Wednesday 8 August 2018

எனது வாழ்வில் கலைஞர்

கலைஞர்

சிறு வயதிலிருந்தே வீட்டில் அப்பா உதய சூரியன் சின்னத்தை வீட்டில் வைத்திருந்து , கட்சியைப் பற்றிப் பேசிப் பார்த்தவள் நான். தேர்தல் வந்தால் 20 நாட்களுக்கு முன்னரே ஒரு குழுவுடன் இணைந்து வீடு வீடாகச் சென்று ஓட்டு கேட்கும் நிகழ்வுகளைப் பார்த்துள்ளேன்.

பக்கத்து வீடு , எதிர்த்த வீடு , தூரத்து வீடுகள் என நிறைய பேர் வீடுகளில் கலைஞர் பற்றிய ஆரவாரம் இருக்கும்.

கொஞ்சம் பெரியவளான பிறகு அண்ணா பற்றி படிக்கையில் கலைஞர் பற்றி அறிந்தது சொற்பம்.

அம்மாவும் ஆசிரியர் என்பதால் அடிக்கடி வீட்டில் கலைஞர் பற்றிய பகிர்வு தேர்தல் சமயங்களில் பாட்டியுடனும் சேர்ந்து நடக்கும்

1996 இல் PTA இல் பள்ளியில் வேலை செய்யும் போது வந்த தேர்தலில்  பணி புரிய எனக்கு வாய்ப்பு வந்தது. எனது ஆசிரியர்  வள்ளியம்மை அவர்கள் தான் இந்த வாய்ப்பை ஏற்படுத்தி அழைத்துச் சென்றார்.  அப்போது DMK பெரும் வெற்றி பெற்றது. அப்போதுதான் சற்று அரசியல் பற்றி புரிய ஆரம்பித்த வயது.

திருமணத்திற்குப் பிறகு அங்கும் இதே போல கலைஞருக்குத்தான்  வீட்டில் மரியாதை ... இரண்டு முறை எனது கணவர் சென்னை வந்து கலைஞரை நேரில் சந்தித்து இருக்கிறார்  , ரொம்ப எளிமையாகப் பேசியதாகக் கூறினார் .

ஏதோ பாசம் உள்ளே இருந்து கொண்டே இருக்கும்  அரசியல் தாண்டி அந்தக் கலைஞனிடம் ....

சரி ... இப்போது எனது வாழ்வின் மாற்றங்கள் இவரால் நிகழ்ந்தவை பற்றி  ...

வாழ்வாதாரமான ஆசிரியப் பணி அவரால் தான் கையெழுத்தானது... வாழ்வென்னும் பெருங்கனவு  என்று என்னைப் பற்றி  ஒரு இதழில் கட்டுரை சமீபத்தில் வெளிவந்தது, ஆனால் அன்று எனது ஒரே கனவு அரசு வேலை தான்.

1997 இல் திருமணத்திற்குப்  பிறகு , வறுமையின் நிறம் சிவப்பாகத் தான் இருந்தது, அன்றாடத் தேவைகளுக்காக ஒயர் கூடை பின்னும் வேலை செய்து வாழ்ந்திருக்கிறேன். காஞ்சிக் கோவில் பள்ளியில் அப்போது இருந்த தலைமை ஆசிரியர் யாராவது ஒரு ஆசிரியர் பள்ளிக்கு வரவில்லையெனில் 9 மணிக்குப் பிறகு உதவியாளரை அனுப்பி என்னை வந்து பாடம் எடுக்கச் சொல்லுவார் , அப்படி ஒரு நாள் சென்றால் தான் ரூ 25 ரூபாய் சம்பளம் , யாராவது லீவு போட மாட்டாங்களா எனக் காத்துக் கொண்டு இருப்பேன். எனது கணவரின்  2000 ரூபாய் சம்பளத்தில், அவரது பெற்றோரிடம் 1000 கொடுத்து விட்டு மீதமுள்ள 1000 த்தில் குடும்பம் நடத்த அவ்வளவு சிரமப்படுவோம்  ...

