Wednesday 2 September 2020

பருவநிலை மாற்றம் 


உலகெங்கிலும் பருவநிலை மாறி வருவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.

கோடையில் வெயில் வழக்கத்தை விடக் கடுமையாக இருக்கிறது. புயல்கள் அதிகரித்திருக்கின்றன. சில இடங்களில் அளவுக்கு மீறி மழை பொழிகிறது. அல்லது வறட்சி தலை காட்டுகிறது. இவையெல்லாம் ஏன் நிகழ்கின்றன என்பதை இந்த நூல் நமக்குத் தெளிவாக விளக்குகிறது.

நூலாசிரியர் :

அறிவியல் எழுத்தாளர் என்ற வகையில் தேசிய விருது பெற்றவரான என். ராமதுரை , கடந்த 30 ஆண்டுகளாகப் பத்திரிகைகளிலும் வார , மாத இதழ்களிலும் எண்ணற்ற அறிவியல் கட்டுரைகளை எழுதியிருக்கிறார். தொலைக்காட்சி, அகில இந்திய வானொலி ஆகியவற்றில் அளித்த பேட்டிகள் மூலம் நன்கு அறியப்பட்டவர். இவருடைய நூல்கள் விண்வெளி , அணுசக்தி , சூரிய மண்டலம் எனப் பல தலைப்புகளில் வெளியாகியிருக்கின்றன. 

என்.ராமதுரை எழுதிய நூல்களில் ஒன்று தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் விருது பெற்றுள்ளது. இன்னொரு நூல் தமிழக அரசின் விருது பெற்றுள்ளது.

அட்டைப் படமே நம்முடன் மிக அழகாகப் பேசுகிறது . பூமியின் மீது மரத்தை வெட்டி தொழிற்சாலைகள் உருவாக்கமே,  புகையின் வழியே கரியமில வாயு தான் இந்த பருவ நிலை மாற்றத்தின் அடிப்படைக் காரணம் என்பதை முகப்பு ஓவியத்தின் வழியே நமக்குப் பதிவு செய்துள்ளார் சி.பி. கிருஷ்ணப்பிரியா . 

க்ரியா பதிப்பக வெளியீடான இப்புத்தகம் 2016 இல் முதல் பதிப்பாக வெளிவந்துள்ளது - 

இருபது கட்டுரைகளின் வழியே எளிமையாக அறிவியல் விளக்கங்களுடன்  வரலாற்றுத் தரவுகளுடன் புவியின் பரிதாப நிலையைத் தெள்ளத் தெளிவாக விளக்கியிருக்கிறார் ஆசிரியர் .

பருவ நிலை மாறும் போது நோய்கள் அதிகரிக்கும் , எதிர்காலத்தில் இப்படியான நிலைமைகள் ஏற்படாமல் தடுக்க வேண்டும் என நிபுணர்கள் அன்றே கூறியதை நாம் இன்றைய கோவிட் - 19 பாதிப்புடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம் .சரி செய்ய முடியாத அளவிற்கு காற்றில் கரியமிலவாயு அதிகரித்து தான் பூமியின் சராசரி வெப்பம் அதிகரித்துள்ளது என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார் ராமதுரை .

இவற்றைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகளாக காற்றாலைகள் , சூரிய மின் பலகைகளைக் கூறினாலும் இயல்பில் மாற்றங்கள் முழுமையாக வரவில்லை என்பதை நாம் நன்கு உணர்வோம் ..

2015 ஆம் ஆண்டில் ஏற்பட்ட சர்வதேச உடன்படிக்கையில் புதைபடிவ எரிபொருட்களைக் கைவிடுவதில் ,உலகில் யார் எந்த அளவுக்குப் பங்களிப்பது என்பதில் சிக்கல் வந்தது .முன்னேறிய நாடுகளுக்கும் ஏழை நாடுகளுக்கும் இடையே இயல்பாகக் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பணக்கார நாடுகள் கட்டாய அடிப்படையில் அதிகப் பங்களிக்க வேண்டும் என்று கூறும் உடன்பாட்டை அமல்படுத்த முயன்ற போது தோல்வி கண்டுள்ளது. இறுதியில் கரியமிலவாயு வெளிப்பாட்டை எந்த அளவுக்குக் குறைத்துக் கொள்வது என்பது அந்தந்த நாடுகளின் விருப்பத்துக்கு விடப்பட்டதால் பல வருடங்கள் கழித்து இன்றும் மாற்றம் வரவில்லை என்பது கண்கூடு .

