Tuesday 19 May 2020

சதுரங்க

சதுரங்க (புதினம் )

இரவீந்திரநாத் தாகூர் வங்க மொழியில் எழுதிய இந்த நாவல் ஆங்கில மொழியில்  அசோக் மித்ர - வால் மொழியாக்கம் செய்யப்பட்டது . அதனைத் தொடர்ந்து தமிழில்   இராம. திருநாவுக்கரசு மொழி பெயர்த்த இந்த சதுரங்க என்ற பெயருடைய புதினம் சாகித்திய அகாதமி 2004 இல் வெளியிட்டுள்ளது. 

இந்த நாவல் நான்கு அத்யாயங்களைக் கொண்ட 102 பக்கங்கள் அடங்கிய குறு நாவல் .

ஆரம்பத்தில் தரப்பட்டுள்ள ஆங்கில மொழிபெயர்ப்பாளரின் குறிப்புரையில் இந்நூல் குறித்து பல தகவல்கள் உள்ளன. 

வங்க மொழியில் நான்கு வரிக் கவிதை ''சந்தால் ட்ரம் " என்ற ஒரு ஓசை ஒழுங்குக்கு உட்பட்டது. நான்கு அங்கமாக நடைபெறும் இந்த இசை விருந்தின் மீது தாகூருக்கு எல்லையில்லாத ஈடுபாடு உண்டு , உலகின் மிகப் பெரிய இலக்கியப் படைப்பாளியான தாகூர் தனது பல கதைகளையும் புதினங்களையும் நான்கு பகுதிகளைக் கொண்டனவாகவேப்  படைத்துள்ளார் .அதன் அடிப்படையிலேயே இந்த சதுரங்க புதினத்தையும் படைத்துள்ளாராம் .தாகூரின் 50 வயதுகளில் (1914 - 1915 ) இப்புதினத்தைப் படைத்துள்ளார். தாகூரின் பிறந்த நூற்றாண்டு விழா ஆண்டாகிய 1961 இல் தான் இதன் ஆங்கில மொழிபெயர்ப்பு வெளிவந்துள்ளது. அதன் பிறகு 50 ஆண்டு கழித்தே தமிழில் மொழி மாற்றம் செய்யப் பட்டுள்ளது. 

அமைதியான உரையாடல்கள் அரைமனதான தனி மொழிகள் ,ஆசிரியரின் ஆழமான அக உலகக் கருத்தோட்டங்கள் இவற்றையெல்லாம்  கொண்டு இந்தப் புதினம் வங்கத்தின் அரை நூற்றாண்டு வாழ்க்கையை விவரிக்கிறது.

இதில் பெரியப்பா , சச்சிஸ் , டாமினி , ஸ்ரீபிலாஸ் என்ற 4 அத்யாயங்கள் நமக்குள் ஒரு பெரிய தாக்குதலை உருவாக்குகிறது. முதல் அத்யாயம் - ஈஸ்வர சந்திர வித்யாசாகரையும் அவருடைய இயக்கங்களையும் , இந்த நூற்றாண்டில் அவருடைய ஆன்மிக இயக்கம் ஏற்படுத்திய தாக்கங்களையும் காட்டுவனவாக உள்ளது. விதவை மறுமணம் புரிந்து கொள்வதற்கான அங்கீகாரம் ஆகியனவும் , விவேகானந்தர் இந்தியாவில் உருவாக்கியவை , நிவேதிதா இவர்கள் செயல்பாடுகளை டாமினியும் குகைப் படிமமும் நினைவூட்டுகின்றன . டாமினியை வங்காளத்தைத் தவிர வேறு எந்தப் பகுதியிலும் காண முடியாது போலும். ஸ்ரீ பிலாஸ் தன்னிரக்கக் குணம் பெற்றவன் அதிலிருந்து விடுபட விரும்புபவன். இவர்கள் அனைவருமே தாகூரின் முதல் ஐம்பதாண்டு கால வாழ்வின்  பிரதிநிதிகள் என்கிறார் அசோக் மித்ர. 

இன்றைக்கு 100 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டுள்ள இப் புதினம் மாறி மாறி நம்மை வேறு வேறு மனநிலைக்கு அழைத்துச் செல்கிறது. ஒரே குடும்பத்தில் முரண்பட்ட எதிரெதிர் மனநிலையில் சகோதரர்கள். கம்யூனிஸத்தையே தனது உயிர் மூச்சாகக் கொண்டு வாழும் சச்சிஸ்ஸின் பெரியப்பா ஜக்மோகனிடம் வளரும் சச்சிஸ் தானும் அவரையே உள்வாங்கி வளருதலும் இவர்களை எதிர்த்து இன்றைய சொல்லாடலில் நாம் பார்க்கும் சங்கிகளாக ஜக்மோகனின் தம்பி குடும்பமான ஹரி மோகன் சார்ந்த உறவுகள் செய்யும் அத்தனை குழி வெட்டும் காட்சிகளும் இன்றைய சமூக அரசியலை அப்படியே கண் முன்னால் வரவைக்கின்றன. 

