Friday 22 June 2018

நட்பு வட்டம் - 2

டீச்சரும் டீச்சரும் ... நானும் பர்வதமும்
                 (1982 - 2018 வரை )

இரண்டாம் கிளாஸ்ல இருந்து ஒன்னாப் படிச்சு ஆசிரியர் பயிற்சி , இளங்கலைக் கணிதம் வரை கூடவே பிரயாணம் செய்த தோழி தான் பர்வதலட்சுமி ..

அவங்கம்மா ஆசிரியரா இருந்த தொடக்கப் பள்ளியில் தான் அவளும் படித்தாள் , நானும் படித்தேன் . நான் இரண்டாம் வகுப்பில் புதுக் கண்ணகி டீச்சர் கிட்ட படிச்சேன். 

வகுப்பில் ஒரு முறை அவங்க வராததால் அந்த டீச்சர் (Substitute) வகுப்புக்குப் போனோம் , என்னோடு அப்போ மது கூட இருந்தான். அன்று பர்வத லட்சுமி தான் லீடர் , அவங்கம்மா க்ளாஸ்ல , அவங்க .. கோபத்துல ஸ்கேல் வச்சு அடிப்பாங்க , எனக்கு பயமா இருக்கும். அப்போ பர்வதம் பேசறவங்கள சொல்லி வச்சுருவா ... அதனால் அவ கூடபேசவே மாட்டேன் , இன்னொன்னு அங்க படிச்சவங்க எல்லாம் பெரும்பாலும் உள்ளூர்க்காரர்கள்  , ஒரு பகுதியை ஒரு குறிப்பிட்ட மொழி பேசும் இனத்தைச் சேர்ந்தவங்க அல்லது உறவுக்காரங்க. ஆனா நான் யாருக்குமே அறிமுகமில்லா புதிய குடும்பத்திலிருந்து வருபவள்.
(இது போன்ற பிரிவினைகளையும் ஆசிரியர்களாகிய நாம் கவனத்தில் கொண்டு மாணவர்களை அணுக வேண்டும் என எனக்குக் கற்றுத் தந்தது இந்த அனுபவம் தான் )

அப்படி இருக்க 5 ஆம் வகுப்பு வரை பர்வதத்துடன் நான் நெருங்கியதே இல்லை.
ஆனால் ஆறாம் வகுப்பில் நெருக்கமான தோழிகளாக மாறிவிட்டோம். அப்போது புதிய பள்ளி , புதிய ஆசிரியர்கள் ( முக்கியமா அவங்க அம்மா டீச்சரா இல்லாத பள்ளி ) அங்கு இருவரும் ஒரே வகுப்பு தான் , அதன் பிறகு ஏறத்தாழ ஆசிரியர் பயிற்சி வரையும் தபால் வழி BSC கணக்கு Uடிக்கும் வரை இணைந்தே இருந்தோம்.

ஆறாம் வகுப்பில் கணக்கு டீச்சர் எங்க யாராலயும் மறக்கவே முடியாது. கணக்கு பாடத்தை எவ்வளவு கஷ்டமா நினைக்க முடியுமோ அவ்வளவு கஷ்டமாக்கிய பாக்கியசாலி அவர். நடத்தவே மாட்டார். விளைவு கணக்கு மிக நல்லா போடும் நான் அந்த ஆண்டு காலாண்டுத் தேர்வில் 35 வாங்குவதே பெறும் பாடு ஆனது. பர்வதத்துக்கும் அதே நிலை , மொத்த வகுப்பில் 4 பேர் தான் பாஸ் பண்ணினோம்.
நம்ம வீட்லயா மார்க் கம்மியான திட்டு வாங்க முடியாத அளவுக்கு ... எங்கே அடி விழுமோன்னு பயந்தேன் ,   5 ஆம் வகுப்பு வரை நல்லாப்  படிச்சுட்டு 6 ஆம் வகுப்பில் ரொம்பக் கம்மியா கணக்குல வாங்கினது பெரிய மன உளச்சலைத் தந்து அதோடு வீட்டுல இருந்த கெடுபிடி ... பர்வதத்திற்கும் வீட்டில் ஏதோ சூழல் ... ஒரு வெள்ளிக்கிழமை பள்ளி விட்ட பிறகு .... இரண்டு பேர் மட்டும் தனியா ஸ்கூல்ல உக்காந்து யோசிச்சு (?) முடிவெடுத்தோம். இரண்டு பேரும் செத்துப் போறதுன்னு .... அதனால் பள்ளிக்கூடத்தில் ஒரு மரம் , நிறைய கசப்புக் காய்கள் காற்றில் கொட்டும். அதை எடுத்து கல் வச்சு கொட்டி ... கொஞ்சம் மிட்டாய் கடிச்சு சாப்பிட்டுட்டு இருவரும் அழுது கொண்டு நாம வீட்டுக்குப் போய் செத்து விடுவோம் என்று கூறிக் கொண்டு வீடு போய் சேர்ந்தோம். ஆனால் இருவருமே திங்கள் காலை உயிருடன் பள்ளிக்கு வர ... ஒரே ஆச்சர்யம் ... (இன்று வரை ஏன் அது ஒன்றும் செய்யவில்லை எனத் தெரியல )இதுவரை இந்த ரகசியம் யாருக்குமே தெரியாது.

