Sunday 23 December 2018

விலாசினியும் உமாவும்

விலாசினியும் உமாவும்

இந்தப் புகைப்படத்தில்  இருப்பது போலவே விலாஸ் ரொம்ப அழகா சிரிச்சுக்கிட்டே  இருப்பா .. எனக்கு விலாசினி என்ற பெயர் வித்யாசமாக இருந்ததினாலேயே மிகப் பிடித்தது.

சேலம் மாவட்டத்தில் ஆடையூர் ,பக்க நாடு போன்ற கிராமங்களும் ஜலகைக்கு அருகே இருப்பவை , அங்குள்ள மாணவர்களும் மேல்நிலைப் பள்ளிகள் என்றால்  ஜலகண்டபுரம் பள்ளிக்கே வர வேண்டும்.

விலாஸ் , பிரேமா , P. உமாமகேஸ்வரி என்ற 3 மாணவிகள் ஆறாம் வகுப்பிற்கு எங்கள் பள்ளிக்குத் தான் வந்தனர். அந்த மூன்று பேரில் பிரேமா வெள்ளை வெளேரென இருப்பாள் , நாங்கள் வெள்ளச்சி என்றே பல சமயங்களில் அழைப்போம் ,
8 ஆம் வகுப்பு வரை இவர்களுடன் அவ்வளவாக எனக்குப் பரிச்சயமில்லை. வேறு வேறு வகுப்புப் பிரிவுகள் . 8ஆம் வகுப்பில் வள்ளியம்மா டீச்சரிடம் டியூஷன் வருவாங்க , பள்ளி முடிந்து நேரா அங்க போய்டுவாங்க , அவங்க 4.30 லிருந்து 6 வரைக்கும் தான் இருப்பாங்க ,

அப்புறம் அந்த ஆடையூர் 3A பஸ் வந்துடும் , அதுப் பிடிக்க ஓடுவாங்க , அப்பவெல்லாம்  எனக்கு அது பத்தி புரிதல் இல்லை , ஆனா ஆசிரியரா நான் இருப்பதால்  இப்போ என்னிடம் படிக்கும் குழந்தைகள்  சிறப்பு வகுப்புகள் முடிந்து பேருந்து நேரம் தாண்டி விடுமோ என அலை பாய்கையில் தான் புரிகிறது ,
அன்று இவர்கள் தவிப்பு.

விலாஸ் எப்போதும் பெரிய பெரிய கனவுகளை சுமப்பவள் , அதுவும் அவளது அண்ணா நிறைய பேருக்கு ரோல் மாடல் ,
அப்படி இருந்த நாட்கள் கடந்து 10 ஆம் வகுப்பில் தான் நெருங்கிப் பழகினோம் , நல்ல மதிப்பெண் வாங்க வேண்டும் என நிறைய ஆசை அவளுக்கு , நிறைய முயற்சி செய்ய நினைப்பாள் , ஆனால் பாதியிலே அதை மறந்து விடுவாள் , அதையும் அப்பப்போ என்னிடம்  சொல்லுவாள்.

நாமக்கல்லில் தான் கல்லூரி படித்தாள். அப்படி  படிக்கையில் எப்போதாவது என் வீட்டுக்கு வருவாள். அப்படி ஒரு முறை சந்திக்கும் போது அவள் கூறியது இன்னும் என் மனம் விட்டு அகலவில்லை , இன்றும் என் மாணவிகளிடம் பகிர்வேன் .

சருகுகளை சேமிச்சு வைக்கிறேன் , ஆனா குளிர் காயறதே இல்லை என்றாள் .....
ஒரு நாள் சிரித்துக் கொண்டே ....

எங்க உமா , அண்ணா எல்லா மெட்டீரியல்ஸ்சும் தரார். நான் பயன்படுத்துவதே இல்லை என்றாள்  , இது தான் அந்த சருகுகளும்  குளிர் காய்தலும் கதை

மைக்ரோ ஓவன் எப்படிப் பயன்படுத்தனும்னு அவங்க வீட்லதான் பார்த்தேன் ஒரு 20 வருடம் முன்னால் . ஒரு பொருளை ஃபிரிட்ஜ் ல வச்சத எடுத்து எவ்ளோ நேரம் வெளியில் வச்சு ஒவன் ல சூடாக்கனும் என்ற ஆராய்ச்சி எல்லாம் அப்பதான் செய்தோம்.

