Saturday 18 April 2020

அம்பேத்கர் கல்விச் சிந்தனைகள்

அம்பேத்கர் கல்வி சிந்தனைகள் 

தொகுப்பு ரவிக்குமார் , புத்தகங்களுடன் புத்தாண்டு கொண்டாட்டம் 2008 இல்,  அப்போது இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாளராக இருந்த ஜி . செல்வா அவர்களது தலைமையில் 25 புத்தகங்களை தொகுத்து இருக்கின்றனர் . சில புத்தகங்களை நான் ஏற்கனவே வாசிப்பில் எழுதியிருக்கிறேன் , அந்த இருபத்தைந்து நூல்களில் மற்றொன்றாக  இந்த, அம்பேத்கர் - கல்விச் சிந்தனைகள்.

இன்று அம்பேத்கருடைய 129 வது பிறந்தநாள்,  இந்த நாளில் இப் புத்தகத்தைத்

குறித்து வாசித்து எழுதுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஆம் , அண்ணல் அம்பேத்கரை நினைவு கூறும் பொழுது,  நாம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய சட்ட மேதையாகப் பார்க்கிறோம் . தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகப் பாடுபட்ட தலைவராகப்  பெரும்பாலான இடங்களில் குறிப்பிடுவதைப் பார்த்திருப்போம் ஆனால் அவருக்கு பல்வேறு பரிமாணங்கள் உண்டு.

அறிஞர் அம்பேத்கார் கல்விக்காக  தொடர் போராட்டங்களில் எடுத்த முயற்சிகள் அரசுக்கு அனுப்பிய  ஆவணங்கள் குறித்து தொகுக்கப்பட்ட நூல். அம்பேத்கரின் கல்வி சிந்தனைகள் நூலில்  மூன்று கட்டுரைகள் தொகுக்கப் பட்டுள்ளன. தாழ்த்தப்பட்ட மக்களின் கல்விப் பிரச்சினைகள் குறித்து முதல் கட்டுரையும் இரண்டாவதாக தீண்டப்படாதவர்களின் கல்விக்காக பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் செய்தது என்ன என்று ஒரு ஆய்வறிக்கையும் பல்கலைக்கழக சீர்திருத்தம் பற்றி அம்பேத்கருடைய கருத்துக்கள் என்று மூன்று கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன.

1800 களின் இறுதி வரையிலும்  அமெரிக்காவில் கருப்பின மக்களுக்காகக்  கல்வி மறுக்கப்பட்டது போன்றே , நமது இந்தியாவிலும்  பிரிட்டிஷாரின் ஆட்சி காலத்தில் 1854 வரை தாழ்த்தப்பட்ட  மக்களுக்கான பள்ளிகள் கூட தொடங்கப்படாமல் இருந்த ஒரு வரலாறு பதிவு செய்யப்பட்டுள்ளது , 1855 இல் தான் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக ஒரு தனியான பள்ளிக்கூடத்தை இந்த ராஜதானியில் பிரிட்டிஷ் அரசு துவங்கி இருக்கிறது ஏறத்தாழ உலகம் முழுக்க உள்ள தாழ்த்தப்பட்ட மக்கள் அனைவருக்குமே ஆங்காங்கு கல்வி மறுக்கப்பட்டு வந்தது ஒப்பிட்டுப் பார்க்க முடிகிறது

விஞ்ஞானம் பொறியியல் கல்வியில் உயர்கல்வி தாழ்த்தப்பட்ட மக்கள்  பெறவேண்டும் என்று ஏராளமான வேண்டுகோளைக் கருத்துக்களாக, தொடர்ந்து அரசுக்கு அளித்து வந்திருக்கிறார். அவர்கள் வெளிநாடுகளின் பல்கலைக்கழகங்களில் உயர்தரக் கல்வி பெறுவதற்கும் மானியங்கள் அளிக்க வேண்டும் எனவும் அவரது சிந்தனை விரிந்துள்ளது.

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு என்ற முறைமையே இவருடைய அழுத்தமான கருத்துக்களால் தான் இன்று நடைமுறையில் உள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். கல்வி உரிமைச் சட்டம் 2010 னுடைய ஒரு கூறு பள்ளி மேலாண்மைக்குழு .அதில் பெண்களுக்கு முக்கியத்துவம்  அளிக்கப்பட வேண்டும் என்று இன்று நடைமுறையில் உள்ளது. ஆனால் 1950 மத்திய கல்வி ஆலோசனை குடும்பத்தில் தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு பிரதிநித்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்ற ஒரு கருத்தை குறிப்பிட்டிருக்கிறார் டாக்டர் அம்பேத்கார். ஆம் , அந்த 10 பேரி அடங்கிய குழுவில்  குறைந்தது ஒருவராவது பெண்மணியாக இருக்க வேண்டும் என்று அன்றே கேட்டுள்ளார்.

