Sunday 23 December 2018

Grandma

ஞானாம்பா (ள்) மா - (பாட்டி )

ராசாத்தி என்று எங்காவது கேட்டால் ... சற்றே நிதானித்து அசை போட்டு மகிழ்வேன். ஆம் என்னை .. அப்படித்தான் அழைப்பார் பாட்டி , ராசாத்தி - அம்மாடி - கண்ணு... இது தான் எனக்குள் ரசவாதம் நிகழ்த்திய தமிழ்ச் சொற்கள் . பாட்டி எப்போதும் பயன்படுத்துவது

எனக்கு விபரம் தெரிந்து அவரை பாட்டி எனக் கூப்பிட்ட தே இல்லை. ஆமாம் , எப்போதும் ஞானாம்பா மா என்ற பெயரை இணைத்து தான் அழைத்து இருக்கிறேன் .

யார் யாரோ என்னன்னவோ சொல்வீங்க , தெய்வம் , தேவதை , காதலி ,அம்மா , பாதுகாவலர் , ரோல் மாடல் இப்படியாக .... அத்துணையும் இந்த ஒரு உருவத்தில் கண்டு உடன் வாழ்ந்தவள் நான். (அப்போது தெரியாது , இப்போது தான் உணர முடிகிறது )

சின்ன வயசுல இருந்தே நிறைய உண்மைக் கதைகளை வாழ்வின் நிலைப்பாட்டை , கடந்து வந்த பாதையை சொல்லி சொல்லி ஒரு உருவம் கொடுத்த மனுஷி.

தன் கணவர் இறந்த காலம் தொட்டு 3 பெண்குழந்தைகளை எவ்வாறு,பூ கடையில் பூ கட்டி வரும் வருவாயில் 1950களில் இருந்து வளர்த்தேன் என சம்பவங்களோடு அவர் கூறும்
விரியும் காட்சிகள் திருச்செங்கோடு பூக்கடை வீதியை இப்பவும் என் மனசுல பச்சுனு ஒட்டி வலிக்க வைக்கும்.

வாழ்ந்து வந்த பெரிய வீட்டைக் கூட , ஆண் துணை இழந்த சில நாட்களில் பிடுங்கிக் கொண்டு வெளியேற்றிய உறவுகளின் கதை கேட்கும் போது நமக்குக் கோபம் வந்தாலும் அது விதி மா கோபப் பட என்ன இருக்குன்னு எளிதா கடந்து போகத் தெரிந்த மனுஷி.

தனது 84 வயசு வரை எந்த ஆடம்பர உடுப்புக்கும் நகை நட்டுக்கும் ஆசையே படாத , தன் மகள் கொண்டு வந்து தரும்
வெறும் கதர் கைத்கறி சேலையும் ஒரு ஜம்பருமே வாழ்க்கை பூரா உடுத்தி வேறு உடுப்பு எத பத்தியும் ஆவல் இல்லாத எளிய பெண்காந்தி அவள் .

காதில் தோடு போட்டு நான் பார்த்ததில்லை , கையில் வளையணிந்தோ , கழுத்தில் செயின் அணிந்தோ அல்லது காலில் தான் கொலுசு அணிந்தோ ஒரு நாளும் பார்த்ததில்லை.

எப்போதும் மலர்ந்த சிரிப்பு , கம்பீரமான பேச்சு , ஊரில் போவோர் வருவோர் என அத்துணை மனிதருக்கும் அன்பான பேச்சு , அவசரமாகப் போவோரும் நின்று 5 நிமிடம் ஆயாவிடம் பேசினால் தான் அவங்க மனசும் குளிரும்  போற வர்றவங்க முகமும் சிரிக்கும்.

டீச்சர் வீட்டு ஆயா , அதுதான் அந்தத் தெருவில் ஊரில் ஞானாம்பா ம்மாவிற்கு மக்கள் வைத்த பெயர், விடியற்காலை 3 ,4 மணிக்கு முழிச்சு 6 மணிக்குள்ள சமையல் மணம் வீதி முழுக்க தூக்கும், தினமும் அந்த வீட்டு அடுக்களையிலிருந்து குழம்பும் ரசமும் வாசல் தாண்டி காலை 6 மணிக்கே 2 (அ) 3 வீடுகளுக்குப் பயணிக்கும் . ஆயா வைக்கிற குழம்பு மாதிரி உனக்கு வைக்கத் தெரியுதா ? பக்கத்து வீட்டு சண்முகம் அண்ணா மனைவி சந்திராவை அவ்வப்போது கலாய்ப்பார் .

