Friday 13 March 2020

வாசிப்பு _ அவளோசை

அவளோசை 

இதை எழுதிய கவிதா செந்தில்குமாரை பாராட்டியே ஆகவேண்டும். இந்த உலகின் மொத்தப் பெண்களும் இந்தக் கதையின் ஏதோ ஒரு வரிக்குள் அவர்களது குரலைக் காண முடியும். பெண் அடிமைத் தனம் , பெண்ணியம் ,பாலியல் பிரச்சனை , பால் சமத்துவம் , பெண் சுதந்திரம் என்ற வார்த்தை கனங்களைத் தனக்குள் புதைத்து , அவற்றைத் தாண்டி சராசரி பெண் என்ற ஒரு உயிரின் சராசரி வாழ்க்கையைப் பேசுகிறது புத்தகம் . 

ஜெயந்தன் போன்றவர்கள் தான் ஒவ்வொரு குடும்பத்தின் ஆணி வேராக இந்த சமூகத்தின் உதாரணஜென்மங்களாக எங்கு பார்த்தாலும் கோலோச்சுகின்றனர். 

"என்ற பொண்ணு" ... இப்படியான எதுவுமே புரியாத தலைமுறை அம்மாக்களை சாபங்கள் என்பதா ?வரங்கள் என்பதா என்று புரியவே இல்லை. சித்தப்பன் பற்றி சின்னதொரு சந்தேகம் கூட வராத கறிக் கொழும்பு ஊத்தி  தூக்கு போசி தரும் அம்மாக்களுக்கு அவன்களின் வக்கிரத்தை எப்படிப் புரிய வைப்பது ?

இவர் போன்ற அம்மாக்களுக்கும்  குடும்ப கெளரத பார்க்கும் அப்பாக்களுக்கும்  அவள்களின் இழப்பு தேவைப்படுகிறது உண்மையை உணர்ந்து கொள்ள.

ஜெயந்தன் போன்ற கணவன்களை என்ன செய்வது ?கத்தி கிடைத்தால் குத்திக் கிழித்திடலாம். ஆண் வர்க்க அகங்காரங்களை இவ்வளவு தூரம் ஒருவன் வாழ்க்கையில் கடைபிடிக்க முடியுமா ?என்ற கேள்விக்கு , நாள் தோறும் நாம் சந்திக்கும் பல ஜெயந்தன்களே உதாரணம் . ஈனப் பிறவிகள் .

யாமினி போன்ற தோழமைகள் ஒவ்வொரு 'அவள் ' களுக்கும்  கட்டாயம் தேவை. மேனகா போன்ற திசை காட்டி களால் தான் பெரும்பாலான "அவள்கள்"  வாழ்க்கையை மீட்டெடுக்கின்றனர்.  

பிரேம்கள் எல்லா "அவள்களின் " வாழ்க்கைக்குள்ளும் குழம்பில் உப்பாகத் தேவைப்படுகின்றனர். காமமில்லாத ஒரு முத்தம் தரவும் கரிசனம் காட்டி அன்பு தரவும் அவளைப் பற்றிய அக்கறை கொள்ளவும் பிரேம்கள் வந்தால் எந்தத் தவறுமில்லை. 

மொத்தப் பெண்களின் குரல்களையும் சக்கையாக்கி அழுத்தமான உணர்வுகளுடன் இந்தக் கதையை கதையாக இல்லாமல் உண்மை வாழ்க்கையாக உலவ விட்டுள்ள கவிதா செல்வகுமார் சம காலத்தில் பெண்களுக்கான சுமைகளின் அடுக்குகளை சித்தரித்துள்ள விதம் நம்மை நெகிழ வைக்கிறது. 

ச .தமிழ்ச்செல்வனின்  பெண்மை ஒரு கற்பிதம் நூலையும்  எசப்பாட்டு நூலையும் ஆய்வு நூல்களாக எடுத்துக் கொண்டோமானால் அதன் துணையாக படிக்கப்பட வேண்டிய நூல்களுள் ஒன்றாக  இந்த அவளோசையை எடுத்துக் கொள்ளலாம். 

பெண்களின் மீது இந்த சமூகத்தில் வைக்கப்பட்டுள்ள கற்பிதங்கள் பலவற்றை கதையோட்டத்தில் நாம் உணரும் வண்ணம் அழகாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளார் நூலாசிரியர் .

நமக்குள்ளே , தற்கொலை தான் முடிவா என்ற கேள்வியைக் கேட்டாலும் , ஏன் தற்கொலைகளுக்கு 'அவள்கள் ' தன்னை ஆளாக்குகின்றனர்  என்ற கேள்விகளுக்கு கதை விடையாக அமைகிறது. 

கதையின் மொழி வடிவம் மிகவும் இயல்பாக , எதார்த்த நடையில் எழுதப்பட்டு விரைவில் வாசிக்க நம்மை அழைத்துச் செல்கிறது .

கொங்கு நாட்டு  மனிதர்களாக வரும் அவளின் பெற்றோர்கள் பொழியும் அன்பு வார்த்தைகள் , கனிவு , கிராமத்து நடை , ஈஸ்வரியின் சின்ன பாத்திரம் என மொத்தமாக நம்மை உயிர்ப்புடன் உணர வைக்கிறாள் அவளோசை.

வெளியீடு : கலக்கல் டிரீம்ஸ் 

விலை: 120

பக்கங்கள் : 116

தோழமையுடன் 

அவளுள் ஒருவள் 

உமா

No comments:

Post a Comment