அதன் பிறகு எங்கள் பள்ளி வாழ்க்கை பயங்கர வேகமாக ... போட்டி முதல் , இரண்டாம் , மூன்றாம் ரேங்க் என ஓடியது.

பருவும் நானும் நிறைய போட்டி போடுவோம். அவருக்கு இங்கிலீஷ் நல்லா வரும். பேச்சுப் போட்டி கட்டுரைப் போட்டி இரண்டிலும் நாங்க கட்டாயம் முதல் வரிசையில் இருப்போம்.

பள்ளிக் கூடத்தில் அவளது செல்வாக்கு எப்போதும் கொஞ்சம் ஜாஸ்தியா இருக்கும். ஏன்னா அவங்க அப்பா விளையாட்டு ஆசிரியர் ... அம்மாவும் ஆசிரியர் . அதனால் ஒரு சில ஆசிரியர்கள் எப்போதும் ஒரு தலைப் பட்சமாக வெற்றி தோல்விகளை நிர்ணயிப்பர்.

அவள் மேல் எந்தத் தவறும் இல்லை. இந்த பள்ளிக்கூட ஆசிரியர்கள் தான் அப்படி... பள்ளியில் நிறைய மாணவிகளுக்கு இதில் அதிருப்தி. (குழந்தைகள் மனதில் எதுவும் இல்லை, ஆனால் ஆசிரியர்கள் இது போன்ற பிரிவினைகள் உண்டு பண்ணுகிறோம் என்று அறியாமலேயே தவறு செய்வது குழந்தை உளவியலை பாதிக்கும் என எவரும் உணர்வதில்லை )

ஒரு முறை 6 வது வகுப்பில்பர்வதமும் நானும் சிறிய சண்டை போட்டுக் கொண்டு ஒரு வாரம்பேசாமல் இருக்க , நான் திரும்பத் திரும்ப பேச முயற்சிக்க அவள் என்னிடம் பேச வே இல்லை. இதைப் பார்த்த மற்ற தோழிகள்  மதிய உணவு இடைவேளையில் எங்கள் இருவரையும் தூக்கிச் சென்று ஒருவர் மீது ஒருவரைப் போட்டு ரகளை செய்து சிரிக்க வைத்து , பேச வைத்த நிகழ்வு இன்றும் என்னால் மறக்க முடியவில்லை.

அப்புறம் ... விளையாட்டுப் போட்டிகளில் அங்கிருந்த துறை ஆசிரியை எவ்வளவு கேட்டாலும் ஆர்வத்துக்கு மதிப்பே தர மாட்டார். நான் நிறைய முறை ஏங்கி ஏங்கி அவர் முன் நிற்பேன் , பயிற்சியே தராமல் நிராகரிப்பர் , ஆனால் பருவிற்கு அங்கெல்லாம் வாய்ப்புகள் தானாக வரும் ஒரு வேளை அவள் அப்பா பிடி மாஸ்டர் என்பதாலோ என எண்ணிக் கொள்வேன். எவ்வளவு வேறுபாடுகள் இருந்தாலும் பர்வதத்தை நான் வெறுத்ததோ அன்பு செலுத்த மறந்ததோ இல்லை.