 தாராளமாக  இந்திய அரசிற்கு இவர் கல்வி குறித்து அளித்துள்ள ஆலோசனைகளை இந்த புத்தகம்   அறிவிக்கின்றது. கல்வி நிறுவனங்களும் அவர்களுக்கு வழங்கப்படக் கூடிய மானிய தொகை குறித்த பட்டியல் 1881 க்குப் பிறகானவை இணைக்கப்பட்டுள்ளன. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கொடுக்க வேண்டியது என்று ஒவ்வொரு கடிதத்திலும் இவர் பல வகையான மான்யங்கள் , சலுகைகள் உள்ளிட்டக் கருத்துகளைக் குறிப்பிட்டுள்ளார்.

1813 ஆம் ஆண்டு முதல் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் கடைபிடித்து வந்த கல்விக்கொள்கையில் அம்பேத்கர் விரிவாக ஆராய்ந்துள்ளார்.கல்வி நிலையை அறிவதற்காக அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட ஹன்டர் கமிஷன் அறிக்கையில் தரப்பட்டிருந்த புள்ளிவிவரங்கள் எல்லாம் எடுத்துக்காட்டி தாழ்த்தப்பட்ட மக்களின் கல்வி மேம்பாட்டுக்காக அரசு செய்ய வேண்டியவற்றை மனுவில் விவரித்துள்ளார். சைமன் கமிஷன் முன்பு அம்பேத்கர் சமர்ப்பித்த மாத இறுதியில் முன்வைக்கப்பட்டுள்ள கருத்துக்கள் மிக முக்கியமானவை. 

  பொதுக்கல்வி என்பது இருந்தாலும் அதற்கான பள்ளிக்கூடங்களில் அவர்களுக்கு இடம் இல்லை எந்த மாதிரி எல்லாம் அவரைப் புறக்கணிக்கப் பட்டார்கள் என்று,  சிறு விளக்கத்தை ஆனால் அழுத்தமாக இந்தப் புத்தகத்தில் நிறைய இடங்களில் குறிப்பிட்டுள்ளார், வரலாற்று தரவுகளின் அடிப்படையில் , புள்ளிவிவரங்கள் அதிகமாக கொடுத்து அரசிற்கு தொடர் அழுத்தம் கொடுத்தது நிலை தான் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்று அறியலாம் 

பள்ளிக் கல்வி , உயர் கல்வி என இரண்டிற்கு மாக ஏராளமான முயற்சிகளைச் செய்துள்ளதை அறிய முடிகிறது. இன்று நாம் வகுப்பறையில் அமர்ந்துள்ள SC , ST, என்ற பிரிவு மாணவர்கள்  உதவித்தொகை பெறுகிறார்கள் என்றால் அதற்கு ஆதாரமாக ஒன்றரை நூற்றாண்டுக்கு முன்னர் அம்பேத்கருடைய தொடர்போராட்டம் இருந்திருக்கிறது என்று நாம் நினைத்து பார்க்க வேண்டும். அதேபோல இன்று நமது வகுப்பறையில் இருக்கக்கூடிய ஒவ்வொரு குழந்தையும் புரிந்து கொள்ள வேண்டியது ,

நமக்கான கல்வி உரிமை இருந்தும் அது எவ்வாறு பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் மறுக்கப்பட்டது , சட்டம் இருந்தாலும் நமக்கு பள்ளிகளில் இடம் இல்லாத இருந்த சூழ்நிலை மாறி இன்று சக மாணவர்களுடன் இணைந்து வகுப்பறையில் பயிலும் சூழல் வெகுவாக மாறி உள்ளது . இன்னும் பல இடங்களில் சாதி குறித்த பிரச்சினைகள் இருந்தாலும் பெரும்பாலான இடங்களில் கல்வி இப்பொழுது மாற்றம் கண்டு தாழ்த்தப்பட்ட மக்கள் பெண்குழந்தைகளுக்கான கல்வியில் முன்னேற்றம் அடைந்திருக்கிறோம். 

இது போன்ற  உண்மையான வரலாறுகளை நம் குழந்தைகளுக்கு நாம் சொல்ல வேண்டும் அதற்காக ஆசிரியர்கள் இந்த புத்தகத்தை வாசிக்க வேண்டும். சாவித்திரிபாய் பூலே எப்படி பெண்களுக்கான கல்விக்கு உயிர் கொடுத்தாரோ,  அதே போல தாழ்த்தப்பட்ட மக்களுடைய கல்வி குறித்து அரசியல் அமைப்புச் சட்டத்தில் அவர்களுக்கான ஒதுக்கீடு இவற்றையெல்லாம் கொண்டு வந்தவர் அம்பேத்கர். அதனால்தான் இன்று அவரை நாம் கொண்டாடுகிறோம் 

இந்தப் புத்தகத்தை வாசிக்கும்போது தோன்றுவது ஒன்றே ஒன்றுதான் உலகின் எல்லா பகுதிகளிலும் மக்களிடம் தீண்டத்தகாதவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்ற பிரிவினர்க்கு கல்வி மறுக்கப்பட்டு இருக்கிறது. அங்கெல்லாம் இவர்களைப் போன்ற விடிவெள்ளிகள் கடின உழைப்பையும் அர்ப்பணிப்பையும் தந்து சமூக மாற்றத்தை சாத்தியப்படுத்தியுள்ளனர் என்பதற்கு இந்தப் புத்தகம் மேலும் ஒரு உதாரணம். 

No comments:

Post a Comment