Monday 3 December 2018

ஞாபகம் - 1

அவளது ஞாபகங்கள் -1
--------------------------------------

மனதிற்கு இதமானவை அவை
எப்பொழுதும், ஞாபகம் வரும்
மனிதர்களை வரிசையாக நினைவுப் பேழையின் அடுக்குகளில் பத்திரப் படுத்துகிறாள் ...

தொலைக்காட்சிப் பெட்டியில் ராகி சேமியா விளம்பரம் பார்க்கையில் ....
ஆரியக் காட்டில் சுற்றித் திரிந்து , ஆரியப் பூட்டையை ஊதித் தின்ற ஞாபகங்கள் ....

கடுக்கன் போட்ட மாரப்பன் தாத்தாவும் அவரை வெடுக்கென்று பேசும் லட்சுமி ஆயாவும்  சட்டியில் உருட்டிப் போடும்
கலி உருண்டையும் நக்கிரிக் கடைசலும்

ஐத்தம்மா குத்தும்  கம்பும் உலக்கையும்
வீரப்பன் ஐயா போடும் குலவையும்
ஏத்தெரிக்கற கிணற்று மேடும்
கூடவே வரும் ஞாபகங்கள் ...

சேந்துக் கிணறும் , இரட்டைக் குடமும்
மாரியம்மன் கோவில் மெரமனையும்
பொன்னம்மா அக்காவின் வாஞ்சையும்
நீட்சியானநினைவின் ஞாபகங்கள் ...

தீபாவளி , பொங்கல்வரும் பொழுதெல்லாம்
ஒரு ரூபாய் வாரச்சீட்டு சேர்த்த நாட்களும்
பெரிய தாயி ஆயா பேசும் அன்பும்
அழிந்திடாத ஞாபகங்கள் ...

ரேஷன் கடை பார்க்கும் போது, எப்போதும் வரிசையில்  நின்று சீமெண்ணெய் சர்க்கரை
வாங்கிய ,கூட்ட நெரிசலடங்கிய அந்தப்
பாடசாலைத் தெருவின் ஞாபகங்கள்...

மீன் சமைக்கும் போது சில மீள முடியாத தொடர் ஞாபகங்கள் .... அதோடு கூட
வாழ்வில் ஒவ்வொன்றையும் எதிர்கொள்ள வேண்டும் வழிகாட்டிய நட்பின் ஞாபகங்கள்

உனக்குப் பிடித்ததை செய் எதுவுமே தப்பில்லை ,நீ புத்திசாலி ,எதற்காகவும்
எதையும் இழக்காதே காதோரம் ஓடி வரும்
ஒலிக் குரலின்  ஞாபகங்கள் ....

வாழ்வின் வழி நெடுகிலும்..
அன்பு காட்டிய மனிதர்களும்
அனுபவம் தந்த மனிதர்களும் ஞாபகப் பக்கங்களால் நிரம்பியிருக்க....

நினைவுச் சங்கிலிகளாகப் பிணைந்து அவளைக்கட்டிப் போடும் நிமிடங்கள் அன்றாட ஞாபகங்களாக ....

உயிர் வாழவும் போராடவும் மனதால் மகிழ்ந்திருக்கவும் தொடர்ந்து சிரிக்கவும்
சமூகத்திற்காக சிந்திக்கவும் கலவையான
ஞாபகங்களைத் தரும் மனிதர்களை நினைவுப்பேழையில் பத்திரப்படுத்துகிறாள் ....

உமா

No comments:

Post a Comment