Friday 2 March 2018

அன்புத் தோழி

அன்புத் தோழிக்கு ......

அன்பை மட்டுமே விதைத்து
அன்பை மட்டுமே அறுவடை       செய்து //
அன்பை மட்டுமே விலையாக்கி //
அன்பை மட்டுமே விற்றுத் தீர்க்கும் // எனது
அன்புத் தோழியே .....

சேர்ந்து விளையாடிய தருணங்கள் யாவும் //
சேராது பிரிந்து  போன இந்நாட்களைத் தின்ன //
நீயும் நானும் ஓடித் திரிந்த
நீள் கதைகளின் காவியங்கள்
நெஞ்சில் பதிய //
எனது அன்புத் தோழியே ....

தனிமையும் வெம்மையும் தந்த
நெருப்பு தினங்களில் நம்மை
நெருங்கி வந்த ஊழ்வினைகள்
உருத் தெரியாமல் வீழ்ந்த வேர்களாய் மாற அன்பு தந்த//
எனது அன்புத் தோழியே .....

வெண் பனியுருகும் மலையின்
மென்மையாய் நீ தந்த அன்பு
வன்முறை நீண்ட இரவின் நாட்களை //
என் உயிர் காத்த மயிலிறகுகள்
எனது அன்புத் தோழியே .....

இருள் நீக்கும் ஒளிக்கீற்றின் பிம்பமடி நீ எனக்கு //
அரண் தாங்கி எனைக் காக்கும் வரம் நீ எனக்கு //
அறம் தந்து உரம் சேர்க்கும் கரம் நீ எனக்கு //
மனம் இறுகும் வேளைகளில்...
எனது அன்புத் தோழியே .....

எண்ணங்களின்  வெளிப்பாடு நீ //
எனது செயல்களின் வடிவம் நீ
பார்வையின்  தீர்க்கரெளத்திரம் நீ//
பேச்சின் அழியா ஸ்வரம் நீ
எழுத்தின் நேர்த்தியும் நீ ....
எனது அன்புத் தோழி .....

எனது அன்புத் தோழி
என்னுள்ளே வாழும் தோழி
எனக்கு நானே என்றும்
எனது அன்புத் தோழி ......

நன்றிகள்
உமா

No comments:

Post a Comment