Sunday 31 May 2020

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்

ஒரு மனிதன் 

     ஒரு வீடு 

ஒரு உலகம் 

வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம் 

விலை : ரூ325

பக்கங்கள் : 319

ஆசிரியர் குறிப்பு :

இந்நாவலின் ஆசிரியர் ஜெயகாந்தன் , 1934 இல் தென்னார்க்காடு மாவட்டம் மஞ்சக்குப்பத்தில் பிறந்தவர் .தொடக்கப் பள்ளிக் கல்வியைக் கூட முடிக்காத இவர் , சுயமாகக் கற்று 1950 முதல் சிறுகதைகள் , குறுநாவல்கள் , நாவல்கள் , கட்டுரைகள் மொழிபெயர்ப்புகள் , திரைக்கதை வசனங்கள் ,நேர் காணல்கள் என எழுபத்தைந்துக்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளார் .கவிதைகளும் எழுதியுள்ளார். இவரது சிறுகதைகளும் நாவல்களும் பல இந்திய மொழிகளில் மட்டுமல்லாது ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. நாளிதழ் , இலக்கிய இதழ்களின் ஆசிரியராகவும் இருந்துள்ளார். சில திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். 

ஞானபீட விருது , சாகித்ய அகாதமி விருது , ராஜராஜன் விருது என பல விருதுகளைப் பெற்றுள்ளார். இவர் இயக்கிய உன்னைப் போல் ஒருவன் திரைப்படம் குடியரசுத் தலைவர் விருது 1964 இல் பெற்றது. 5 வருடங்களுக்கு முன்பு 2015 இல் ஏப்ரல் மாதம் 8ஆம் தேதி சென்னையில் காலமானார். தனது நாவல்களில் தனக்கு மிகவும் பிடித்தமானது என்று ஜெயகாந்தன் குறிப்பிட்டுள்ள நாவல் இந்த ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம். 

நாவலைப் பற்றி..

நவீனத் தமிழ் கிளாசிக் நாவல்  வரிசையின் மிக முக்கியமான நாவலாகப் பார்க்கப்படும்  

இந்த நாவல் அதை வாசித்த அனைவராலும் மனதார நெகிழ வைத்ததைப்  , பாராட்டிச் சொல்லி வரும் பகிர்வுகளைத் தொடர்ந்து பார்க்கிறோம். 

எந்த ஊர் , பெற்றோர் யார் , என்ன இனம் , என்ன சாதி என்று ஏதும் தெரியாத , அது பற்றிக் கவலைக் கொள்ளாத ஒரு உலகப் பொது மனிதனைக் கதாபாத்திரமாக்கி, அவன் எதிர்கொள்ளும் அனுபவங்களின் மூலம் இந்த வாழ்க்கையின் போக்கு குறித்த புரிதலை உணர்த்த முனைகிறது நாவல். அதில் வெற்றியும் பெறுகிறது. 

1973 இல் எழுதப்பட்டு முதல் பதிப்பாக வெளிவந்துள்ள இந்நூல்,  ஏறத்தாழ 50 ஆண்டுகளை நெருங்கிக் கொண்டுள்ள சூழலில் 

இன்றும் வாசிக்கும் அனைவருக்கும் மிகப் பிடித்தமான நாவலாகவும் இன்றைய சூழலுக்கும் பொருந்துவதான வாசிப்பு அனுபவத்தைத் தருகிறது. 

இந்த நாவலின் முன்னுரையில் ஆசிரியர் ஜெயகாந்தன் தனது கதையைக் குறித்தும் தானே தனது கதைகளைக் குறித்து எழுதும் பழக்கத்திற்கான காரணங்கள் , கருத்துகள் குறித்து பகிர்கிறார். 

ஆசிரியர் , மாணவன் , நண்பன் ஆகிய மூன்று கோணங்களிலிருந்தும் இந்த முன்னுரைகளைத் தான் எழுதுவதாகக் கூறியுள்ளார் ஜெயகாந்தன்.

இந்த முன்னுரையே ரொம்ப வருடலாக இதமாக ஒரு வித நேசத்துடன் நாவலுக்குள் நாம் பயணிக்க உதவுகிறது .நாவலின் எந்த ஒரு இடத்திலும்  நம்மை எந்த சலிப்புக்கும் உட்படுத்தாமல் தேம்பி அழ வைக்காமல் , ஆஹா என துள்ளிக் குதிக்க வைக்காமல் தெளிந்த நீரோடையாக மனிதர்களையும் நிகழ்வுகளையும் உள்வாங்க வைத்து அவர்கள் போக்கில் அவர்களுடன் வாழ வைக்கும் ஒரு சிறந்த படைப்பாக அமைந்துள்ளது.

நாவலின் ஆரம்பத்திலிருந்தே நம்மை ஒரு வித நெகிழும் மனநிலைக்கு அழைத்துச் செல்கின்றன பக்கங்கள். அந்த ஊரும் , மக்களும் , நாவலில் சொல்லப்படும் கதாபாத்திரங்களும் , சின்னச் சின்னக் காட்சிகளும் கூட படிக்கப் படிக்க காட்சிகளாக நம்முடன் இன்னொரு பக்கம் பயணித்ததன் அனுபவத்தை, வாசித்து  ஒரு வாரம் ஆகியும் இன்னும் மறக்க முடியவில்லை. எல்லோருடனும் நாமும் வாழ்ந்த அனுபவத்தைத் தருகிறது. 

