Wednesday 30 May 2018

சூதாடியும் தெய்வங்களும்

சூதாடியும் தெய்வங்களும் :
இப்புத்தகம் வாய்மொழிக்  கதைகளின் சேகரமாக தொகுக்கப்பட்டுள்ளது.  தமிழில் சா.தேவதாஸ் மொழிபெயர்த்துள்ளார். பன்முகம் வெளியிட்டு முதல் பதிப்பு 2015 செப்டம்பரில் வெளிவந்து 200 ரூபாய் விலையைத் தாங்கியுள்ளது.

நாம் வளர்ந்த நாட்களைப் பின்னோக்கிப் பார்த்தால், சிறு வயதில்  வாழ்வின் பெரும் பகுதி கதைகளால் நிரப்பப்பட்டிருக்கும்.  எல்லோருக்கும் பொதுவான நியதி இது. உலகம் முழுவதிலுமே வாய்மொழிக் கதைகளுக்கு இன்றும் வரவேற்பு உண்டு. எண்ணிய மாத்திரத்தில் நம் மனம் கதைகளை வடிவமைக்கும் , திட்டமிடும் , கதைக்களத்தை உருவாக்கி கதை மாந்தர்களை உருவகப்படுத்தி , நம்முள் பிரயாணிக்க வைக்கும் ஆற்றலும் இவற்றை நம் எதிரில் உள்ள நபருக்குக் கூறும் போது  அவர்களையும் அந்த உலகத்தினுள்ளே இன்பமாக பயணிக்க வைக்கும் திறனும் இந்த வாய்மொழிக் கதைகளுக்கு உண்டு என்பதை நம்மால் மறுக்க முடியாது.
வாய்மொழிக் கதைகள் எப்போதும் எழுத்து இலக்கியத்திற்கு நேரெதிரானவை என்பது போல் , எழுத்து இலக்கியம்  ஆணின் அதிகாரக் குரலைப் பதிவு செய்தால் , நாட்டார் இலக்கியம் பெண் குரலை ஒலிக்கச் செய்யும் , காவியங்களில் தர்மனோ அர்ச்சுனனோ அதிகாரம் செலுத்த வாய்மொழிக் கதைகள் பாஞ்சாலியை மையப் பாத்திரமாக்கும் எனவும் அதிகாரத்திற்கு எதிரான கலகக் குரல் வாய்மொழி இலக்கியத்தின் ஆதாரப் புள்ளி . தெய்வம் உள்ளிட்ட யாரும் இங்கே பரிகசிக்கப்படுவர் என்பதை இந்நூல் பதிவு செய்கிறது.