இந்தக் கட்டுரைகளை வாசிக்கும்போது நமக்கு உண்மையாகவே இந்த பருவநிலை மாற்றங்கள் எப்படியான விளைவுகளை எந்தெந்த பகுதிகளில் உருவாக்குகின்றன என்பதைப்  புரிந்து கொள்ள முடிகின்றது. 

கிரிபாட்டி என்கிற தீவு நாடு   பசிபிக் கடலில் இருக்கக்கூடியது . இந்த நாட்டின்  பிரச்சனை என்ன ?அங்கு 33 தீவுகள் இருக்கின்றன கடல் மட்டம் மெதுவாக உயர்ந்து வருகிறது. இது ஏன் உயர்ந்து வருகிறது ?  இந்த பருவ நிலை மாற்றத்தினால் பூமியின் வெப்பநிலை உயர்ந்து வருவதனால் என்ன விளைவுகள் என்பதை மிகத் தெளிவாகக் குறிப்பிடுகிறது இந்நூல்  . 

மாலத்தீவுக்கு என்ன விளைவு ஏற்படும் உலகத்தில் உள்ள கடல் பகுதியில் வாழக்கூடிய அனைத்து கண்டங்களிலும் இருக்கக்கூடிய நகரங்கள் எப்படி எல்லாம் பாதிக்கப்படும் என அறிய வைக்கும் கட்டுரை . இதற்கு ஒரு முன்னேற்பாடாக கிரிபாட்டி தீவுகளில் அரசு என்ன மாதிரியான முயற்சிகள் எடுத்துள்ளது ,  உலகத்துக்கே ஒரு எடுத்துக்காட்டாக வெளியில நிலம் வாங்கிப் போட்டு இருப்பது என பல தகவல்களைத் தருகிறது.நாடுகளின் பருவநிலை விபரீதமானால் அந்த நாடுகளின் மொத்த வருமானமே பாதிக்கப்படும் என்பதையும் அறிய முடிகிறது. 

நமது புவியியல் , அறிவியல் பாடங்களில் படிக்கும் செய்திகளை யதார்த்தமாக்குகிறது. பூமியின் சராசரி வெப்பநிலை எவ்வாறு கணக்கிடப்படுகிறது , காற்றின் வெப்பநிலை அளக்கப்படுதல் எனத் தெளிவு படுத்தும் விதமாக மிக எளிய விளக்கங்கள் தரப்பட்டுள்ளன.

20 கட்டுரைகளின் தலைப்புகள் ..

பூமிக்கு ஜுரம் கண்டுள்ளதா ? , மிரட்டும் கடல் , மூழ்கும் தீவுகள் , பூமிக்கு ஆயிரம் வெப்பமானிகள் , வானிலை வேறு ; பருவநிலை வேறு , கோடையில் வாட்டிய குளிர் , ஸ்வீடன் விஞ்ஞானிக்கு ஏற்பட்ட கவலை , கரியமிலவாயு நச்சு வாயுவா ? அதென்ன பசுமைக் குடில் ? நிலக்கரியின் ஆக்கிரமிப்பு , எண்ணெயால் வந்த வினை , கீலிங் கிழித்த கோடு , டொராண்டோ முதல் கிரியோட்டா வரை , அமெரிக்காவில் எதிர்ப்பு இயக்கம் , இந்தியா எப்படிப் பாதிக்கப்படும் ? சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் , காற்றின் மூலம் மின்சாரம் , அணுசக்தி ஒரு தீர்வாக இருக்க முடியுமா ? பூமி மீது கைவைக்க விசித்திரத் திட்டங்கள், பாரிஸில் ஒரு புரட்சி , நாம் என்ன செய்ய முடியும் ? 

