Tuesday 7 April 2020

நான் கண்ட நால்வர்

நான் கண்ட நால்வர் 

ஆசிரியர் :வெ . சாமிநாத சர்மா

வெளியீடு : பிரபஞ்ச ஜோதி பிரசுராலயம் 

நான் கண்ட நால்வர் என்ற இந்த நூல் மிகவும் அருமையான ஒரு நூல் .ஏறக்குறைய அறுபது ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டு  1959இல் வெளிவந்துள்ளது.

சாமிநாத சர்மா பத்திரிக்கை துறையில் பணி புரிந்திருக்கிறார் அப்பொழுது அவர் அறிந்து கொண்ட நான்கு  மனிதர்கள் குறித்தும் அவர்களுக்கும் சர்மாவுக்கும் இடையே இருந்த உறவுகளை . அன்றாட நிகழ்வுகளின் மூலம் மிக அழகாகப் பதிவு செய்துள்ளார். இதை வாசிக்கும் பொழுது நமக்கு ஒரு நூற்றாண்டுக்கு முன்பு இருந்த இந்தியாவினுடைய சூழலில் தமிழகத்தில் நடைபெற்று வந்த குறிப்பிட்ட இதழ்கள் , பத்திரிக்கை துறையின் மனிதர்கள், அவற்றின் செயல்பாடு ஓரளவுக்கு விளங்குகின்றது. 

 திரு வி கல்யாண சுந்தரனார், வா வே சு ஐயர், பாரதியார் , சிவம் இவர்களைக் குறித்து தான் அவர் எழுதியிருக்கிறார் .அட்டைப்படத்தில் இவர்களுடைய படங்கள் எந்த வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளதோ அதே போல அவர்களோடு நான் நெருக்கமாக இருந்திருக்கிறேன்  என்று நூலில் வெ.சாமிநாத சர்மா குறிப்பிட்டுள்ளார்.

 தேசபக்தன் மற்றும் நவசக்தி இதழ்களில் முக்கிய பத்திரிக்கையாளராக உதவி பத்திரிக்கையாளராக பணிபுரிந்த அனுபவங்களை அப்போது இந்த மாமனிதர்கள் உடன் ஏற்பட்ட நெருக்கமான தொடர்புகளை தான் இந்த புத்தகம் வழியாக நமக்கு பதிவுசெய்கிறார். ஆச்சரியமா இருக்கு பத்திரிக்கை துறை நேர்கொண்ட பார்வையோடு இருந்திருக்காங்க என்பதை  அங்கங்கே பதிவு செய்திருக்கிறார்.

திரு வி கல்யாண சுந்தரனார் ,வா வே சு ஐயர், சுப்பிரமணிய சிவம், சுப்பிரமணிய பாரதி ஆகியோருடன் சேர்ந்து இந்த நூலாசிரியர் அவர்களோடு கொண்டிருந்த தொடர்பில் பல தருணங்களில் நமக்கு சொல்லப்பட்டிருப்பதால் இதனை நாம்  ஐந்து பேருடைய வாழ்க்கை வரலாற்று நூலாகவே எடுத்துக்கொள்ளலாம் .

இதன் அட்டைப் படமும் நான் கண்ட நால்வர் 

வெ . சாமிநாத சர்மா என்று குறித்து வரிசையாக , திரு வி கா , வா வே சு ஐயர், சுப்பிரமணிய சிவா, பாரதியார் என்று ஒவ்வொருவருடைய படங்களும் அழகாக கொடுக்கப்பட்டுள்ளன பிரசுரம் செய்த இந்த பிரபஞ்ச ஜோதி பிரசுராலயம் இந்த நூல் குறித்து பேசுகிறது ,அதில் எழுத்துப் பணியை தனது இலட்சியமாகக் கொண்ட இந்த நூலாசிரியர் நால்வருடன் தம்மையும் இணைத்துக் கொண்டது பொருத்தமாக இருக்கிறது.