அந்த கிராமத்தில் இவர்கள் வீட்டை அரண்மனை போல் கட்டி இருந்தார் ராஜா
அண்ணன், ரொம்ப அழகா இருக்கும் , S மாதிரி படிகட்டுகள் வீட்டிற்குள் வைத்து கட்டியிருக்கும்  முறை என நான் வியந்து பார்த்துள்ளேன்.

அவர்கள் வீட்டிற்குப் போனால் அந்தக் காடு இந்தக் காடு என்ற மொழிகள் பேசும் வீடுகள் இருக்கும் , இவர்கள் வீட்டை இந்தக் காடு என எண்ணினால் JP எல்லாம் வசிக்கும் வீடு அந்தக் காடு என்போம்  ...

அங்கு சென்று விட்டால்  ஒரே கொண்டாட்டம் தான் ,மகிழ்வைத் தாண்டி வழிந்த சந்தோஷ நாட்கள் அவை

சப்பாத்தியை லேயர் லேயராக மடித்து தேய்த்து செய்வார்கள்  அம்மா என்று 10 ஆம் வகுப்பில் அவள் கூறுவது இன்றும் நான் சப்பாத்தி செய்கையில் மனதிற்குள் ஓடும் .

அம்மா அவ்வளவு பொறுமைசாலி , பெண்களால் குடும்பங்கள் எப்படிக் காக்கப்பட்டு வருகின்றன என்பதற்கு அவரே மிகச் சிறந்த உதாரணம்.

அப்புறம் விலாஸ் திருமணத்திற்கு சென்றேன் , காலச் சூழல் பல வருடங்களாக சந்திக்கவே இல்லை .

ஆனால் அதே அன்பு எப்போதும் மனதுள் ததும்பிக் கொண்டே இருந்தது அவள் மீது .

எப்போதோ யாருடைய வழியாகவோ அவளது அலைபேசி எண்ணை பல வருடங்கள் முன்பு பெற்று தொடர்ந்து துரத்தினேன் .

ஆனால் அவள் வாழ்வில் மிக அருமையான வழியில் விவசாயியாக மாறி விட்டு , மாடுகளுடனும், கோழிகளுடனும் விளை நிலங்களுடனும் உறவை வலுப்படுத்திக் கொண்டதால் மனிதர்களோடு நேரம் கழிக்க இயலாமை பெற்ற வளாகியிருந்த காலமாகிட ,

எப்போதாவது ஒரு  வருடத்திற்கு ஒரு முறையேனும் பேசி விடுவேன்.  எப்போது அழைத்தாலும் பல வாக்குறுதிகளைத் தருவாள்.

ஆனால் அடுத்த முறை பேசும் பொழுது , சாரி உமா என்று கூறி ஒரு மலர்ச்சியான சிரிப்பை அலைபேசி வழியாகப் பிரயாணம் செய்ய வைத்து விடுவாள்.

ஆகையால் அவள் மீதான கோபமே காணாமல் போய்விடும். இப்படியான சூழலில் கடந்த ஜூன் மாதம் நாங்கள் 93 பேட்ச் மாணவர்கள் சந்திக்கும் போது தான் விலாசினியை பல ஆண்டுகளுக்குப்  பிறகு சந்தித்தேன்.

அதே புன்னகை , அதே சுறுசுறுப்பு , அதே அன்பு தழுவல் ... இருவரது பார்வைகளும் சந்தித்துக் கொள்ள நெகிழ்ந்து போனோம். இன்று அவள்  விவசாய முறையில் தன்னை ஈடுபடுத்தி குழந்தைகளை கவனித்து வரும் ஒரு விவசாய உழைப்பாளியாக உருவாகி பெருமை சேர்க்கிறார்.

அதோடு அரசுப் பள்ளிக் குழந்தைகளின் மேற்படிப்புக்கு தொடர்ந்து உதவி வருகிறார்.

அன்பு காலம் கடந்தது என்பதை ஒவ்வொரு நாளும் நமக்கு உணர்த்தி வருகிறது. அதற்கு எனது விலாசினியும் பொருத்தமானவள்.

உமா

No comments:

Post a Comment