Sunday 18 March 2018

2018 மகளிர் தின விருது

விருதல்ல .....வீர வணக்கம் !!!!
*****************************
கடந்த ஒரு மாத காலம் முன்பு அலைபேசி ஒலிக்க , வணக்கம் ... நான் தமிழ் மணவாளன்  பேசுகிறேன் , பெண்கள் தினத்தை முன்னிட்டு மார்ச் 10 அன்று ஒரு சிறிய விழா , அதில் கவியரங்கம் , கருத்தரங்கம் நடக்கிறது. தங்களது துறைகளில் சிறந்த சில பெண்களை அன்று பாராட்ட இருக்கோம். கல்வித்துறையில்  உங்களைத் தெரிவு செய்திருக்கோம் , வந்துடுங்க என்றார் , கண்டிப்பா வந்து விடுகிறேன் தோழர் என்று கூற , இதோ ஹேமா பேசறாங்க என்றார். ஹேமாவிடம் சில வார்த்தைகள் பேசி அன்றோடு அது மறந்து விட்டது.

ஆனால் தமிழ் மணவாளன் அவர்கள் இரு வாரங்கள் முன்பு அந்த விழா விவரங்களைத் தனது முகநூல் முகப்புப் படமாக வைக்க , திரும்ப நினைவுக்கு வந்தது.

மார்ச் 10 மாலை ....

இன்று காலை கலைப்பயணம் என்ற பயிற்சி ஒரு களப்பயணமே ... அதில் ஒருங்கிணைப்பும் பங்கேற்பும் முடிந்து சரியாக மாலை 5.45க்கு மின்சார ரயிலில் எழும்பூரை அடைந்து ICSA வின் வாயிலில் நின்றேன். அங்கு  அப்போதுதான்  விளக்கப் படத்தைக்  (Banner) கட்டிக் கொண்டு இருந்தனர் விழா ஏற்பாட்டாளர்கள் .
மெதுவாக 6.30 மணிக்கு  வரவேற்புரையைத் தோழி ரேகா அவர்கள் தர , எத்திராஜ் கல்லூரியின் பேரா அரங்க மல்லிகா தலைமையுரையாக சிலவற்றைப் பகிர்ந்தார். பெண்கள் தினம் உழைப்பை அடிப்படையாகக் கொண்ட வரலாற்றையும் , பெண்கள் சர்வதேச தினமாகக் கொண்டாட்டத்திற்கான  காரணம் , இன்றுள்ள நிலை என தனது பாணியில் ஒரு பேராசிரியராகவே விளக்கினார். தான் இவ்வாறு ஒரு முனைவரானதற்குப் பின்னால் தனது தாயின் உழைப்பு இருப்பதாகவும் கூறினார். பெரியாரின் சிலை உடைப்பு வரையிலும் பெண்ணியம் பற்றியும் சற்று விளக்கமாகவேப் பேசினார்.

தொடர்ந்து தோழர் தமிழ் மணவாளன் அவர்களது தொடக்க உரை ரத்தினச் சுருக்கமாக இருந்தது. இந்த விழாப் பகிர்வு அழைப்பிதழில் கூட ஆண்களது பெயர் வரக்கூடாது என கவனமாக இருந்தேன். ஆனால் தொடக்க உரை ஆற்றவேண்டுமாய் இங்கிருக்கிறேன்  எனக் கூறி , நடிகை ரோஹினி அவர்கள் கலந்து சிறப்பித்தது மகிழ்ச்சி எனக் கூறி , மிக முக்கியக் கருத்து ஒன்றைப்  பதிவு செய்தார்.

நாங்கள் உலக உழைக்கும் தினம் என்ற இந்த நவீனக் கலை இலக்கியப் பரிமாற்ற நிகழ்வுப் பகிர்வில் பெண்களுக்கு விருதுகள் வழங்கவில்லை , அவர்களுக்கு வீர வணக்கம் செலுத்தவே அழைத்தோம்  அதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றார். மிக மகிழ்வாக இருந்தது.

தொடர்ந்து ரோஹினி அவர்கள் , மிக இயல்பாகத் தனது கருத்துகளைப் பதிவு செய்தார். ஒவ்வொரு பெண்ணும் போற்றப்பட வேண்டியவரே , ஒவ்வொரு நாளும் பெண்கள் தினமே இன்று ஒரு நாள் மட்டுமல்ல ... ஒவ்வொரு பெண்ணும் சுயமரியாதையை வாழ்க்கையில் பெற போராடித் தான் வெற்றி பெறுகின்றனர். என் வீட்டூக் கருகே காய்கறி விற்கும் அம்மாவிடம் நான் அதைப் பார்க்கிறேன்.. ஒவ்வொரு பெண்ணும் , தாயாக , நல்ல மனைவியாக வாழ்ந்து பெண்களுக்கே உரிய சுயமரியாதையை அடைகின்றனர் எனக் கூறி சில நடைமுறை உதாரணங்களைப் பகிர்ந்தார். மேலும் இன்று பெருமைப் படுத்த அழைத்திருக்கும் பெண்களை ஏன் மேடையில் அமர வைக்கவில்லை ... எனக் கேட்டு செய்து இருக்க வேண்டும் என்றார்.