 அதோடு இவரும் சரி இந்த நால்வரும் சரி உண்மையான நாட்டுப்பற்று நாட்டு பற்று உடையவர் என்பதனை நாம் அவர்களின் பணியாற்றிய பத்திரிக்கைகள் வாயிலாக அறியமுடிகிறது அந்தப் பத்திரிகைகள் தேசியத்தை அடிப்படையாகக் கொண்டவை தேசிய உணர்ச்சியைத் தட்டி எழுப்புவதற்கு என்று ஏற்பட்டவை என்றெல்லாம் குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன . சிறந்த கொள்கைக்காகவே பொருள் நஷ்டம் அடைந்து தன்னை மாய்த்துக் கொண்ட பத்திரிகைகள் என்று குறிப்பிடும் பொழுது , பத்திரிக்கையை குறித்த ஒரு புரிதல் பத்திரிக்கையை நடத்துவதற்கான சூழல் இப்படியெல்லாம் இருந்தால் அது ஜனங்களிடம் போய் சேருகிறது, வியாபார நோக்கம் இல்லாமல் எவ்வாறு இந்த பத்திரிக்கைகள் நடத்தப்பட்டன, அதில் இவர்கள் எல்லாம் எவ்வாறு பணிபுரிந்து இருக்கிறார்கள் என்று நமக்கு ஒரு தெளிவு பிறக்கிறது .

இதில் குறிப்பிடப்பட்டுள்ள திரு வி க,  வா வே சு ஐயர் , பாரதி மூவரும் தமிழ் பத்திரிக்கை உலகத்தின் ஜீவநாடியாகவும்  அவர்களுக்கு உறுதுணையாய் இருந்தவர் சிவம் என்பதும் ஆனால் இந்த நால்வருக்கும் தேசபக்தி என்ற பொது நோக்கு அவர்களோடு பின்னி  இருந்தது. அதை சுற்றி வளர்ந்ததுதான் இந்த சாமிநாத சர்மா அவர்களுடைய வாழ்க்கை என்றும் குறிப்பிட்டவற்றை வைத்து உணர முடிகிறது. 

  முதலில்  திரு வி கல்யாண சுந்தரனார் பற்றி குறிப்பிடுகிறார் அவருடைய வாழ்க்கை வரலாற்றைத்  தெரிந்துகொள்ள முடிகிறது ஆரம்ப காலத்தில் ஸ்பென்சர் என்ற ஒரு இடத்தில் பணி புரிந்திருக்க அதன் பிறகு,

சென்னை , ஆயிரம் விளக்கு பகுதியில் ஒரு பத்து வருட ஆண்டு காலம் ஆசிரியராக பணியாற்றி இருக்கிறார்.

 இந்த  நால்வருக்கும்  நிறைய ஒப்புமைகள் இந்த புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார் சர்மா. தமிழுக்கு  முக்கியத்துவம் கொடுத்தவர்கள் அதே சமயத்தில் சமயசார்பற்ற , நாட்டுப்பற்று மிக்கவர்கள் .திரு வி கா வை முதலியார் என்றே குறிப்பிடுகிறார் அவர் தமிழ் முனிவர் என்று அழைக்கப்பட்டிருக்கிறார். தமிழ் முனிவர் என்ற தலைப்பில் வாழ்க்கை வரலாறு குறித்து எழுதப்பட்டுள்ள பகுதி முழுவதும் இருக்கின்றது. இதில் அவருடைய கையெழுத்தும் இடம்பெற்றுள்ளது . திருவாரூர் அவர் பிறந்த இடத்தையும் வி என்பது விருத்தாசல முதலியார் அவருடைய தந்தையை குறித்தும் கல்யாணசுந்தரனார் என்று பெயர் காரணம் கொடுத்து அவருடைய பள்ளி வாழ்க்கை .அவர் படித்தது, தமிழுக்காகவே தன்னை தமிழ் வளர்ப்பதற்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்து உள்ளார் .

இவருடைய வாழ்க்கை வரலாறு இராயப்பேட்டை, திநகர் பகுதியிலேயே குறித்து பேசப்பட்டிருக்கிறது திலகரின் பேச்சையும் காந்தியடிகளின் அஹிம்சை குறித்த உரைகளை  அத்தனையும் தேசபக்தன் இதழில் தொடர்ந்து வெளியிட்டிருக்கிறார்கள் . நவசக்தி இதழ் உருவாகுவதற்கான காரணங்கள் இதில் பேசப்பட்டுள்ளன.

 தேசபக்தன் இதழ் எவ்வாறு ஹோம்ரூல் இயக்கத்திற்கு துணை செய்திருக்கிறது காந்தியடிகள் நேரு இவர்களுடைய கருத்துக்களையும் உடனுக்குடன் பதிவு செய்யும் இதழாக தேசபக்தன் இருந்திருக்கிறது , படிக்கும் பொழுது , அது இன்றைக்கு இருக்கக்கூடிய பத்திரிகையாளர்களையும் நம்மை இதில் ஒப்பிட வைக்கிறது .