குமுதம் , ஆனந்த விகடன் , முத்தாரம் , கல்கி இப்படி பல வார மாதப் பத்திரிக்கைகளை எனக்கு படிக்க அறிமுகம் செய்தவரே இவர் தான் . கையில் கொடுத்துப் படிக்கச் சொன்னது இல்லை , அவர் படிக்கும் போது கவனித்து நானும் அதை எடுத்துப் படிப்பேன். அதோடு தராசு , ஜூனியர் விகடன் இப்படியும் படிப்பார்.

அரசியல் ஞானம் , சினிமா , சமூகம் , பொருளாதாரம் இப்படியான ஒரு புரிதல் அந்த மனுஷிக்குள் இருந்திருக்கு போல , அதான் 60 களில் இட்லி கடை கிராமத்தில்  வைத்து குடும்பத்தை கரையேற்றியிருக்கிறார்  .

குளிக்கும் போதெல்லாம் என்னை அழைப்பார் முதுகு தேய்த்து விட, அதைச் செய்தவுடன் இன்னிக்கு கடவுள் உன் பேர லாபக் கணக்குல எழுதிக்குவாருடி கண்ணே நீ நல்லா இருப்பேன்னு சொல்வார்.

சாயங்காலம் 5 மணி ஆனா , கயித்துக் கட்டில ரோட்ல போட்டும் , திண்ணையின் மீது அந்த வீதி ஜனமே உக்காந்து அரட்டை அடிக்கும். அதுக்கு இவங்கதான் முக்கியஸ்தர் , நிறைய பேச்சு நடக்கும். 8 மணிக்கு ராப் பிச்சை வந்தா கண்டிப்பா எதையாவது தருவார் பழைய தோ புதியதோ சாப்பாடு அது .

கண்ணாடி போடாமலேயே கடைசி வரை புத்தகம் வாசிச்ச கெத்து ஆளு, எனக்குத் தெரிந்து 15 பைசாக்கு வாங்கும் கண்ணு மருந்து ட்யூப் மட்டும் தான் அவங்களுக்கு கடைசி வரை (50 பைசா ஆச்சு கடைசில ) தேவைப்பட்ட அதிகபட்ச மருந்து.

பெரிய பெரிய பல காரத்துக்கோ பெரிய விலையான பழங்களுக்கோ அவர் ஆசைப்பட்டது இல்லை , நான் அறிந்து அவர் விருப்பமாக சீதாப்பழத்தை பெரியதாகி வாங்கி அடுக்குப் பானைகளில் மூடி வைத்து பழுக்க வைத்து நிறைய சாப்பிடுவார். என் அம்மா சளி பிடிக்கும் என்று சொல்லி என் கண்களில் காட்டாத சீதாப்பழங்களை இவர் எனக்கு ஆசை தீர தந்து சாப்பிடக் கூறுவார். இன்றும் எனது மிகப் பிடித்தமான பழம் அதுதான்.

அதோடு , மாம்பழ சீசனில் கூடையாக சந்தையில் சிறு சிறு மாம்பழங்களை வாங்கி நிறைய சாப்பிடுவார். தினமும் இரண்டு வேளை உணவு தான் எடுத்துக்  கொள்ளுவார் , காலை 11 - 30 மணியளவில் ஒரு உருளைக் குண்டா
( பாத்திரம் )நிறைய பழைய சோறு மோரில் கரைத்து குடிப்பார். பச்சை வெங்காயம் , அல்லது ஏதாவது காய்கறி பொறியல் தொட்டுக் கொண்டு , அதையே தேவாமிர்தமாக பிரகல்யம் செய்வார்.

அதோடு இரவு 8 மணிக்கு மேல் சாப்பாடு , எது இருக்கோ அது சாப்பிடுவார் , இடையில் டீ (அ) காபி 2 முறை குடிப்பார் அது தவிர வேற ..வெள்ளிக்கிழமைகளில் சந்தைப்  பொரியும் ,வடை பஜ்ஜி பலகாரங்களும் தான் அவரது அதிக பட்ச தீனி . எனக்கு சந்தையையும் , அங்கு வியாபாரிகளை அணுகும் கரிசனத்தையும் படிப்பித்தவர் அவரே.

இப்படியான வாழ்க்கை முறையில் படிப்பின் அவசியத்தையும் எதிர்காலத் தேவைகளையும் நிகழ்கால வாழ்க்கை சம்பவங்களோடு கடந்த கால வாழ்வின் போக்கு கொண்டு தொடர்ந்து விளக்கியவர் அவரே.

