Sunday 18 March 2018

வாசிப்பை நேசிப்போம் ..... 6

நூல் விமர்சனம் - சர்வதேச பெண்கள் தினத்திற்கானது ..

தாய் - இரண்டெழுத்து சொல் என்றாலும் 2 கோடிக்கும் மேற்பட்ட வாசகர்களால் உள்வாங்கப்பட்ட மிகப் பெருமை வாய்ந்த நாவல் இது. நூலாசிரியர் மேக்சீம் கார்க்கி உலகப் புகழ் பெற்ற இலக்கியப் படைப்பாளர்கள் வரிசையில் முன் நிற்பவர் . அந்த ருஷ்ய மொழியின் நூலை , ரகுநாதன் அவர்கள் தமிழாக்கம் செய்து பாரதி புத்தகாலயம் வெளியிட்டு இருக்கிறது . மொத்த பக்கங்கள் 560 , இரண்டு பாகங்களாகவும் , ஒவ்வொரு பாகத்திற்கும் 29 அத்யாயங்களாக மொத்தம் 58 அத்தியாயங்களாக ஒரு நெடுங்கதையாக நம்முள் பயணிக்கிறாள் தாய் .

முதல் பதிப்பு 1904 இல் வெளிவந்திருந்தாலும் ஒரு நூற்றாண்டைக் கடந்தும் வாசகரை தன் பக்கம் உயிர்ப்புடன் ஈர்த்து வைத்துள்ள சக்தி இந்த மாபெரும் நூலுக்கு இருப்பது எனக்கு வியப்பாக இருந்தது.

சங்க இலக்கியங்களிலும் சொல்லப்படாத நீதியை ,திரைப்படங்கள் தொடாத புரட்சி வாழ்க்கையை இந்தத் தாய் நமக்குக் கூறுகிறாள். சுரண்டலுக்கான  பொருளும்  தொழிலாளி  முதலாளி பேதங்களும் பக்கத்துக்குப்  பக்கம் கதையைக் கட்டமைக்கிறது.

ஒன்றுமே அறியாமல் செக்கு மாடுகளாய் சுழன்று வேலை செய்யும் தொழிலாளி வர்க்கத்தின் சிந்தனைகள் எவ்வாறு கனல் மூட்டப்படுகிறது ,புரட்சியாளர்கள், எவ்வாறு உருவாகின்றனர்  என்பதை   மிக அழகாகப் பதிவு செய்துள்ளார் கார்க்கி .

உழைக்கும் வர்க்கம் எவ்வாறு தங்கள் உடல்  வலிகளைப் போக்க ஓட்கா மதுவைப் பருகுவதும் , தத்தமது வீடுகளிலும் வசிப்பிடப் பகுதிகளிலும் கிளர்ச்சிகளை உருவாக்கி, சண்டையிட்டுக் கொள்வதும் , வீடுகளில் மனைவியை அடித்துத் துன்புறுத்துவதும் என நாள்தோறும்  நடப்பதைப் பதிவு செய்யும் தாயின் பக்கங்கள் இன்றைய நமது தமிழ்ச் சமூகத்தின் சீரழிவை நமக்கு நினைவுபடுத்துகிறது.

உண்மைக்கும் நேர்மைக்கும் உழைப்பிற்கும் வழி காட்டும் பாடமாகவும் பொறாமை , சுரண்டல் , பேராசை இவற்றை  அடியோடு ஒழிக்கும் அணுகுமுறையும் கதையினூடே கருக் கொண்டு , புரட்சிப் பாதைக்கு வித்திடும் அடிப்படைப் பாடமாக அமைகிறது தாய் .

தடை செய்யப்பட்ட புத்தகங்களைப் படிப்பதால் தன் ஒரே மகனுக்கு ஆபத்து வருமோ என , தாய் பயப்படுவதும் ,பயம்தான் நம்மை அழிக்கிறது , நம்மை அதிகாரம் பண்ணி ஆளுகிறவர்கள் நமது பயத்தை வைத்துத்தான் காரியம் சாதிக்கிறார்கள் , பயப்படாதே என மகன் பாவெல் தேற்றுவதும் எல்லா மக்களுக்கும் பொதுவான நீதியல்லவா ...