ஆகவே அரசுப் பள்ளியில் வேலைக்காக 4 ஆண்டுகள் காத்திருந்த தே எனது அன்னாளின் மிகப் பெரும் கனவாக இருந்தது.

அந்த முதல் கனவும் கலைஞரால் தான் நனவாகியது. நீங்கள் கேட்கலாம் , படிச்சா அரசு வேலை தரப் போவது , அவர் என்ன செய்தார் என ? இல்லை அப்போது படித்தவர் கூட இன்னும் ஆசிரியர் பணி கிடைக்காத சூழல் அடுத்த ஆட்சியால் இன்னும் இருக்கிறார்கள் வேலை கிடைக்காமல் .

2001 மே மாதம் தேர்வாகி வரிசைப் பட்டியலில் வந்தாலும் , அடுத்த ஆட்சி மாற்றத்தில் ஆகஸ்ட்டில்  தான் ஆணை கைக்கு வந்தது.

இவரது தலையீட்டால் தான், அவரது கைகளால் ஆணை பெறப்பட்டதால் GPF க்குள் வர முடிந்தது.

எத்தனையோ நன்மைகள் , வெறும் பொருளாதாரம் என்கிறோம். அதுதானே எல்லாவற்றையும் நிர்ணயிக்கிறது.

வெறும் 5 ஆயிரத்திற்குள்  சம்பளம் பெற்ற நான் 6வது ஊதியக் குழுவை கலைஞர் வந்ததால் பல மடங்கு பெருகி இன்று 70 ஆயிரத்தைத் தொட்டிருக்கிறேன் என்றால் கலைஞர் மிகப் பெரும் காரணம் என்றால் மிகையாகாது. (இது என்னைப் போன்ற எல்லா ஆசிரியருக்கும்   , அரசு ஊழியருக்கும் பொருந்தும்...)

தூரத்தில் நின்று ஒரு புடவையை, ஒரு புத்தகத்தைக் கண்களால் மட்டுமே ரசிக்க முயன்ற என்னைப் போன்ற வாழ்வின் அடித்தட்டு சூழலில் இருந்து வந்தவர்களுக்குத் தெரியும் இன்றைய எங்களது பொருளாதாரம் எங்களை எவ்வளவு தலை நிமிர வைத்துள்ளது என்று.

அதுவும் பெரியார் மண்ணில் வாழ்ந்து பெண்ணுரிமைச் சிந்தனையை அறிந்தும்  அதை செயல்படுத்த என்னைப் போன்ற பெண் களுக்கு ஒரு பொருளாதார சுதந்திரம் தேவைப்படுகிறது.  அதைக் குறையில்லாமல் எனக்குத் தந்த வழி என்னவோ கலைஞர் தான்.

இந்த வேலை இல்லை என்றால் என்னவாகி இருக்கும் ?  அன்றாடம் ஏதாவது வயிற்றுப் பிழைப்புக்குப் பொருள்  தேடும் மானுடமாய் போயிருப்பேன். அல்லாமல் எனக்காக ஒரு பாதை , நோக்கம் , பயணம் எனக் கற்றுக் கொடுத்துள்ளது கலைஞரின் ஒரு ஆணை .

ஒழுகும் அரை நூற்றாண்டு  கடந்த எங்கள் மண் வீடு இந்த வேலையால் தான் இறுமாப்புடன் உயர்ந்து நிற்கிறது.

அவ்வப்போது பிள்ளைகளிடம் கடைசி காலத்தில் உங்கள கஷ்டப்படுத்த மாட்டேன்டா , சாகும் வரை பென்ஷன் வரும் , நான் செத்தாலும் அப்பாவுக்குப் போதும் , நீங்க உங்க வாழ்க்கைக்கு கஷ்டப்படுங்கன்னு சொல்றேன்னா அதுக்கும் இந்த வேலை தான் காரணம் .

அன்றாடம் உணவுக்கும் , குடும்ப செலவுக்கும் , வீட்டு வாடகைக்கும் துன்பப்படும் எத்தனையோ மனிதர்களை தினம் சந்திக்கிறேன்.