பிறகு 8 , 9ஆம் வகுப்புகளில் கவனம் படிப்பும் , பேச்சு , கட்டுரைப் போட்டியுடன் மட்டும் எங்களுக்கு என்றானது. தொடர்ந்து 10 ஆம் வகுப்பில் முனியப்பன் ஆசிரியர் வீட்டிற்கு டியூஷன் வருவா , அவள ஒரு முறை பசங்க கிண்டல் பண்ணாங்கண்ணு பயந்து சொன்னப்போ கோபம் வந்து அந்தப் பையனை அடிக்கப் போயிட்டேன்.

10 ஆம் வகுப்பு நாங்க படிக்கும் போது புது சில பஸ் , இங்லீஷ் புத்தகத்தில் முதல் பாடம் Jackdow .. புது வார்த்தைகள் மீது நம்பர் (1,2...) தந்திருக்கும்.  அந்தந்த பக்கத்தின் கீழேயே meaning தந்து இருப்பாங்க , நாங்க 2 பேரும் போட்டி போட்டுக் கொண்டு படிச்சுட்டு வருவோம்... 10 ஆம் வகுப்பில் 2  பேருக்கும் பயங்கர போட்டியா இருக்கும். கடைசில அவ ஸ்கூல் ஃபர்ஸ்ட்  435 ம் நான் செகண்ட்  433 என இரண்டு மதிப்பெண் வித்யாசத்தில் பள்ளியில் முதல் இரண்டு இடத்தைப் பிடித்தோம்.

தேர்வு நடக்கும் காலங்களில் 9 , 10 ஆம் வகுப்புகளில் மதியம் எனில் அவங்க வீட்டுக்கு போய் விடுவேன். சில நாள் அவங்க அண்ணா இருப்பாங்க , கொஞ்சம் பயமா இருக்கும். அவர் ஒன்னும் சொல்ல மாட்டார் இருந்தாலும் .. இரண்டு பேரும் எப்போ பாரு புத்தகத்தோடு உள்ளே இருந்து கேள்வி கேட்டு நீயா நானா போட்டி போடுவோம்

நடந்து ரோடில் போகும் போது கூட ஸ்கூல் ரோட்டில் கேள்வி பதிலா பேசிட்டு போட்டியா இருக்கும் .

அவ கொண்டு வர முள்ளங்கி சாம்பார் இன்னும் எனக்கு வாசமடிக்குது. எங்க வீட்ல செஞ்சா சாப்பிடப் பிடிக்காது. பர்வதம் அவளே சமைச்சு எடுத்துட்டு வருவா , ரொம்ப புளி உறப்பா போட்டு ரொம்ப ருசியா இருக்கும். வீட்டுக்குப் போகும் போதெல்லாம் பயத்தம் மாவு உருண்ட வீட்ல செய்தது தருவா..

அடிக்கடி அண்ணா பத்தி சொல்லுவா  , சாமுராய் கதை கேட்டப் போ ,அட நமக்கு அண்ணா இல்லையேன்னு தோணும்

தொடர்ந்து ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்  பயின்று 12 ஆம் வகுப்பு முடிக்க ... முன்பிருந்த நட்பில் சற்றே தொய்வு ஏற்பட்டது. ஏனோ தெரியவில்லை. அங்கும் நான் 12 ஆம் வகுப்பில்  பள்ளியில் இரண்டாமிடம் பெற்றேன். இந்தப் பள்ளியப் பொறுத்தவரை எந்த ஆசிரியரும் பிரிவினை பார்த்ததில்லை. என் விளையாட்டு ஆர்வத்துக்குக் கூட இங்கு நல்ல தளம் கிடைச்சது. ஆனா 12 ஆம்  வகுப்பு போனதால் அதில் ஆர்வம் காட்ட முடியல.