திரு வி க , தேசபக்தன் இதழில் பணியாற்றிய விபரங்கள் குறித்தும் அதைத் தொடர்ந்து அங்கிருந்து வெளியேறி நவசக்தி இதழ் நடத்திய விவரங்கள் குறித்தும் அப்போது இவருக்கு உடன் நின்றவர்கள் அப்போதைய அரசியல் சூழல் அனைத்தும் பதிவு செய்யப்பட்டுள்ளன தொழிற்சங்க பணிகளில் தன்னை அவர் இவ்வாறு ஈடுபடுத்திக் கொண்டார் தொழிலாளர் நலனுக்காக அவர் அனுபவித்த துன்பங்கள் குறித்தும் விரிவாக பதிவு செய்யப்பட்டுள்ளன.

தனது இறுதிக் காலங்களில் பார்வையை இழந்து துன்பப் பட்டுள்ளார் அப்போது கூட அவருடைய நூல்கள் நிறைய வெளிவந்துள்ளன. அதற்கு அப்போது அவருக்கு நாராயணசாமி முதலியார் என்பவர் உதவி புரிந்துள்ளார். அவருடைய வாழ்க்கையில் முக்கியமான நிகழ்வுகள் அவருக்கு பிடித்த இடம் அவருக்கும் சர்மாவுக்கும் இடையே அன்றாடம் நிகழ்ந்து வந்த சம்பாஷணைகள் , இவர்கள் இருவரும் கடற்கரையில் நடைபயிலும் போது பேசிக்கொண்டது, அரசியல் குறித்த பார்வை, தேசபக்தன் இதழில் பணிபுரியும் போது ,சர்மா இருவருக்குமான உறவு என்று பலவாறு பதிவுசெய்யப்பட்டுள்ளன.  

எல்லோருடைய வாழ்க்கையிலும் யாராவது ஒருத்தர் ஒரு வாய்ப்பைத் தருவதும்  அல்லது வழிகாட்டுவதும் அல்லது துணை நிற்பதோ தான் நிகழும் , அதுவே கூட ஒருவரை வாழ்க்கையில் உயர்த்தும். அப்படியான ஒரு அதிகபட்ச உதவியை தனது வாழ்வில்  வாய்ப்பாக வழங்கியிருக்கிறார் திரு.வி.க என சர்மா விரிவாகப் பதிவு செய்துள்ளார்.

 தொடர்ந்து அந்தண்மையின் அணிகலன் என்று வா வே சு ஐயர் பற்றி , சர்மா இந்நூலில் குறிப்பிட்டுள்ளார் .வவேசு ஐயருடைய வாழ்க்கை வரலாறு அவருக்கு சர்மாவுக்கும் இடையேயான உறவு , தேசபக்தன் இலிருந்து திருவிக விலகிய பிறகு அந்த இடத்திற்கு வந்து சேர்கிறார் வா வே சு ஐயர். அவர்   தமிழ், சமஸ்கிருதம் , ஹிந்தி, வங்காளி ,ஆங்கிலம், பிரெஞ்சு, கிரேக்கம், லத்தீன் என்று பன்மொழி புலமை கொண்டவராக இருப்பது பல இடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஏறக்குறைய திரு.வி.கவும் இவரும் அதாவது சர்மாவினுடைய வாழ்க்கையில் சரியான நேரங்களில் ஒரு தளத்தை அமைத்துக் கொடுத்துள்ளனர் . க்வின் மேரிஸ்காலேஜ் பகுதியில்  அவர்கள் அமர்ந்து பேசியது ,அரசியல் குறித்தும் ' ஐயர் தேசபக்தனில் அவரே அறியாமல் வந்த ஒரு கட்டுரைக்காக பெல்லாரியில் ஒன்பது மாத காலம் சிறையில் இருந்தது என , பல விஷயங்கள் இதில் புலப்படுகின்றன.

 எல்லா இடங்களிலும் எட்டப்பன்கள் இருக்கின்றார்கள் என்று அப்போது நடந்த நிகழ்வுகள் வழியாக தெரிகிறது . வாவேசு ஐயர்  வாழ்க்கை வரலாறு குறித்தும் நாம் விரிவாக அறிந்துகொள்ள முடிகிறது. வழக்கறிஞராக கனவை சுமந்து பாரிஸ் செல்வதும், அங்கு இந்திய விடுதலைக்கான கருத்தில் எல்லாம் எப்படி மாறிப் போனது என்பது குறித்தும் வரலாறாகக குறிப்பிட்டுள்ளது சுவாரஸ்யமாக இருக்கிறது. 

