Monday 27 April 2020

பார்த்திபன் கனவு

பார்த்திபன் கனவு

அமரர் கல்கியின் பார்த்திபன் கனவு , இது 

  ஒரு வரலாற்று நாவல். 168 பக்கங்களையும் 77 அத்தியாயங்களாக மூன்று பாகங்களைக் கொண்டுள்ளது .இன்றைய காலகட்டத்தில்  எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு , இதைப் படித்தால் புதியதொரு உலகில் இருப்பதாகத் தோன்றுகிறது. ஆம் , இந்த வரலாற்று நாவலின் காலகட்டத்திற்கு நம்மை அழைத்துச் செல்கிறது . இந்த புத்தகத்தை 

25 வருடங்களுக்கு முன் ஏற்கனவே வாசித்த  அனுபவம் இருந்தாலும் , தற்போது வேறு மாதிரியான மனநிலையில் வாசிக்க முடிகிறது. . 

சோழ வம்சத்தின்  பார்த்திப மகாராஜாவின் கனவு எத்தகையது, அதைக் காப்பாற்றி நனவாக்க மகன் விக்கிரம சோழன் எடுக்கும் முயற்சிகள் , சோழ ராணி அருண்மொழி தேவியின் பங்கு ,காஞ்சி மகேந்திரவர்ம  சக்க வர்த்தியைத் தொடர்ந்து நரசிம்ம வர்ம பல்லவரின் ஆட்சி, சிவனடியாராக , ஒற்றனாக எனப் பல வித வேஷங்கள் , இளவரசி குந்தவை, படைத் தளபதியாக இருந்து சிறு தொண்டர் சிவனடியாராக மாறிய பல்லவ வீரர்  பரஞ்சோதி , சோழ நாட்டின் குள்ள நரி மாரப்ப பூபதி , நரபலி கூட்டத்தின் அட்டகாசங்கள் இப்படி நாவல் முழுவதும் நம் மனதை இதிலிருந்து அகலவைக்காத கதை மாந்தர்களும் காட்சிகளும் படிக்க படிக்க சற்றும் மாறாமல் கற்பனையில் பயணிக்க வைக்கிறது. 

கப்பம் கட்ட மறுக்கும் சோழ மன்னன் பார்த்திபன் , சிற்றரசு என்றாலும் பிரம்மாண்ட பல்லவ சைன்யத்தை எதிர்த்து  போரில் உயிர் துறக்கிறான். உயிரை விடும் போது மாறு வேடத்தில் சிவனடியாராக இருப்பவரிடம் தனது மகனை வீரனாக வளர்க்க வரம் கேட்டு மடிந்து விட , இளவரசன் வீரனாக வளர்ந்து வரம் கொடுத்த சிவனடியாரின் வாக்குறுதியைக் காப்பாற்றுகிறானா என்பதும் தந்தை சித்திர மண்டபத்தில் வரைந்து பாதுகாத்த அவரது கனவு உருவங்களுக்கு உயிர் கொடுக்கிறானா என்பதும் தான் கதை. 

படகோட்டி பொன்னனும் அவனது மனைவி வள்ளியும் கூட முக்கிய கதாபாத்திரங்கள்  , நாவலில் இடம்பெறும் குதிரைகளும் நினைவில் வைத்துக் கொள்ளும் சிறப்பாக கதைக்குள் பயணிக்கின்றன. ஆயனச் சிற்பியின் வீடு , அங்கிருக்கும் மூதாட்டி ,உறையூர் மாளிகை , காவிரிக்கரை , குள்ளன் , காட்டாற்று வெள்ளம், இயற்கை வளம் , வள்ளி சுடும் அடை , வள்ளியின் தாத்தா , அவரின் வீரம் அனைத்தும் கூட  மனதில் நிற்கின்றன. செண்பகத் தீவு , ரத்தின வியாபாரியாக மாறு வேடத்தில் உறையூர் சென்ற விக்கிரமன் , கரிகாற் சோழன் உட்படமூத்த அரசர்கள் பலரும் பயன்படுத்திய ரத்தினம் பதித்த வாளும் , திருக்குறள் ஓலைச்சுவடியும் தான் பார்த்திப ராஜா தன் மகனுக்கு தந்து செல்லும் முக்கியமான பரிசு. அதை மீட்டானா ? இல்லையா .. என்பது கூட கடைசி வரை நமக்குள் பயணிக்கும் எதிர்பார்ப்பு. 

மாமல்லபுரத்தின் சிற்ப வேலைப்பாடு , அதன் சிற்ப சிறப்புகளின் பின்னணி குறித்தும் அழகாக சொல்லப்படும் இடங்கள் நாவலில் உள்ளன . வாதாபி போரில் தோல்வியுற்ற புலிகேசியின் தம்பி நீலகேசி தான் ஒற்றைக் கையனாக வந்து நரபலி தரும் முறையை தமிழகம் முழுக்க பரப்புவதும் , இறுதியில் கடவுள் பேர் கொண்டு மக்களை இருளாக்கி அழிக்கும்  இந்த சூழ்ச்சியை பரஞ்சோதி தெளிவுபடுத்துவதும் சிறப்பான பகுதி 

ஒரு வரலாற்று நாவல் கதை அமைப்பு , சொல்லும்  நடை , சொற்களின் பயன்பாடு என நம்மை மகிழ்ச்சியுடன் வாசிக்க வைக்கிறது. 

உமா

No comments:

Post a Comment