நான் படிப்பது அவருக்கு ரொம்பப் பிடிக்கும். சாப்பிட்ட பிறகு கூட
கை கழுவி தட்டு வாங்கி செல்வார் அந்த நேரத்தில் கூட படிப்பு வீண்போகக் கூடாதென, அதுக்குப் பிராயச்சித்தமா நானும் பள்ளி 2 ஆம் இடமே 10 , 12 இரண்டு வகுப்புகளிலும் எடுத்தேன்.

அவர் அந்த காலத்து 8 ஆம் வகுப்பு படிப்பாளியாம். இசை ஞானம் உண்டு. ஆங்கிலத்தில் அவ்வப்போது பேசுவார்.
கம க ..பாடுவார். இப்போது எல்லாம் நினைத்துக் கொள்ளுவேன். இப்படியான எத்தனை லட்சம் பெண்களை இந்த நாடு காவு வாங்கி இருக்கு என ..

நான் 5 ஆம் வகுப்பு படிக்கும் போது வெள்ளிக்கிழமை எனக்கு தலைக்கு  குளிச்சூடுவார் , தண்ணி சடை போட்டு நாட்டு ரோஜா தலையில்வைத்து அழகு பார்ப்பார். 11 , 12 ஆம் வகுப்பு படிக்கும் போதெல்லாம் , மார்ச் , ஏப்ரல் மாதங்களில் மல்லிகை , கனகாம்பரம் இரண்டும் 50 பைசாவுக்கு வாங்கி நெருக்கமா கட்டித் தந்து  ஒரு ஜடை போட்டு வச்சுட்டுப் போக வைப்பார், தினமும் இது நடக்கும் , ஒரு அழகான காலம் அது .

நான் 4 வது படிக்கும் போதே வீட்டுக் கடன் , வருமானம் , அம்மாவின் கஷ்டம் பணப் பிரச்சனை இவற்றைறையெல்லாம் எப்படி எதிர்கொள்வது என ரொம்ப போரடிக்காம பொறுமையா விதைத்தவர் , குடும்பத்தின் ஒரு பரிமாணமான பொருளாதாரச்  சூழலை புரிய வச்ச எக்னாமிஸ்ட் இவர்.

ஜலகண்டபுரத்தில் 3 திரையரங்குகள் இருக்கும் , வாரம் ஒரு முறை குறைந்த பட்சம் 2 திரையரங்குகளின் முதல் வரிசை டிக்கட் கவுண்டரில் எவர்சில்வர் தூக்குப் போசியில் தண்ணீர் எடுத்துக் கொண்டு முதல் ஆளாய் டிக்கட் வாங்க நிற்பார் ஞானாம்பாம்மா. அப்போதெல்லாம் 60 பைசா தான் டிக்கெட் பெஞ்ச்சுசுக்கே, தரை என்றால் 30 பைசா தான் , இரண்டுக்கும் பெரிய வித்யாசமில்லை , சாயும் மர பெஞ்சுகள் இருப்பது 60 காசு. சாயாத மர பெஞ்சுகள் 30 காசு .செள டாம்பிகை தியேட்டர் தான் இந்த டிசைன்.

புதுக் கொட்டாய்  என்று அழைக்கப்படும் அபிராமி திரையரங்கம் 80க்குப் பிறகு கட்டப்பட்டது அங்கு சேர் எல்லாம் இருக்கும் , பல சமயங்களில் பாட்டியின் கை பிடித்து நானும் சினிமா பார்க்கப் போயிடுவேன். சிவாஜி , எம்.ஜி.ஆர் ,ராமராஜன் உட்பட எல்லாப் படங்களும் பார்த்து இருக்கேன்  பாட்டியுடன்  சேர்ந்து.

ஆண் - பெண் நட்பு பற்றி பெரிய  புரிதல் இல்லை என்றாலும் , 12 ஆம் வகுப்பு படிக்கையில் வீடு தேடி வரும்  என் வகுப்பு பசங்கள பக்கத்துல உட்கார வச்சு உபசரித்து 4 நல்ல வார்த்தை பேசி அனுப்புவார். ஆனாலும் அளவோடு பேச வேண்டும்  என்ற கண்டிப்பு அவர் பார்வையிலும் குரலிலும் இருக்கும்.
, 6 மணிக்கு மேல் வீட்டுக்கு வரலன்னா திட்ட மாட்டார் , பதைபதைப்பார்.