 அவருக்கும் பாரதியார் ஆகியோருக்கான உறவு குறித்தும் சாவர்க்கர் இருவருக்குமான நட்பு குறித்தும் நிறைய தகவல்கள் இதில் பதிவு செய்யப்பட்டுள்ளன இந்த இரண்டாம் பகுதி முழுக்க வா வே சு ஐயரை, ஐயர் என்று குறிப்பிட்டு பேசுகிறார் சர்மா . தன் பெண் குழந்தையுடன் அருவியில் சிக்கி இறந்து விடுகிறார்  என்பது சற்று வருத்தமே .

இவர் குறித்தும் சரி,  சிவம் , பாரதியார் அனைவருடைய பகுதிகளிலுமே விடுதலைக்காக வேடங்கள் போட்டு தப்பித்த விதங்கள் அனைத்தும் பேசப்பட்டுள்ளன. போலீசாரின் பிடியில் இவர்களெல்லாம் எப்படி சிக்கினார் எப்படி சிக்காமல் தப்பித்துக் கொண்டனர் என்ற வரலாறுகள் நம்மை படிக்கும்பொழுது கண்முன்னே நிகழ்வுகளைக் கொண்டு வர வைக்கின்றது நூல் .

நால்வருடைய கையெழுத்துப் பிரதிகள் இந்தப்  புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. ஐயருக்கு பிறகு நம்மோடு வருபவர் தியாகசீலர் என்று குறிப்பிடப்பட்டுள்ள சுப்பிரமணிய சிவம். இவருடைய வாழ்க்கை வரலாறும் இவருடைய பெயர் எவ்வாறெல்லாம் மாற்றப்பட்டு இறுதியில் சிவா என்று மாறியதோ என்பதும்,  இவர் சிறையில் பட்ட துன்பங்களும் இவர் வீட்டிலேயே இருக்கும் போது எவ்வாறு காவலர்களின் பிடியில் சிக்கினார் எவ்வாறு நடத்தப்பட்டார் என்ற கதைகள் , ஹோம்ரூல் இயக்கம் அன்னிபெசன்ட் குறித்து தேசபக்தன்

எழுதுவது அதற்கு இவர்  எதிர்ப்பு தெரிவிப்பது இப்படி பல தகவல்கள் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளன.

 சுப்பிரமணிய சிவம் தன்னுடைய வாழ்க்கையில் எவ்வாறு ஒரு விடுதலைப் போராட்ட வீரராக மாறுகிறார் கடவுள் பக்தராக எவ்வாறு மாறினார் அதற்கான சில அத்தியாயங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

இவர்களோடு வ உ சிதம்பரனார் திலகர் காந்தி அடிகள் இவர்கள் குறித்த சில தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன இவர் 41 வயதிலேயே இறந்துவிட்டது கூட வருத்தமாகத்தான் உள்ளது. 

இறுதியாக நம்முடன் இந்த நூலில் வருபவர் பாரதியார் கவிக்குலக்கோன்  என்று பாரதியார் குறித்து இவர் அறிமுகம் செய்கிறார்..

 பாரதியாரையும்  சர்மா தேசபக்தன் வழியாகத்தான்  சந்தித்திருக்கிறார் .பரலி நெல்லையப்பர் தேசபக்தனில் பணியாற்றிய பத்திரிக்கை ஆசிரியர் , இவருக்கு பாரதியை  அறிமுகம் செய்கிறார் .சுப்பையா எவ்வாறு பாரதியாக பெயர் மாற்றம் பெறுகிறார் எனவும் அவரது குடும்பம் குறித்தும் , அவருக்கும் நெல்லையப்பருக்கு உள்ள தொடர்பு பாரதியாரின் எழுத்துக்கள் தேசபக்தனில் வெளியிடுவது குறித்த தகவல்கள் என்று பல செய்திகள்  இங்கு பகிரப்பட்டுள்ளன.

பாரதியார் மட்டுமல்ல மற்ற சுப்பிரமணியம் சிவா ஐயர்  உட்பட அனைத்து விடுதலைப் போராட்ட வீரர்களுக்கும் பாண்டிச்சேரி எவ்வாறு ஒரு மறைவிடமாக இருந்தது எனவும் ,பாரதியார் எவ்வாறு நேருக்குநேர் பேசுகிறார் என்பதை ஒரு கூட்டத்தில் எவ்வாறு நடந்து கொண்டார் மற்றவர்கள் முகம் சுளிக்கும் படி ஆனால் அவருடைய இயல்பு என்ன என்ற செய்திகளும் இங்கு பதிவு செய்யப்பட்டுள்ளன.இந்து பத்திரிக்கையின் வாசுதேவாய குறித்தும் 

சொல்லப்பட்டுள்ளது. 

