Saturday 14 March 2020

காரல் மார்க்ஸ்

காரல் மார்க்ஸ் (புது யுகத்தின் வழிகாட்டி )

பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ள, 

இ.எம்.எஸ் .நம்பூதிரிபாட் எழுதி, பி.ஆர். பரமேஸ்வரன்  தமிழில் மொழி பெயர்த்துள்ள 32 பக்கங்கள் கொண்ட இச்சிறு புத்புதகம் அதிக கருப்பொருளை உள்ளடக்கியது.

சாதாரண மனிதனாகப் பிறந்த காரல் மார்க்ஸ் , அவர் வாழ்ந்து சென்ற 65 ஆண்டுகளுக்குள் வேறு யாரும் செய்திட இயலாத மிக அரிய செயல்களை செய்துள்ளார் என்பதை எவரும் மறுக்க முடியாது. 

காரல் மார்க்ஸ் இவரின் குடும்ப வாழ்வை குறித்தும் , ஜென்னிக்கும் இவருக்கு மான காதல் , திருமணம் , குழந்தைகள் , நண்பர் ஏங்கல்ஸ் என அனைத்து விபரங்களையும் மேலோட்டமாகக் கூறி ஆரம்பிக்கும் பக்கங்கள் அடுத்தடுத்து அடர்த்தியான செய்திகளைத் தாங்கி வருகின்றன.

மார்க்ஸ் எப்படிப் பட்ட புரட்சியான பாரம்பரிய வரலாற்றுக் காலக்கட்டத்தில்  வாழ்ந்தார் , எங்கிருந்து தனது மார்க்சிய சிந்தனையை ஆரம்பிக்கிறார் , ஹெகலின்  தத்துவ ஞானக்

கண்ணோட்டத்தின் வழியாக , தனது பொருள் முதவாதத்தின் சிந்தனையை எவ்வாறு ஆய்வு மேற்கொண்டு , இயற்கை , சிந்தனை வழியாக மாற்றம் பெறும் தத்துவங்களை அணுகுகிறார் என விளக்கப்படுகிறது.

தொழிலாளி வர்க்கத்தின் பைபிள் என்று அழைக்கப்படும்  ' மூலதனம் ' என்ற நூலுக்கான தேடல் ,உழைப்பு இவர் காலத்தில் முதல் பாகம் வெளிவந்தது , பின்னிரு பாகங்களுக்கு ஏங்கல்ஸ் ஸின் பங்கு என விரிகின்றன அடுத்தடுத்த பக்கங்கள் .

உலகின் தவிர்க்க முடியாத புகழ் பெற்ற மனிதர்களின் வரிசையில்  காரல் மார்க்ஸ் – ஏங்கெல்ஸ் இருவரும் கம்யூனிஸ சித்தாந்தத்தை எவ்வகையில் அணுகினார்கள் என்பதை சுருக்கமாகவும் தெளிவாகவும் பதிவு செய்கிறது இப்புத்தகம் .

உபரி மதிப்பு ,உழைப்பு , அங்கிருந்து உருவாகும் மதிப்பு , முதலாளி வர்க்க தேடல் , தொழிலாளிகளின் எதிர்பார்ப்பு , இரு வர்க்கங்களுக்குமிடையே ஏற்படும் போராட்ட சித்தாந்தம் , விஞ்ஞான முறைகளில் உற்பத்தி - மறு உற்பத்தி , இங்கிலாந்தில் முதலாளித்துவம் பிறந்தது என சற்றே அடர்த்தியான கருத்துகளை நம்முடன் பகிர்கிறது இந்நூல். 

அதோடு தத்துவ விஞ்ஞானம் குறித்தும் வரலாற்றியல்  பொருள் முதல்வாதம் என்ற புதிய பார்வையை மார்க்ஸ் எவ்வாறு ஆய்கிறார் என்றும் கோடிட்டுக் காட்டுகிறது .மார்க்சியம் - லெனினியம் குறித்தான சிறு அறிமுகமும் தந்து , தத்துவஞானம் , பொருளாதாரம் , விஞ்ஞானம் வரலாற்று விஞ்ஞானம் ஆகிய துறைகளில் மார்க்ஸ் அளித்துள்ள பங்களிப்பு ஒவ்வொன்றையும் நம்மை அறியத் தூண்டும் நூலாக இச்சிறு நூல் அமைகிறது. 

தோழமையுடன் 

உமா


No comments:

Post a Comment