மீன் விற்பவர் , வீட்டு வேலை செய்பவர் , பூ வியாபாரி , ஆட்டோ ஓட்டுநர் , திருநங்கைகளுக்காகக்  களப்பணியாற்றுபவர், ஆசிரியராக இருந்து கல்வித்துறையில் களப்பணி செய்பவர்  , அரசியல் துறை தொகுதி கவுன்சிலராக இருந்து களப்பணி செய்பவர் , விவசாயத்தில் விதைகளை சேகரித்து தாவரப் பல்லுயிர்ப் பெருக்கம் செய்து வரும் ஒரு பள்ளி மாணவி இவர்களையே இந்த மேடை பெருமைப்படுத்தி வீர வணக்கம் செலுத்தியது. ஒவ்வொருவருக்கும் ரோஹினி அவர்கள் நினைவுப் பரிசை வழங்கி வாழ்த்துகள் கூறி அந்தத் தருணத்தை நெகிழ்வாக்கினார் .

தொடர்ந்து கவியரங்கம் ... பெண்களைப் பற்றி ,பெண்ணியம் பற்றி, பெண்களின் வாழ்வு , விளிம்பு நிலைப் பெண்கள் இப்படித் தொடர்ந்தது , தென்றல் , காயத்ரி , பாலைவன லாந்தர் என கவிதாயினிகள் வரிசையாக தத்தமது பாணியில் வாசித்து கைதட்டுகள் பாராட்டுகளாய் விழ ,

சற்று நேரத்திற்கெல்லாம்  சொற்ப மனிதரே அரங்கத்தை அலங்கரிங்க , கருத்தரங்கம் ஆரம்பமானது. பாவையர் மலர் வான்மதி இதை நன்றாகவே கண்டித்து , விழா முடிவு வரை இருக்கப் பழகுங்கள் என சற்று கோபம் காட்டியது நியாயமே ...

கருத்தரங்கு ஆரம்பம் ஷாலினி சமூக ஆர்வலர் இயல்பாகப் பெண்கள் இந்த சமூகத்தில் , வீடுகளில் , வேலை பார்க்கும் இடங்களில் சக மனிதர்களால் எவ்வாறு நடத்தப் படுகிறார்கள் என உணர்வு பொங்க எடுத்துரைத்தார். பெரிய பெரிய பெண்கள் தினக் கொண்டாட்ட  விழாக்களுக்கு சென்ற போது இல்லாத மகிழ்ச்சி இந்த பகிர்வு விழாவில் இருப்பதாகக் கூறினார் , காரணம் அங்கெல்லாம் பெரிய துறைகளில் தனது தாய் தந்தையால் வாழ்வில் முன்னேறி வந்தவர்கள் கெளரவிக்கப்படுகிறார்கள்  , ஆனால் இங்கு அப்படி அல்ல ... வாழ்வின் விளிம்பு நிலையிலிருக்கும் சுயமாக உழைத்து  வெற்றி பெற்றவருக்கு பெருமை தரும் விழா என்றார். உள்ளபடியே மகிழ்ச்சி ஷாலினி ...

தொடர்ந்து வான்மதி பேசுகையில்  , தனது வாழ்க்கை அனுபவங்களையே முன் வைத்தார். பெண்களுக்கான சுதந்திரத்தை ஆண்கள் தருவது என்பதெல்லாம் ஒன்றுமில்லை. நம் சுதந்திரம் நமது கையில் தான்  , அடுத்தவரிடம் பெண்களுக்கான சுதந்திரத்தை எதிர்பார்க்க வேண்டாம் என்றார். மிக இயல்பாகப் பகிர்ந்தார் .
அடுத்ததாக  பெண்ணியம் சார்ந்து பேச வந்தார் , உலக உழைக்கும் பெண்கள் தினமா ? எந்தப் பெண் உழைக்காமல் இருக்கிறார் ? எனக் கேட்டு ஆரம்பித்தார். ஆம் ... ஆணியம் என்று ஒன்று எப்படி பேசப்படுவதில்லையோ அவ்வாறு பெண்ணியம் என்று பேச இல்லாமல்  போகும் நாள் ஒன்று வந்தால் அன்று தான் பெண்கள் தினம் கொண்டாட்டமாக இருக்கும் என்று தனது கருத்துகளை முன் வைத்தார்.

அறிவிற் சிறந்த சமூகம் பெண்ணியம் சார்ந்த மிக நல்லதொரு கருத்தரங்கம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து தோழி ஹேமாவதி திரெளபதி நாடகத்தை ஒரு குட்டி தேவதையை வைத்து நடத்தினார். மிக அழகான வேடம் , நடிப்பு , வசனங்கள் என அனைவரையும் ஈர்த்தது .

நன்றி நவிழ இரவு 8.30 க்கு விழா சில புகைப்பட நினைவுகளுடன் நிறைவுற்றது. மகிழ்வும் அன்பும் விழா ஏற்பாட்டாளர்களுக்கு ....
அன்புடன்
உமா

.

No comments:

Post a Comment