ஜக்மோகன் தன் வீட்டில் இரவு வகுப்புகள் வைத்து அங்கு வாழும் அடித்தட்டு மக்களுக்கு உதவுதல் முதல் பல செயல்பாடுகளைப் பார்த்து , படித்து வளரும் சச்சிஸ்  புரட்சியின் வடிவமாக உருமாறுகிறான். ஆனால் இவற்றை ஏற்காத இவனது சொந்தத் தந்தையும் குடும்பமும் இவனையும் பெரியப்பாவையும் பிரிக்க செய்யும் சதி , தன் அண்ணன் கை விட்டு குழந்தையைத் தந்த நானி பாலாவிற்கு வாழ்க்கைத்  தர சச்சிஸ் முடிவெடுப்பது கண்டு , சச்சிஸைத் தோழனாக வளர்த்த ஜக்மோகன் பெருமிதம் கொள்வதும் ஆனால் அதை ஏற்க முடியாத நானி பாலா தற்கொலை செய்து கொள்வதும் சமூகத்தின் அன்றைய பல அடுக்குகளை நமக்குப் புரிய வைக்கிறது. 

தற்போதைய கொரோனா போல அன்று கொள்ளை நோயாக வந்த பிளேக் நோய்க்கு தன் வீட்டையே நோயாளிகளுக்கான  மருத்துவமனையாக மாற்றி சேவை செய்யும் ஜக்மோகன் , ேநாய்த் தீவிரத்தால் இறந்து சச்சிஸ் என்ற மனிதனை மீளாத் துயரத்துக்கு ஆளாக்கிவிடும் காட்சிகள் நம்மை வருத்துகின்றன. 

ஆனால் கொஞ்சமும் நாம் எதிர்பார்க்காமல் அடுத்தடுத்த அத்யாயங்களில் சச்சிஸ் தனது பெரியப்பாவின் இழப்பை ஏற்க முடியாமல் லீலானந்த சுவாமியைத் தேடுவதும் ஆன்மிகத்தில் மட்டும் தன்னைக் கரைத்துக் கொள்வதும் ஒட்டு மொத்தமாக நம்மை வேறு மனநிலைக்கு எடுத்துச் செல்கிறது.

நம்மைப் போலவே ஃபியூலஸ் கூட சச்சிஸ்ஸின் இந்த மாற்றத்தைக் கண்டு வெடவெடத்துப் போகிறான். சிங்கமாட்டம் வளர்ந்த பெரியப்பா வளர்த்த சச்சிஸ் லீலானந்த சுவாமிக்கு காலை அமுக்கி விட்டுப்  பணிவிடை செய்வதை அவனால் ஏற்கவே முடியாத போதும் ஏதோ ஒன்றால் தன்னிலை மாறி அவனும் லீலானந்தரின் முக்கியமான இரு சீடர்களில் ஒருவனாகி, (மற்றொருவன் சச்சிஸ் ) அவர்களோடேயே தங்கி விடுதல் என காட்சிகள் மாறி மாறி நம்மை தாகூரின் மனதுடன் உரையாட வைக்கின்றன.

இவர்களுடன் வாழும் விதவை தான் டாமினி , அவளின் கணவர் இந்த வீலானந்தரின் சீடர்களில் ஒருவராக ... பஜனைப் பாடும் ஒரு நாளில் இறந்து விட , டாமினியும், அவளது  கணவர் விட்டுப் போன சொத்துகள் உட்பட சாமியின் ஆளுகைக்கு உட்பட்டு தொடர் மன அழுத்தங்களுக்கு ஆளாகும் டாமினி இறுதியில் ஃபியூலஸ்க்கு வாழ்க்கைத் துணையாகிட .. ஆங்கிலத்தில் புலமை மிக்க ஃபியூலஸ் க்கு ஏற்கனவே ப்ரேம்சந்த் ராய் சந்த் ஆங்கில இலக்கிய விருது பெற்றிருந்ததால் பேராசிரியர் பணி எளிதில் கிடைக்க டாமினியுடன் வாழ்க்கையைத் துவங்கும் நாளில் கல்கத்தாவில்  ஜக்மோகன் பெரியப்பா சச்சிஸ் பெயரில் எழுதி வைத்த வீட்டை தம்பதிக்கு பரிசாகத் தந்க விடுகிறான் சச்சிஸ் ... இது ஒரு வித்யாசமான மனநிலையைத் தரும் சதுரங்க நிகழ்வுகளை மனதில் பதிய வைத்து விட்டது. 

உமா

No comments:

Post a Comment