Monday 16 March 2020

காம்ரேட் அம்மா

காம்ரேட் அம்மா 

மகளின் பார்வையில் மைதிலி சிவராமன் 

நூலாசிரியர் : கல்பனா கருணாகரன் - இவர் தாயின் அரசியலையேக் கேட்டு , பார்த்து , சுவாசித்து வளர்ந்துள்ளார் , சுதந்திர உணர்வும் ,உரக்கப் பேசும் துணிவும் கொண்டவராக வளர்ந்துள்ளார் . சிறந்த தமிழ் ஆங்கிலப் பேச்சாளர் அதோடு சமூக செயல்பாட்டாளர் பயிற்சியாளர்  , ஐஐடியில் பேராசிரியராகத் திகழ்கிறார். 

தனது அம்மாவைப் பற்றி ஒரு மகள் எழுதிய புத்தகப் பெட்டகம் தான் காம்ரேட் அம்மா . எந்த ஒரு மகளுக்கும் கிடைக்காத அம்மா , அதே போல எந்த அம்மாவாவது இப்படியான மகளைப் பெற்றுள்ளாரா என்பதும் நமக்கு மில்லியன் டாலர் கேள்வி தான் .

முதலில் என்னுரை, அதில் கல்பனா அவர்கள் இப்புத்தகத்தை எப்படி அச்சுக்கு வந்தது என மிகச் சுருக்கமாகப் பகிர்ந்துள்ளார். என் அம்மா ஒரு அசாதாரண மனுசி என்கிறார். எவ்வளவு பெரிய உண்மை என்பது இந்த 64 பக்கம் கொண்ட புத்தகத்தை வாசிக்கும் ஒவ்வொரு வரிகளிலும் புலப்படுகிறது .

பேராசி வசந்திதேவி , மகளின் நினைவோவியத்திற்கு தோழியின் அணிந்துரை என்ற தலைப்பில் , கனக்கும் மனதுடன் எழுதுகிறேன் என 61 ஆண்டுகளாகத் தனது  தோழியாக உள்ள காம்ரேட் மைதிலி குறித்து எழுதிய பகிர்வு நமது மனத்தையும் கனக்க வைக்கிறது. லட்சியங்களின் சிகரம் அவர் என்கிறார் . சராசரிப் பெண்ணாக , சராசரி மனைவியாக , சராசரித் தாயாக எவ்வாறு இருக்க முடியும் என்று கேட்கிறார் . மைதிலி அவர்களின் வாழ்க்கைப் பரிணாமத்தை தனது கல்லூரி காலத்தில் இருந்தே கவனித்து வந்ததால் மிக அழகாகப் பகுத்துக் கூற முடிகிறது இவரால் . விடுதலை இயக்கங்களின் தாக்குதலால் தன்னைப் போராளியாக மாற்றம் பெற்றிருக்கிறாரா மைதிலி சிவராமன் என்பதையும் நமக்குள் சிந்திக்கக் கொடுத்துள்ளார். காம்ரேட் மைதிலி அரசியலுக்குள் வந்த வரலாறு முதல் அவரது கணவர் கருணாகரன் குறித்தும் மகள் கல்பனா குறித்தும் இந்த உரையில் எழுதியுள்ளார் வசந்தி தேவி. மிகப் பெரிய ஆளுமையான இவரது உரையைப் படிக்கும் போது மைதிலி அவர்கள் பல மடங்கு இவரை விட ஆளுமை மிகுந்து சமூகத்தில் பல நிலைகளில் போராட்டத்   தலைமையாக விளங்கி இருப்பது புரிகிறது. 

தொடரும் கல்பனா கருணாகரன் அவர்களது எழுத்தில் காம்ரெட் அம்மா  நமது மனம் முழுக்க ஆட்கொள்கிறார் . நெகிழ்ந்து நெகிழ்ந்து பக்கங்களைப் புரட்டுகிறேன். .அவ்வளவு அடர்த்தியான வாழ்க்கை, அவரை மாபெரும் பணிகளைக் கையிலெடுக்க வழி அமைத்திருக்கிறது  . 

தனது குழந்தைப் பருவத்தில் துவங்கி இன்று வரை அம்மா எப்படிப் பட்ட காம்ரேட் ஆக நிறைந்து நிற்கிறார் என்பதை முழு உணர்வு பூர்வமாக, படிப்பவர் மனம் முழுவதும் ஆட்கொள்ளும் படி , தெளிவான கருத்துகளாக எளிமையான மொழியில் அழுத்தமாகப் பதிவு செய்கிறார் கல்பனா 

வீட்டில் கடைசிக் குழந்தையான மைதிலி அடிக்கடி உடல் நலமில்லாமல் போனதால் , 9 வயது வரை  வீட்டில் அவரது அம்மாவிடம் பாடம் கற்று நேரடியாக ஐந்தாம் வகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளார்.  இன்றைய எக்மோர் பிரசிடென்சியில தான் பள்ளிப் படிப்பு , எத்திராஜில் இன்டர் மீடியேட் , பிரசிடென்சி கல்லூரியில் BA பொலிடிகல் சயின்ஸ் என காலம் நகர்கிறது . இவரது அக்காவின்  திருமணத்தால் நாட்டியக் கலைஞராக இருந்தும் திறமைகளை வெளிப்படுத்த இயலாமல் வீட்டுடன் இருந்து விட்டதால் இவரைப் படிக்க வைக்க முடிவெடுத்தக் குடும்பத்தை நாம் மிகவும் பாராட்டியே ஆக வேண்டும் .