இந்த நூலின் 238 ஆம் பக்கம் …

பாரதியார் உயிரோடு இருந்த காலத்தில் அவரை தமிழ்நாடு சரியாக அறிந்துகொண்டு ஆதரிக்கவில்லை என்று அவரை வறுமையில் வாட விட்டது என்றும் சிலர் கருதுகின்றனர். பாரதியார் மீதுள்ள அன்பினாலும் மதிப்பினாலும் இவர்கள் இப்படிக்  கருதுகிறார்கள் என்றுதான் சொல்லவேண்டி இருக்கிறது . உண்மையில் இவர்கள் வருந்துகின்ற படி ஆழ்ந்த வறுமையில் இருக்கவில்லை ,ஆனால் பொருளாதார வசதி மிகுந்தவராகவும் இருக்கவில்லை …

என்று குறிப்பிடப் பட்டுள்ளது .

இவரது 1920 இல் சுதேச மித்திரன் உதவி ஆசிரியர்  பணி - (அப்போது மாத சம்பளம் 100 ரூபாய் இவருக்கு ), இந்தியா பத்திரிகை பணி , கர்ம யோகி , விஜயா போன்ற பத்திரிகைகளையும் நடத்தியது , இவர் தோற்றுவித்த சென்னை ஜன சங்கம் குறித்தும் , பாரதி சுதேசி சாமான்கள் மட்டும் விற்ற ஒரு கடையை ஆரம்பித்தார் என்பது பற்ற்யும் அறிய முடிகிறது. முதன் முதலாக வெளியான பாரதியாரின் நூல் 'ஸ்வதேச கீதங்கள் ' . 

பிறகு அதே சுதேசமித்திரனில் பணியாற்றிய போது தமது நூல்களை வெளியிட , அப்போது சென்னையில் நடைபெற்று வந்த 'தமிழ் வளர்ப்புப் பண்ணை ' என்ற ஸ்தாபனத்தின் பெயரில் விளம்பரம் செய்து , 40 புத்தகங்களாக 

வெளியிடத் திட்டமிடுகிறார், பண உதவி கேட்டு கடிதம் எழுதுகிறார் ,ஆனால் அப்போது மக்கள் ஆதரவு இல்லை , அவரது வாழ்நாளில் நடைபெறாமல் போயுள்ளது. 

எல்லோரும் அறிந்து வைத்திருப்போம். திருவல்லிக்கேணியில் வசித்து வந்த போது தினந்தோறும் பார்த்த சாரதி கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் பெற்று , அங்கு தரும் தேங்காய் பழத்தை யானைக்குக் கொடுத்து வரும் பழக்கம் வைத்திருந்த பாரதி,  ஒரு நாள்யானைக்கு மதம் பிடித்தது தெரியாமல் எப் போதும் போல் அருகில் செல்ல , துதிக்கையை வீச அதன் காலடியில் விழுந்து மூர்ச்சையாகிட , ஒடி வந்த குவளை கிருஷ்ணமாச்சாரியார் வீட்டில் கொண்டு சேர்க்கிறார். ஆனால் வழக்கம் போல பத்திரிகாலயம் சென்று சில சொற்பொழிவுகளை நிகழ்த்தினாலும் வயிற்று வலியால் உடல் நலம் மோசமாகி 1921 செப்டம்பர் 11 இரவு 1 மணிக்கு உயிரை  விட்டிருக்கிறார். 

இந்த நான் கண்ட நால்வர் என்ற நூலில் வெ.சாமிநாத சர்மா தந்துள்ள தகவல்களால் நாமும் நால்வர் குறித்தும் அறிந்து கொள்ள முடிகிறது. கல்கி இரா . கிருஷ்ணமூர்த்தியும் சர்மாவுடன் உதவி ஆசிரியராகப் பணியாற்றியுள்ளர் . இங்கு வரும் 4 பேரும் ஆயிரத்து எண்ணூறின் இறுதி முதல் 1925க்குள் வாழ்ந்தவர்களாக இருக்கின்றனர். 

இவர்களைக் குறித்து யாரோ எழுதிய வரலாறுகளையும் , பாடப் புத்தகங்களிலும் படித்ததை விட , கூடவே நெருங்கி வாழ்ந்த ஒருவர் எழுதியிருப்பதை வாசிக்கும் போது சற்று கூடுதல் புரிதல் கிடைக்கிறது.


No comments:

Post a Comment