யாராலும் மறக்க முடியாத கதாபாத்திரம் ஹென்றி , இப்படியான மனிதர்கள் அபூர்வம் என்றாலும் நம் எல்லோருக்குள்ளும் குறிப்பிட்ட சிறு  சதவீதமாவது ஹென்றி பாத்திரம் இயல்பாகவே வாழ்ந்து கொண்டிருக்கும். ஆனால் மனிதர்கள் வெளி உலகுக்கு போடும் முகமூடிகளில் அவன் வெளிப்படாமலிருப்பான். பள்ளிக்கூடமே போகாத ஹென்றியின் வாழ்வியல் அணுகுமுறைகள் மனிதம் நிறைந்த அறிவுசார் நிகழ்வுகளை ஒவ்வொரு பக்கத்திலும் வெளிவருவதிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது மனிதன் மனிதனாக வாழ பள்ளிக்கூடங்கள் அவசியமில்லை என்பதே. அதே போல அவனது பப்பா , மம்மா பெற்றோர் பாத்திரம் ஒரு இடத்திலும் ஹென்றியை எதற்கும் கட்டாயப்படுத்தவில்லை. குழந்தை உளவியல் , மனித உளவியல் , அணுகுமுறை என எல்லாவற்றையும் கூட இந்நாவல் நமக்குக் கற்றுத் தருகிறது. ஹென்றி பேசும் குறைவான தமிழும் அதிகமான ஆங்கிலமும் நாவல் முழுக்க வாசிக்க வாசிக்க அதுவும் ஒரு இனிமையான உணர்வைத் தருகிறது. 

32 வருடமாகப் பூட்டிக்கிடக்கும்  வீடும் , வயல் வரப்பு , மாடு கண்ணுகள் , நெல் மூட்டை அடுக்குவது, சந்தை , கிழங்கு விற்கும் பெண் , தர்மகர்த்தா , மணியக்காரர் , கிளியாம்பாள்  என நிகழ்வுகளும் உயிரற்ற பொருட்களும் உயிருள்ள மனிதர்களும் நம்முடன் இருப்பதாக நாம் அவர்களுடன் அந்த கிருஷ்ணராஜபுரத்தில் இருப்பதாக ஒரு உணர்வை ஏற்படுத்துகிறது. 

கிராமத்து ஆசிரியரான தேவராஜன் ஹென்றியுடன் நட்பாவதும் , ஹென்றிக்கும் தேவராஜனுக்கு மிடையே நடக்கும் உரையாடல் தரும் உணர்வுகளும்  அக்கம்மாவின் இருப்பும் , அவளது வாழ்க்கையும் ,மண்ணாங்கட்டியின் வீட்டுச் சூழல் , அக்கம்மா வீட்டுக்கு அவனது ஒத்தாசை இதற்குள் சில மானுட சித்தாந்தங்களை வாழ விடுகிறார் ஜெயகாந்தன். 

துரைக்கண்ணுவின் வாழ்க்கை , அவனது ஹென்றியின் மீதான பாசம் , குழந்தைகளுடனான உறவு , பேபியின் மீதான தாய்மைத் தவிப்பு  , பாண்டுவின் மீதுள்ள உரிமை , அண்ணன் வீட்டின் மீதிருந்த அபார நேசம் இப்படி எளிய மனிதர்களின் மனதை நாவல் முழுவதும் எதார்த்தமாக இழையோட விட்டிருப்பது கூட நம்மை இந்த நாவலை விரும்ப வைக்கிறது.

பஞ்சாயத்து நிகழ்வுகளும் துரைக்கண்ணுவின் எதிர்பார்க்காத மனதும் ஹென்றியின் மறுமொழியும் அட , இப்படிக் கூட மனிதர்கள் இந்தக் காலத்தில் வாழ்கிறார்களா என்று நம்மை எண்ண வைக்கிறது. 

இறுதியாக அந்த வீட்டின் புதுமனை விழா வரை நடக்கும் எல்லாமே நமக்குள் அமைதியான மகிழ்ச்சியை உருவாக்குகிறது. ஹென்றி தான் இந்த நாவலின் முக்கிய மையக் கதாபாத்திரம். எந்த ஆடம்பரமும் இல்லாமல் எல்லோருக்குள்ளும் பாதிப்பை உருவாக்கி இப்படி ஒரு மனிதனை நாம் வாழ்வில் சந்திக்க வேண்டும் என்ற எண்ணத்தை நமக்குள் விதைக்கும் கதாபாத்திரம். 

35 வருடம் முன்பு நான் வாழ்ந்த கிராமம் , கிராமத்து சூழல் , அங்கிருந்த மக்கள் அவர்களின் இயல்புகள் என பலவற்றை இந்த நாவலுக்குள் பொருத்திப் பார்க்க முடிந்தது. 

ஒன்றை நிச்சயமாகச் சொல்லலாம் , இந்த நாவல் முழுவதும் மனிதத்தை நேர்மை நியாயத்தை பதிவு செய்திருக்கிறார் ஜெயகாந்தன் . இப்படி மனிதர்கள் வாழ்ந்த காலகட்டமும்  இருந்தது என்னவோ நிஜம் தான். ஆனால் இன்று அதே நிலை இல்லை என்பது தான் எதார்த்தம். 

ஹென்றியின் நினைவுகளுடனே இந்தப் பதிவை நிறைவு செய்கிறேன்.  


No comments:

Post a Comment