 டெல்லியில் முதுகலை டிப்லமோ படிக்கும் போது ஜவஹர்லால் நேருவை சந்தித்துள்ளார் ,  நியூயார்க்கில் MA என படிப்புத் தளம் விரிய , அம்மாநில அரசின் நிதிப் பிரிவில் பணியாற்றி , ஐ.நா .சபையின் இந்தியத் தூதரகத்திலும் ஆராய்ச்சியாளராகப் பணியாற்றி அனுபவங்களால் நிறைந்து இருக்கிறார். 

வியட்நாம் போருக்கு எதிரான போராட்டங்களில்  மாணவர் பங்கு , கறுப்பு இன மக்களின் அடிப்படை உரிமைப் போராட்டம் , மார்ட்டின் லூதர் கிங் ,மால்கம் எக்ஸ் போன்றோரின் பாதிப்பால் 1960 களில் கம்யூனிஸ்ட்டாக மைதிலி சிவராமன் மாறிய காலகட்டம் என்கிறார் .

ஒன்றா இரண்டா ஏகப்பட்ட அனுபவங்களுடன் 1968 இல் இந்தியா திரும்பியவரை ஏன் அமெரிக்காவில் நிரந்தரமாக வாழவில்லை எனக் கேட்க , அது பல சிறிய நாடுகளின் மீது ஆதிக்கம் செலுத்துவதை நேரடியாகப்  பார்த்த காரணத்தைப் பதிவு செய்கிறார். 

இந்தியா வந்த காம்ரேட் மைதிலி , பீஹாரில் வினோபா பாவே ஆசிரமத்திற்குச் சென்று சில வாரங்கள் தங்கியதும் , கீழவெண்மணி கொடுமையில் அதிர்ச்சியுற்று நேரடியாக அங்கு சென்ற போது நமது கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் தான் அங்கு அவரை அழைத்துச் சென்றிருக்கிறார் . ஏற்கனவே காந்தி - வினோபா வழித்தடங்களைப் பின்பற்றிய கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் அவர்களும் காம்ரேட் மைதிலி அவர்களின் வாழ்வில் சரியான சந்தர்ப்பத்தில் சந்தித்தது குறித்து எனக்கு பெரு மகிழ்ச்சி . சமீபத்தில் தான் அவரது வாழ்க்கை வரலாறான சுதந்திரத்தின் நிறம் படித்தது , சமூக செயல்பாட்டாளர்கள் ஒன்றிணையும் தருணங்கள் நமக்கு மகிழ்வைத் தானே தருகிறது. 

கீழவெண்மணியின் படுகொலை சம்பவங்கள் தான் இவரை அடிப்படை சமூக - பொருளாதார - அரசியல் மாற்றத்திற்காக உழைக்க வேண்டும் என்ற தீர்மானத்தை பல மடங்கு உறுதிப்படுத்தியதாகக் கூறியுள்ளார். அதன் பிறகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொள்கிறார் .அதன் தொடர்ச்சியாக தொழிற் சங்க நடவடிக்கைகளிலும் (CITU) , பிறகு மாதர் சங்கத்திலும் தீவிர ஈடுபாடு காட்டியுள்ளார். 

இப்படியான பணிகளுடன் வீட்டில்  காம்ரேட் அம்மா தனது தோழர்களுடன் இரவு வரை விவாதிப்பது , வெளியில் சென்று மக்களிடம் பேசுவது , போராட்டத்தில் ஈடுபடுவது மக்களை அரசியல் படுத்துவது என தொடர் உழைப்புகளை இந்தப் புத்தகத்தின் பல பக்கங்களில்  சிறு சிறு நிகழ்வுகளாகக் காட்சிப்படுத்துகிறார் கல்பனா .

அஜிதா என்பவர் சித்ரா தேவியாக மாறிய பிறகு  கல்பனாவாக பெயர் மாற்றம் பெற்ற வரலாறு கூட சுவாரஸ்யமாகத் தரப்பட்டுள்ளது. 

நிறைய செய்திகள் காம்ரேட் அம்மாவின் வாழ்க்கையில் நமக்காக இருப்பதை உணர முடிகிறது. கல்பனா வளர வளர அவரது அம்மாவின் சமூக வாழ்க்கையின் போக்கை அதிகமாக உள்வாங்குகிற பாங்கை வெகு அழகாகக் கொடுத்துள்ளார் கல்பனா . 

