வொரு பக்கமும் ஒவ்வொரு வித ரசனையைத் தருவதோடு நமக்குள் ஏதோ ஒரு ரசவாத உணர்வு , அழகியல் உணர்வு , பொருத்திப் பார்க்கும் உணர்வு இவற்றையெல்லாம் தருகின்றது. 

சொற்களை அழகாகக் கோர்த்து பல வண்ண ஓவியம் போல படர விட்டிருக்கிறார். ஏதோ கவிதைகள் என்றால் ரசனைக்கு மட்டுமல்ல , வலி , சமூகத் துயரங்கள் அது வன் கொடுமை என்பதான கருவரை   , பெண்களின் நிலை , போராட்டம் , காதல் , மரணம் , அகதியின் மனத் துயரம் இப்படி நிறைய படைப்புகள் . ரசிக்கவும் பற்களை நெரித்து கோபம் கொள்ளவும் , மனதுக்குள் அழ வைக்கவும் , விருப்பமான நேசங்களை மகிழ்வுடன் அசை போடவும் வைக்கின்றன பல கவிதைகள் ….

எனக்குப் பிடித்த பலவற்றுள் இன்னும் சில …

  திரும்புவதற்குக்  கூடற்ற துயரத்தை 

  அறிவோம் எனப் 

  பறவைகள் மட்டுமே சொல்ல முடியும் 

  திரும்புவதற்கு நாடற்ற 

  நாடிருந்தும் வீடற்ற 

  அகதியின் துயரை ….

……………..

  நீங்கள் 

  அரசுப் பள்ளியில் படித்த 

  விவசாய மகளின் ஆங்கிலத்தில் 

  பிழை தேடினீர் ..

 இணையத்தில் என் பிறப்பின் வேரெது என

 சாதி தேடினீர் ..

……………..

 வறுமை துரத்தி வந்து எத்த 

 புன்னகை தேடினேன் என்று ஆரம்பிக்கும் கவிதை முழுவதும் அற்புதமான வரிகள் .

சிறு குடிசை வீடிருந்து 

 அரசியாகும் கனவு தேடினேன் என்ற வரிகளை எனக்கான வரிகளாகப் பார்க்கிறேன் ….

……………..

துரோகங்களால் மறுபடி மறுபடி வீழ்கையில்

அன்பின் சிறகுலர்த்தி நம்பிக்கையாதல் 

எப்படிச் சாத்தியமாகிறதென்  அன்பே 

உனக்கு என்கிறேன் 

ஒற்றைச் சொல்லில் 

உயிராழம் தொடுகிறாய் 

"காதல்"

……………………………..

எதை அழித்தாலும் நிறம் 

திரியா தழல் நான் ...

……………………………….

பணி மீளும் தாதியொருத்தி விடை பெறுகையில் நோயாளிக்குப் 

பரிசளிக்கிற அன்றைய இரவை வெல்லும் 

நம்பிக்கையூட்டும் புன்னகையாக ... 

எனத் தொடங்கும் கவிதை அவ்வளவு நம்பிக்கையான கவிதை ….

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் .

அழகான அட்டைப்படம் அதைவிட அழகான தலைப்பு இவற்றை விட அழகான கவிதைகள் .

உமா

No comments:

Post a Comment