படிப்பறிவை வாழ்க்கைத் துன்பத்தில் மறந்து விட்ட தாய் , படிப்படியாக புத்தகம் வாசிக்கக் கற்றுக் கொள்வதும் , தனது மகனும் அவனது தோழர்களும் செல்லும் புரட்சிப் பாதையை மனமுவந்து பின்பற்றுவதும், தொழிலாளர் கூட்டங்களுக்கும் போராட்டங்களுக்கும் சென்று , மெதுவாகத் தானும் புரட்சியாளராக உருமாறுவதும் தாய்க்  கதையின் மிக அழகிய இடங்கள் .

மகனைப் பற்றியும் அவனது சகாக்கள் பற்றியும் மனதிற்குள்  கவலைப்படும் இடங்களில் தாயின் பாசம் நெகிழ வைக்கிறது. ஆனால்  இறுதியில் அவர்களை சைபீரியாவிற்கு நாடு கடத்தும் தீர்ப்பை நீதிபதிகள் வழங்கிய போது கூட, மனம் கலங்காமல், புரட்சிகரமாக ,பாவப்பட்ட மக்களிடையே மகனின் பேச்சிற்கான பிரசுரங்களை விநியோகம் செய்யும் இடங்களில்அந்தத் தாயின் செயல் , கம்பீரமான புரட்சிக் காட்சியை நம் மனக்கண் முன்னே கொண்டு வருகிறார் கார்க்கி.

தோழர்களாக ஒருவர் மனம் ஒருவர் கவர்ந்து தங்கள் நோக்கம் சிதையாமல் கை கொடுக்கும் உறவுகள் 560 பக்கங்களிலும் நம்மோடு பிரயாணிக்கின்றனர் முஜீக்குகளின்  இயல்புகள் தொடர்ந்து அந்த சமூகத்தின் மக்கள் வழியே காட்சிப்படுத்தப்பட்டதும் , கடவுள் நம்பிக்கை புரட்சியாளராக மாற்றம் பெற எந்தத் தடையும் போடாது என்பதை தாயின் கடவுள் நம்பிக்கை வழியே உறுதிப்படுத்தி இருப்பதும் சிறப்பு .

நாவல் முழுவதும் ஒடுக்கப்பட்ட சமூகத்தின் தொழிலாளிகளின் வாழ்க்கை நம்மை மரண வேதனையை அனுபவிக்க வைக்கிறது. ஆண், பெண் கதா பாத்திரங்களை சமமாக, புரட்சிப் பாதையில் பயணிக்க வைத்திருப்பதும் , பெண் புரட்சியாளர்களை மிக அதிக தைரியமிக்கவர்களாக வாழ வைத்திருப்பதும் எனக்கு மிகப் பிடித்திருந்தது.

நாவலின் ஆரம்பம் முதல் இறுதி வரை நம் மனதையும் அறிவையும் ஒரே நேர்க்கோட்டில் பயணிக்கும் வகையில் ஒரு அற்புதமான முழு நீளத் திரைப்படக் காட்சியாக நம்மை லயிக்க வைக்கிறது தாய் , மனிதனை மானுடப் படுத்தி புதிய சமூகத்தை நிர்ணயிப்பதில் இலக்கியம் வகிக்கின்ற மகத்தான பாத்திரத்தை , ஒரு மாபெரும் புரட்சியில் பெண்கள் செய்யும் தியாகங்கள் , அவர்களது இன்றியமையாத பங்கு இவற்றை ஒரு அற்புதமான நடையில் பதிவு செய்திருக்கிறார் கார்க்கி .

சோஷலிஸ்ட்கள் பற்றிய புரிதலை கடைசி அத்யாயத்தில் பாவெல் தனது வழக்கின் கருத்துகளாக நீதிபதிகளின் முன் வைப்பது ஒட்டு மொத்தக் கதையின் கருப்பொருளாக இருக்கின்றது. மே தினத்தன்று நடக்கும் உரிமைப் போராட்டமே கதையின் திருப்புமுனையாக அமைகிறது. அதற்காக அவர்கள்  பாடும்
"துயில் கலைந்து அணியில் சேர விரைந்து வாரும் தோழர்காள் " என்ற பாடல் வரிகளும் , ஜார் அரசனுக்கு எதிராக அவர்கள் செங்கொடி ஏற்றுவதும் நம்முள் புரட்சி மனப்பான்மையை ஊன்றுகிறது.