அவர்களைப்  பார்க்கையில் நாம் எவ்வளவு கருணை பெற்றவர்கள் என்பதை உணர்வேன் , இந்தக் கருணைக்கு ஒரு கையெழுத்துப் போட்டது கலைஞர் தான் .

சமச்சீர் கல்வி புத்தகத் தயாரிப்பின் போது கோவையில் அவர் நடத்திய செம்மொழி மாநாட்டுப் படங்களை எனது 5 ஆம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தின் முதல் பாடமான மூவேந்தரில் பயன்படுத்தினேன் , ஆனால் அந்த பச்சை ஸ்டிக்கர் ஒட்ட சொன்ன போது ரொம்ப பயந்தேன். ஆனா எதிர்க்கட்சிக் காரங்க கண்ணில் அது படவில்லை போலும் , அது எதுவும் மாறாம குழந்தைகள் படிக்க அப்படியே கிடச்சது.

மறுபடியும் இந்த சம்பளத்தப் பத்தி சொல்லணும்னா வட இந்திய மாநிலங்களுக்குப் பயிற்சிக்குப் போகும்  போது சட்டீஸ்கர் ,பீஹார் ,ஒரிஸா இன்னும் முக்கால் வாசி மாநிலங்களில் ,ஏன் கேரளாவில் கூட ஆசிரியர்களுக்கு இந்த சம்பளம் தரவில்லை அரசு .

சென்னை வந்த பிறகு நிறைய முறை கோபாலபுரம் பக்கம் சென்றுள்ளேன். அவரது வீட்டு வழியாகக் கூட 5 வருடம் முன்பு சென்றேன்.இன்றிருக்கும் மனோ நிலை அன்று இருந்திருந்தால் நிச்சயம் சந்தித்து இருப்பேன் .என்னவோ அதை செய்யவில்லை .. தற்போது வருத்தமாக உள்ளது.

சென்னையில் திரும்பிய இடமெல்லாம் வானுயர்ந்து வீற்றிருக்கும் வரலாற்றுச் சின்னங்களை நிறுவியது கலைஞரே என அறியும் போது அந்தப் பக்கம் பேருந்தில் , ரயிலில் செல்லும் போது பார்க்கையில் ஒவ்வொரு முறையும் பிரம்மிப்பேன்.
அவற்றுள் முக்கியமானது ACL அண்ணா நூற்றாண்டு நூலகம் ... எத்தனாயிரம் மாணவர்கள் பயன் பெறுகின்றனர் என்று கணக்கிட்டால் அறிவோம்  பெருமையினை ...

அரசியலில் எவ்வளவோ நிறை குறைகள் இருந்தாலும் , ஆனால்

"குணம் நாடி குற்றமும் நாடி அவற்றுள்
மிகை நாடி மிக்கக் கொளல் "
..என்பதாக நான் கலைஞரைப் பார்க்கிறேன்.

இப்படி என்னை எழுத வைக்க ஒரு தகுதியையும் இந்தப் பணியே எனக்குத் தந்துள்ளது என்றால் அதுவே உண்மை , அங்கும் கலைஞர் நிற்கிறார்.

இவ்வாறு நம் ஒவ்வொரு வர் வாழ்விலும் நேரடியாக மறைமுகமாக வாழும் பெருந்தலைவர் கலைஞர் என்பதில் கடுகளவும் ஐயமில்லை.

பெரியாரின் விரல் பிடித்து நடக்க ஆசைப்படும் என்னைப் போன்ற பெண்களின் வாழ்க்கையில் கலங்கரை விளக்கமாக கலைஞர் அவர்கள் வழி காட்டுகிறார்.

சொலன் வல்லன்  சோர்விலான்
அஞ்சான் அவனை
இகழ் வெல்லல் யாருக்கும் அரிது .. என்ற
வள்ளுவனின் சொல்படி மெரினாவை அடைந்த கலைஞரைத் தவிர  பெருந்தலைவர் எனத் தமிழகத்தில் வாழும் மனிதர்கள் எவருமில்லையே என இனி என் பள்ளிக் குழந்தைகளிடம்  சொல்ல வேண்டி இருக்கிறதே என்ற வேதனையுடன்

உமா

No comments:

Post a Comment