ஆகிய அனைத்து கட்டுரைகளிலும் பருவநிலை மாற்றம் குறித்தான உண்மை நிகழ்வுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

பருவ நிலை மாற்றத்திற்கான காரணிகள் , உலக நாடுகள் அனைத்திற்குமான பங்கு என்ன என்பது மிகத் தெளிவாகக் கொடுக்கப் பட்டுள்ளது.  தனி நபரது கரியமில வாயு பயன்பாடு நாட்டிற்கு நாடு எவ்வகையில் வேறுபடுகிறது ? ஏன் வேறுபடுகிறது என்பதையும் சரியான தரவுகளுடன் முன் வைக்கிறார் ஆசிரியர் . 

மழை பொய்த்துப் போயிற்று , விவசாயம் செழிக்க வில்லை , உணவுப் பஞ்சம் , வெள்ளப் பிரச்சனை , சுனாமியின் தாக்கம் , நில நடுக்கம் , தனி மனித பொருளாதாரப் பிரச்சனை , நாட்டின் பண வீக்கம் என அனைத்து வகையான பிரச்சனைகளுடன் தொடர்புடையதாக இந்தப் பருவநிலை மாற்றம் இருப்பதை உணர முடிகிறது . செர்னோபில் கதிரியக்க விபத்துக்கும் ஃபுகுஷிமா மக்களின் பரிதாபத்திற்கும் பருவ நிலை மாற்றத்தின் ஆதிக்கம் என்ன என்பதை மிக கவனமாக விளக்குகிறது இந்யில் . சுமார் 300 வருடங்களாக பருவநிலையில் எவையெல்லாம் மாறுபாடடைந்து இன்றுள்ள பூமி துன்பப்படுகிறது என்பதை விளக்க வரைபடங்கள் வழியாகத் தெளிவாக்குகிறது நூல். 

கண்டங்கள் , கடல்கள் , பனிப் பிரதேசங்கள் , எரிமலை வெடிப்புகள் உலகளவில் பருவநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்டு வருவதும் விளைவுகளும் கண் முன்னே காட்டுகிறது நூல். மனிதர்களால் அவர்களின் தேவைகளைக் குறைத்துக் கொள்ளாததால் இயற்கையின் தோற்றம் எப்படியெல்லாம்  சீர்குலைந்து மனிதனுக்கே ஆபத்தாக உருவெடுத்துள்ளது என்பதைப் பதிவு செய்வதோடு இவற்றிலிருந்து மீள்வதற்கான வழிகளையும் பல நாடுகள் எடுத்து வரும் முயற்சியையும் படம் பிடித்துக் காட்டுகிறது. வல்லரசு நாடுகள் இங்கேயும் தங்கள் அதிகாரத்தை கோலோச்சுகின்றன என்பதையும் சமகால அரசியல் சூழலுடன் கட்டுரைகள் உரையாடுகின்றன. 

எளிமையான அறிவியல் பூர்வமான விளக்கங்கள் வழியே பருவநிலை மாற்றம் எவ்வளவு ஆபத்துகளைத் தந்து வருகிறது என்பதை நமக்கு விரிவாக விளக்கும் என். ராமதுரை அவர்களது எழுத்து நடையும் நமக்கு எளிதாக வசப்படுகிறது. 

// இந்த புத்தகத்தின் விபரீதங்களை இங்கு பொருத்திப் பார்க்க வேண்டியுள்ளது.//நீக்கி விட்டால் நல்லது. /இது சம்பந்தமாகப் புரிதலை தரும் புதக்கம் என்று சொல்லலாம்/ என்பது போல வரியைச் சேர்த்து மீண்டும் பதிவிட முடியுமா!

பள்ளிகளில் அறிவியல் , புவியியல் பாடங்களில் இக்கட்டுரைகளை இணைத்து மாணவர்களுக்கு விழிப்புணர்வையும் சூழல் சார்ந்த அறிவையும் தரலாம். பள்ளி ஆசிரியர்கள் கட்டாயம் வாசிக்க வேண்டிய புத்தகம் . 

சு .உமாமகேஸ்வரி 

ஆசிரியர்

No comments:

Post a Comment