தாயாக வரும் பெலகேயா  நீலவ்னா , மகனாக வரும் பாவெல் , அவனது காதலியாக வரும் ஷாஷா , தோழர்களாக வரும் .....ஹஹோலாக கதை முழுக்க வரும் அந்திரேய் நஹோத்கா, பியோ தர் மாசின் , நதா ஷா , நிகலாய் இவான விச் ,மிகயீல் இவானவிச், கொல்லுப்பட்டறைத் தொழிலாளி  ரீபின் , மாறுவேடம் போடுவதில்  வல்லமை கொண்ட புரட்சிப் பெண்ணாக வரும் நிகலாயின் சகோதரி  சோபியா , எபீம் , சிஸோவ் , புகின் ,பியோ தர் , சமோய் லவ் , அச்சுப் பிரதி தயாரிக்கும் லுத்மீலா , செர்கேய் என்று தேர்ந்த பாத்திரங்களை  கதை முழுவதும் கச்சிதமாக அறிமுகப்படுத்திய கார்க்கி இவர்களோடு நம்மை எல்லா அத்யாயங்களிலும்  வாழ வைக்கிறார்.

உழைக்கும் மக்கள் அனைவருக்கும் சாட்சியாக எழுதப்பட்டு தாயின் குரலாகப் பதிவு செய்துள்ளதே இதன் மாபெரும் வெற்றிக்குக் காரணம் எனலாம்.
பைபிளுக்கு அடுத்தபடியாக உலகம் முழுவதும் பதிப்பிக்கப்பட்டு கோடிக்கணக்கான மக்களால் வாசிக்கப்பட்ட நூல் தாய் என பதிப்புரையில் குறிப்பிட்டதற்கு இணங்க , நாம் அனைவரும் படிக்க வேண்டிய நூல் , பெரியாரையும் , அம்பேத்கரையும் உள் வாங்கியிருக்கும் இதை ஒவ்வொரு மனிதனும் வாசித்தல் அறமுடைய அரணுடைய சமுதாயம் உருவாக வழிகாட்டும் , உலக இலக்கிய வரிசையில்  பெண்ணை மையப்படுத்தி எழுதப்பட்டுள்ள இது புரட்சிக் காப்பியம் என்று கூட சொல்லலாம்.

இப்புத்தகத்தை வாசிக்க வாசிக்க தாய்மையும் , பெண்மையும் மட்டுமல்ல பெண்களுக்கான  வாழ்க்கை , புரட்சிக்கும் வித்திட வேண்டும் என்ற எண்ணம் என்னுள் வேரூன்றியது, தாயாக வரும் நீலவ்னா பெலகோயாவினுள் நான் என்னைக் காண விழைகிறேன்  . மறுமலர்ச்சி சமுதாயத்தைக் காண வேண்டுமெனில் இது அனைத்து மாணவரும் ஆசிரியரும் படிக்க வேண்டிய புத்தகம் .சமீபத்தில் கல்வித் துறை செயலர் திரு உதயச்சந்திரன் அவர்கள் கூட தன்னை ஈர்த்த முதல் ஐந்து புத்தகங்களுள் ஒன்றாக இப்புத்தகத்தைக் குறிப்பிட்டு செய்தி வெளியிட்டு இருந்தது தமிழ் இந்து நாளிதழ் ...

இன்று காலை தோழர் JK அவர்களுடன் பேசுகையில் அவர் ,.. ஒரு முறை புதுச்சேரியில் இப்புத்தகத்தைப் பற்றி கலந்துரையாடிய போது
ஓய்வு பெற்ற தமிழாசிரியர் திரு சொக்கலிங்கம் "மேக்சிம் கார்க்கி .... உன்னால் மட்டும் எப்படி ஒரு தாயைப் பெற்றெடுக்க முடிந்தது ?"  என ஒரு கவிதையைக் கூறியதாகப் பகிர்ந்து கொண்டார். எவ்வளவு அர்த்தம் பொதிந்த வரிகள் !!!!!

இப்புத்தகத்தை எனக்கு அன்புப் பரிசாகத் தந்த தோழி Visali தலைமையாசிரியருக்கு  அன்பும் நன்றியும் ...

பத்து வருடங்களுக்கு முன்னரே வாசிக்க எண்ணிய இந் நூலை , தற்போது தான் வாசிக்க முடிந்தது . இந்த சர்வதேச மகளிர் தினத்தில் இந்நூலைப் பற்றி எழுதுவதைப் பெருமையாகக் கருதுவதோடு அனைத்துப் பெண்களுக்கும்  உழைக்கும் வர்க்கத்தின் சார்பாக சமர்ப்பிக்கிறேன்  .

அன்புடன்
உமா

No comments:

Post a Comment