Tuesday 27 March 2018

கலைப்பயண விழா குறித்த கலந்துரையாடல்

கலைப்பயண விழா குறித்த கலந்துரையாடல்

மார்ச் 10 அன்று அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்காக  நாம் முன்னெடுத்துள்ள கலைப் பயணம் சார்ந்த பயிற்சியின் திட்டமிடல் முனைவர் காளீஸ்வரன் ஐயா அவர்களுடன் இன்று சென்னை லயோலா கல்லூரியில் நடந்தது .

1986 முதல் அரசு சார்ந்து தனது கலைப்பயணத்தைத் தொடங்கிய இவர் ,சிவகங்கை மாவட்டம் , இராமநாதபுரம் மாவட்டங்களில் தேர்ந்த கலைக் குழுக்களை உருவாக்கி இன்று வரை தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நமது கிராமியக் கலைகளை உயிர்ப்பித்து வருகிறார்.அறிவொளி இயக்க செயல்பாடுகளில்
மக்களிடையே விழிப்புணர்வைத் தந்த பெருமை இவரது கலைக்குழுக்களுக்கு உண்டு.

லயோலா கல்லூரி 7 ஆண்டுகள் அரசுக்கு இவரை மாற்றுப் பணிக்கு தாரை வார்த்துள்ளது கல்விப் பணிக்காக ...

மனித வள மேம்பாட்டுத்துறையுடன் இணைந்து உலக இலக்கியங்களை நம் பள்ளிக் குழந்தைகளுக்காக தனது மாணவர் சமூகத்துடன் இணைந்து உருவாக்கியஅனுபவத்தை நினைவு கூரும் இவர் , தனது 25 வருட உழைப்பைக் கொண்டு தமிழகம் முழுக்க 25 ஆயிரத்திற்கும்  மேற்பட்ட கலைஞர்களை உருவாக்கி உள்ளார் .

2012 வரை அனைவருக்கும் கல்வி இயக்கம் இவரைப் பயன்படுத்தி தமிழகம் முழுவதும் சுமார் 40,000 இடைநிற்றல் குழந்தைகளைக் கண்டறிய இவருக்கும் அரசுப் பள்ளிகளுக்கு மான பயணம் நெடுந்தூர அனுபவமிக்கது.

அரசுப் பள்ளிகளுக்காகவே பல்வேறு முயற்சிகளைத் தனது கலை விழாக்களின் வழியே செய்து வரும் முனைவர் காளீஸ்வரன் வீதி தோறும் ,சந்தைகள் தோறும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு தந்து கொண்டு உள்ளார்.

நமது அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்களைப் பற்றி அறிந்துள்ள இவர் தொடர்ந்து ஆசிரியர்களுக்கு பயிற்சி தர தன்னால் இயன்ற அளவு வழிகாட்டி மாவட்டக்குழுக்களை ஆங்காங்கே வழிகாட்ட உதவுவதாகக் கூறினார் .

வாசிப்பிற்கான தளத்தையும் உருவாக்கி வரும் இவர் தனது நாட்டுப் புறக் கலைகளின் வழியே வாசிப்பின் முக்கியத்துவத்தை மாணவர் மத்தியில் எடுத்துச் செல்லும் பணியிலும் தன்னை ஈடுபடுத்தி வருகிறார்.

அமைதி வாசிப்பு , உரத்த வாசிப்பு , காட்சி வாசிப்பு என மாணவருக்கு விரிகிறது இவரது சிந்தனை.

பள்ளிக் கல்விப் பாதுகாப்பு இயக்கம் பற்றி பேசுகையில்ச. மாடசாமி   ஐயாவையும் JK    அவர்களையும் வெகுவாக நினைவு கூர்ந்த இவர் , தான் அடுத்து வரும் பள்ளிக் கல்விப் பாதுகாப்பு இயக்கக் கூட்டத்தில் கலந்து கொள்வதாகக் கூறினார் .

செயல்பாடுகள் வெவ்வேறாக இருப்பினும் நோக்கம் ஒன்றே ஆதலால் அரசுப் பள்ளிக்காக நம்மோடு கரம் கோர்க்கும் முனைவர் காளீஸ்வரன் ஐயா அவர்களோடு இன்றைய கல்வி முறை , மாணவர் சார்ந்த அணுகுமுறை என சுமார் ஒன்றரை மணி நேர உரையாடல் மகிழ்வாக இருந்ததோடு உத்வேகத்தைத் தந்தது.

இன்னும் நிறைய இருக்கின்றது எழுதுவதற்கு .... இப்போது இது மட்டும் ..

அன்பும் நன்றியும் விஜய் மற்றும் ஆண்டனி சாமி

நமது அடுத்த சந்திப்பு வரும் மார்ச் 10
சனிக்கிழமை காலை 10 மணிக்கு சென்னை மீனம்பாக்கம்  சிவில் ஏவியேஷன் நடுநிலைப் பள்ளியில்  ....

அன்புடன் உமா

No comments:

Post a Comment