அதே போல , தெருவில் செல்லும் செல்லாவும் இன்னும் சிலரும் ஆயாவுடன் சகஜமாகப் பேசத் தேடுவர். ஏனெனில் அவர்களிடம் பேசுவதே பாவம் என அந்த வீதி முழுவதும் யோசிக்கும் , இப்போது தான் புரிகிறது. அவர்கள் பறத் தெருவை சேர்ந்தவர் என்பதால் , ஆனால் பாட்டி அவர்களுடனும் நட்பாக இருப்பார். இப்படியாக சமூகத்தைப் பற்றிய புரிதலும் கூட
அவர்மறைமுகமாகத் தந்து இருக்கிறார் .

இப்படியான மிகச்  சாதாரண வாழ்க்கையில் பெரிய தத்துவங்களை சொல்லிச் சென்றவர் என் பாட்டி ,

என்னிடம் நிறைய பேர் நிறைய கேட்பார்கள் , உங்களால் எப்படி இப்படி இருக்க முடிகிறது ?எதற்கும் பயப்பட மாட்டேன் றிங்க , உங்களுக்கு கெடுதல் செய்யறவங்கள கூட கடந்து போறிங்க , எல்லார்கிட்டயும் இயல்பா பழகறீங்க .. இன்னும் நிறைய ..

கடந்த மிகச்சில வருடங்களாக நான் யோசிக்க யோசிக்க தட்டுப்பட்டது ஞானாம்பா ம்மா எனக்குள் நிறைய ரசவாதம் செய்து இருந்தது புரியவந்தது.

பெரிய பெரிய கனவுகளை அவர் சுமந்தாரோ இல்லையோ எனக்குத் தெரியாது , ஆனால் என்னை சுமக்க வைத்தார் .

என்ன , வேலைக்கு நான் போனதப்பார்த்து குளிர்ந்த அந்த நெஞ்சம் , அரசாங்க சம்பளம் வாங்கி கையில் கொடுக்க நினைச்சேன். ஒரு வருஷமா தராம இருந்ததால , அதுதான் குறை. மற்றபடி நான் டீச்சரா வந்ததுல பயங்கர சந்தோஷம் அவங்களுக்கு . நான் கல்யாணம் செய்த பிறகு வரும் போது , போகும் போது 10 ரூபாய் தருவேன் , (அன்று அது எனக்குப் பெரிய தொகை  ) சந்தோஷமா வாங்கிக்குவாங்க . எப்போ உடல் நிலை சரியில்லாம போனாலும் இறுதிக் காலத்தில் நான் அவர் அருகில் இருப்பது போல இயற்கை சூழல் அமைந்துவிடும்.

தன் கடைசி நாள், கடைசி மணி வரை தன் வேலைகளைத் தானே செய்து , யாருக்கும் எந்தத் தொல்லையும் தராத ஜீவன் இப்படியான மார்கழி மாதத்தில் இன்றைய தினத்தில் 2001 இன் டிசம்பர் 19 இரவு
12 .20க்கு என் மடியில் தான் உயிரை விட்டுச் சென்றது.

ஊர் கூடி அழுதது. என் அம்மாவிற்கு தெரியாத , ரோடில் போவோர் வருவோர் எல்லாம் விஷயம் கேள்விப்பட்டு பாட்டிக்காக அழுததைப் பார்த்து இருக்கேன். எத்தனையோ குடும்பங்கள சத்தமில்லாத சந்தோஷப் பட வச்சு இருப்பது தெரிய வந்தது. எப்பேற்பட் மனுஷியாக வாழ்ந்து இருக்கிறார். அவரை இடுகாட்டுக்கு எடுத்துச் செல்கையில் பலரின் குரல்கள் பெண்கள் வரக்கூடாது என்பதை மறுத்து அவரது இறுதி ஊர்வலம் போய் இடுகாட்டின் எல்லாப் பணிகளிலும் உடனிருந்தேன். 24 வருடங்கள் உயிரோடு அவருடன் வளர்ந்த நான் எப்படிப் போகாமல் இருப்பது ?

அந்த நாள் என் வாழ்வின் மிகப் பெரிய ஞானம் என்றே சொல்லலாம். வாழ்க்கைனா நம்மளால 4 பேர் நல்லா இருக்கணும் மற்றபடி இந்த உயிர் வேற எங்கயும் பிரயோஜனப் படாது என , 17 வருஷமாச்சு அது புரிஞ்சு .அன்பு மட்டும் தான் வேறென்ன வேணும் என .

எப்போதும் என் நினைவலையில் இருக்கும் உறவு இவர் ,வருத்தமாக இல்லை , மகிழ்ச்சியாகவே இதை எழுதுகிறேன் .இரும்பு மனுஷிக்கு என் அன்பு முத்தங்கள் ❤️

உமா

No comments:

Post a Comment