The radical review என்ற பத்திரிகை நடத்திய காம்ரேட் அம்மா , அதன் வழியாக வந்த கருணாகரன் அவர்களை தனது இணையராகத் தேர்வு செய்தது , இருவருக்குமான புரிதல் என நாம் அறிந்து கொண்டு ஆச்சர்யப்படவும் புரிந்து கொள்ளவும் நிறைய கதைகள் தந்துள்ளார் -

காங்கிரஸ் கட்சியின் ப.சிதம்பரம் , என்.ராம் , காம்ரேட் மைதிலி ஆகியோர் அமெரிக்காவில் ஒரே காலத்தில் கல்லூரி மாணவர்களாகவும் நண்பர்களாகவும் இருந்த தகவல்கள் கூட நம்மை சிந்திக்க வைக்கின்றன. 

எமர்ஜென்சி நாட்களில் கல்பனாவை உறவினர் பாதுகாப்பில் விட்டுச் செல்வதும் எவருக்கும் தெரியாமல் பல ஊர்களில் பதுங்கி வாழ்ந்து இச் சமூகத்துக்குத் தன்னை ஒப்புக் கொடுத்த நிகழ்வுகளும் நமக்கு மேலும் அவரைப் பற்றி அறிய ஆர்வம் உண்டாகக் காரணங்களாகின்றன. 

காம்ரேட் அம்மாவின் நெருங்கிய நண்பராக தோழர் வி.பி. சிந்தன் இருந்ததும் அவர் தான் காம்ரேட் மைதிலியை கட்சிக்குள் கொண்டு வர அதிக பங்கெடுத்தவர் என்பதும் 1987 இல் அவர் 

 மாரடைப்பால் இறந்து விடும் சூழலும் இப்புத்தகத்தில் பதிவாகியிள்ளது .

கல்பனா வளர வளர அம்மாவிற்கு உடல் நலமில்லாமல் போவதும் , மன அழுத்தம் குறித்த அம்மாவின் பிரச்சனைகள் என வாழ்வின் போக்கு மாறிவிடுகிறது. 2002 இல் விருதுநகரில் நடந்த மாதர் சங்க மாநாட்டில் இவர் செயல் தலைவர் பதவியிலிருந்து விலகிய நிலையை கல்பனாவால் ஏற்றுக் கொள்ள முடியாத நிலையும் ஏற்படுகிறது .

காம்ரேட் அம்மா அல்சைமர் நோயால் 2007 க்குப் பிறகு பாதிக்கப்படுகிறார். 2010 இல் காம்ரேட்  அம்மா தனது பாட்டி சுப்புலட்சுமி குறித்து "ஒரு வாழ்க்கையின் துகள் " என்ற புத்தகத்தை எழுதி பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ள நிகழ்வும் தரப்பட்டுள்ளது.

அவர் எழுத்தும் பேச்சும் செயலும் நிரம்பிய ஒளி படைத்த வீரப் பெண்ணாக சமூகத்தின் விடுதலைக்காக உழைத்த புடம் போட்ட தங்கமாக வாழ்ந்து வந்த அவர் இன்று படுத்த படுக்கையாக இருப்பது குறித்து தெரியாத நமக்கே தாங்க இயலவில்லை என்றால் நண்பர்கள் , உறவுகள் , மகள் , கணவர் இவர்களின் நிலை என்ன என நமக்குள் உரையாடலாம். 

இறுதி பக்கங்களில் அவர் கட்சி குறித்த செய்திகள் , அவற்றின் ரகசியம் காக்கப்பட்டது இப்படியும் கூறப்பட்டுள்ளது .

குடும்பம் , குழந்தை , இயக்கம் , பொதுவெளி என்பதற்கெல்லாம்  பொதுவாக மனிதர் உருவாக்கும் சுவர்களைத் தகர்த்தெறிந்து வாழ்ந்தவர் காம்ரேட் அம்மா எனக் கூறும்போது நமக்கு ரோல் மாடலாகிறார். 

காம்ரேட் அம்மாவின் முழுமையான வரலாற்றை கல்பனா கருணாகரன் எழுத வேண்டும். இவரது வாழ்க்கை நமது கண்ணுக்குள்ளும் மனசுக்குள்ளும் திரைப்படம் போல ஓடிக் கொண்டே இருக்கிறது . இன்னும் நிறைய சொல்லலாம். 

புத்தகம் முழுக்க ஆங்காங்கே புகைப்படங்களும்  நம்மை சற்றே நெகிழ வைக்கின்றன. இவரை நான் விரைவில் சந்திக்க வேண்டும். தூங்க விட மாட்டேன் என்கிறது இவரின் இப்புத்தகத்தால் விளைந்த நினைவுகள். 

அனைவரும் கட்டாயம் வாசித்து அறிந்து கொள்ள வேண்டிய புத்தகம் . 

தோழமையுடன்

உமா 



No comments:

Post a Comment