இருவருமே இராசிபுரம் சென்று என்ட்ரன்ஸ் கோச்சிங் போனோம் , காலை 6.1 0 க்கு பேருந்து ஏறிவிடுவோம். எப்போப்பாரு படிச்சுகிட்டே இருப்போம். ஆனா இரண்டு பேருமே பெற்றோரால் அறிவுறுத்தப்பட்டு , மெரிட்டில் கிடைத்த  ஆசிரியப் பயிற்சியில் கோவையில் ஒரே இடத்தில் சேர்ந்து படித்தோம். அப்போ அவங்க அக்கா வீட்டுக்கு (தமிழரசி Tamilarasi Subramaniam அக்கா ) ஈச்சனாரி கூட்டிட்டுப் போவா ....

ஆனா .. அங்கும் நான் வேறு குழு , அவள் வேறு குழு தோழிகளால் வேறு வேறு ஹாஸ்டலில் தங்கி இரு திசைகளில் பயணித்தோம். அதன் பிறகும் BSC கணக்கு இருவரும் ஒன்றாகவே இணைந்து படித்தோம் தபால் வழியில்

ஆனால்பல்வேறு கால கட்டங்களிலும் எனக்கு துணை இருப்பாள். பிறகு ... இருவருக்கும் திருமணம் ஒரு 2 வருட வித்யாசத்தில் நிகழ என் திருமணத்திற்கு என்னோடே வந்து தங்கி திரும்பினாள் , உடன் காயு , எழில் , விலாஸ் எல்லாம் வந்தாங்க .

முதலில் பர்வதத்திற்கே வேலை   கிடைத்தது. எட்டு மாதங்கள் சென்ற பிறகே எனக்கு ஆசிரியர் பணி கிடைத்தது. அதன் பிறகு அப்படியே சிறிது சிறிதாக நெருக்கம் குறைந்தது . ஆனாலும் முக்கியமான விஷேசத்துக்கு கலந்துக்குவோம். என் வீட்டு கிரகப் பிரவேஷத்துக்கு காயுவும் பர்வதமும் காஞ்சிக் கோவிலே வந்துட்டாங்க 2010 இல் ..

அப்புறம் சந்திப்பு முற்றிலும் நின்னு போச்சு. ஆனா எனக்கு பர்வதம் மேல் எப்போதும் தனிப் பிரியம் உண்டு. பிள்ள என்று தான் என்னை அதிகமாக் கூப்பிடுவா ... உம்ஸ்னும் டீச்சர் டிரெயினிங் படிக்கப் போன பிறகு கூப்பிட ஆரம்பிச்சா .

அவ 6 ஆம் வகுப்பில் வானத்து நீல நிறத்துல போட்ட மேக்ஸி , மஞ்சள் நிற மிடி இரண்டும் இன்னும் எனக்கு நினைவு இருக்கு, அப்புறம் டான்ஸ் நல்லா ஆடுவா , ஒஹோ மேகம் வந்ததோ பாட்டுக்கு ரேவதி மாதிரி குடை வச்சு 7 வது ல ஒரு டான்ஸ் இன்னும் ஞாபகம் இருக்கு. பர்வதம் எழுத்து ரொம்ப அழகா இருக்கும் ..ஏ... உனக்கு ஒன்னுமே தெரியல ... வெவரமே இல்ல புள்ள நீன்னு சில சமயம் சொல்லுவா.

நான் எப்பவும் அவள மிஸ் பண்ணக் கூடாதுன்னு நினைப்பேன். சின்ன வயசில் இருந்து நிறைய அவளோட வாழ்ந்து இருக்கேன். இப்போ அதே நாங்க படிச்ச பள்ளியில் கணக்கு பட்டதாரியா ஸ்ட்ரிக்ட் டீச்சரா இருக்கா.

எங்களுக்குள்ள எப்பவும் ஒரு பனிப்போர் இருக்கும். அது கூட இருந்த ஃபிரண்ட்ஸ் உணருவாங்க. ஆனாலும் எனக்கு அவளை ரொம்பப் பிடிக்கும்.

ரொம்ப அன்பா இருக்கும் கணவன் மனைவி அடிக்கடி சண்டை போடுவாங்கன்னு சொல்வாங்க .. அது மாதிரி எங்க அன்பு. ... ரொம்ப ஜாஸ்தி ..

லவ் யூ பர்வதம்❤️🎈

உமா

No comments:

Post a Comment