கதைகளை எழுத்துகளாகப் படைக்கும் படைப்பாளிகள்  எல்லா இடங்களிலும் இருந்தாலும் இலக்கிய மற்றும் அரசியல் சூழலுக்கு ஏற்ப வாய்மொழிக் கதைகளை மீட்டெடுப்பதும் அவர்களது இன்றியமையாத கடமையாகக் கருத வேண்டும் என்பதை நினைவுபடுத்துகிறது  இந்நூல்.
இந்நூலில் , இந்தியக் கதைகள் , பர்மியக் கதைகள்  , இலங்கைக் கதைகள்  , சீனக் கதைகள் ,ஆப்பிரிக்கக் கதைகள் . ஐரோப்பியக் கதைகள் மற்றும் இத்தாலிக் கதைகள் என ஏழு நாடுகளைச் சேர்ந்த நாட்டுப்புறக் கதைகள் 33 எண்ணிக்கையில்  தொகுக்கப்பட்டுள்ளது.
வாய்மொழிக் கதைகளின் சேகரம் பற்றி ஒரு வரலாற்றையும் இதன் நூல் தொகுப்பாளர் தேவதாஸ் கொடுத்துள்ளார். காலனித்துவ ஆதிக்கக் காலத்திலிருந்த வாய்மொழிக் கதைகளின் தொகுப்புகள் பற்றியும் இன்று வரை உள்ள சேகரங்களையும் இங்கு பதிவு செய்துள்ளது சிறப்பு.
வாய்மொழிக் கதைகள் வெறும் கதைகளாக மட்டுமன்றி அவை சொல்லப்பட்ட காலகட்டங்களில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை , கலாச்சாரம், நம்பிக்கைகள் இப்படி எல்லாவற்றையும் வருடிச் செல்லும் தென்றலாக அமைகிறது சிறப்பு.
சூதாடியும் தெய்வங்களும் என்ற இந்நூலின் பெயரில் தான் முதல் வாய்மொழிக் கதை ஆரம்பிக்கின்றது. இந்தியக் கதையான இதில் உஜ்ஜயினியின் சூதாடி ஒருவன் திந்தாகராலா எவ்வாறு செல்வந்தனாகி சாபம் பெற்ற மனைவியை , தனது புத்திசாலித்தனத்தால் விடுவிக்கிறான் என்பதே சுவாரஸ்யமான கதை , படிக்கப் படிக்க ஏழு மலைக்குள் ஏழு குகைக்குள் என்று சிறு வயதில் கேட்ட கதைகளே நினைவுக்கு வருகின்றது. இந்திர லோகம்  நடன இசை , கடவுள்களிடம் பேசுவது , வேஷம் தரித்து நாட்டு மன்னனை புதையல் காட்டி நம்ப வைப்பது என இந்தக் கதை விறுவிறுப்பாக செல்கிறது.
அடுத்தடுத்தக் கதைகளும் கிளி , புலி , நரி என சிறு பிள்ளைகள் சொல்லும் புனைகதைகளாக , இருக்கின்றது. கிளி சொன்ன எழுபது கதைகள் (சுக சப்ததி) என்ற தலைப்பில் வருபவை 13 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த பாரசீக மொழித் தழுவல்களாக உள்ளன. அரேபிய இரவுகளின் கதைகள் பாணியில் இருக்கின்றன. ஆனால் பாலியல் தன்மை கொண்டதாகவும் இக் கதைகள் அமைந்திருப்பது சற்றே முகம் சுளிக்க வைக்கின்றது. அவ்வளவு நல்ல கதைகளாக எனக்குத் தோன்றவில்லை.
ஆனால் இரு பூநாரைகள் என்ற கதை மிக வித்தியாசமான கருத்தோட்டம். இது இராஜஸ்தானின் வாய்மொழி மரபிலுள்ள கதை , பெண்களுக்கிடையிலான தன்பால் உறவு இதில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு பெண்ணை ஆண் போலவே வீட்டில் வளர்த்தெடுக்க , அப்பெண்ணும் தன்னை ஆணாகவே எண்ணி இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்த நிலை , பிறகு எவ்வாறு இருவரும் இணைந்து வாழ்க்கை நடத்துகின்றனர் எனவும் அதோடு ஆவி , அரண்மனை  மாளிகை இப்படி சுவாரஸ்யம் இணைந்து ஆணாதிக்கமும் அதன் வன்மமும் கூட பதிவு செய்யப்பட்டுள்ளது. இரு பூநாரைகள் உள்ளபடியே அரிய பதிவு. இதோடு இத்தொகுப்பின் இந்திய நாட்டு வாய்மொழிக் கதைகள் முடிவுக்கு வந்து விட இனி பர்மிய நாட்டுப்புறக் கதைகள் ஆரம்பமாகின்றன.
பர்மிய நாட்டுப்புறக் கதைகள் ..... இதில் சில வரலாற்றுக் குறிப்புகளும் இடம்பெற்றுள்ளன. அதாவது கி.பி 10 44 வரை பர்மாவிற்கு ஆவணப்படுத்தப்பட்ட வரலாறு இல்லை எனவும் அதன் பின்னரே பர்மிய  மொழியின் அகரவரிசை உருவாக்கப்பட்டுள்ளது. பெளத்த ஜாதகக் கதைகள் பரவல் நாட்டார் கதைகளை அஸ்தமிக்க வைத்து விட்டதாக இந்நூல் குறிப்பிடுகிறது.
மேலும் பர்மிய நாட்டுப்புறக் கதைகளில் அதிகமானவை  விலங்குகளின் பங்கே , நீதியை வற்புறுத்தும் விலக்குகளின் கதைகளாக உள்ளன. அதுவும் அதிகமாக ஆட்சி செலுத்துவது முயலே. கோழிகள்  மாய ஆற்றல் வாய்ந்ததாகவும் , ஒற்றைக்  கொம்பு குதிரை , நீர்யானை, பாம்பு - டிராகன் , மாயக் கழுகு , முதலை ,அன்னப் பெண் என கற்பித விலங்குகள் இடம்பெறும் கதைகளாகவே பர்மிய நாட்டுப் புறக் கதைகள் உள்ளன.
இந்த நூலில் ஐந்து பர்மியக் கதைகள் இடம்பெற்றுள்ளன. வானவில் , சந்திர கிரகணம் , மூன்று டிராகன் முட்டைகள் ,தேங்காயின் தோற்றம் மற்றும் டகாங்கின் காட்டுப் பன்றி என்பன அவை. ஐந்து கதைகளையும் படித்தால் கற்பனை எட்டாத  தூரத்தில் காட்சிகளை உருவாக்கி , நிஜமான பொருட்களோடு ஒப்புமைப் படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொன்றும் காரணத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருப்பது போல் கதைகளை முடித்துள்ளனர்.
வானவில்லின் பக்கங்கள் ,இரவுகளில் ஆற்றின் நீரில் இளவரசனை வாயில் கவ்விச் செல்லும்  முதலையையும் , இன்னொரு முதலை மானுட ரூபமெடுத் தலையும் நம் கண் முன்னே கொண்டு வருகிறது. அதே போல சந்திர கிரகணத்  கதையில் குழவிக்கல்லால் ஒரு மனிதன் இளவரசனாவதும் அதன் சக்தியைக் கண்டு நிலவு திருடிச் செல்வதாகவும் அதை அந்த மனிதன் வளர்த்த நாய் துரத்திச் செல்வதாகவும் அதனால் தான் இன்றும் சந்திர கிரகணம் வருகையில் நாய் வாயில் கவ்வுவதாகவும் கிரகணம் முடிகையில்   நிலவு வெளித்தள்ளப்படுவதாகவும்  கதை சொல்லப்பட்டிருப்பது கற்பனையின் அளவை நமக்குக் காட்டுகிறது. அதே போல மூன்று டிராகன் முட்டைகள் என்ற கதை நம்மை நிறைய கற்பனைகளுக்கு அழைத்துச் செல்கிறது. தேங்காயின்  தோற்றம் அதே போல் விஷமியின் தலை மண்ணில் புதைக்கப்பட்டு அந்தக் கதையிலிருந்து வருகிறது , காட்டுப்பன்றியைத் துரத்தும் இளவரசன் எவ்வாறு துறவியாகிவிடுகிறான், பன்றி செல்லுமிடமெல்லாம் அந்த நாட்டின் இடங்களின் பெயர் எவ்வாறு உருவாகின்றது என வேறு வேறு திசைகளில் நம்மை கற்பனை செய்ய வைத்து சிறு வயது கதை நாட்களை மீட்டெடுக்கிறது பர்மிய நாட்டுக் கதைகள்.
இலங்கைக் கதைகள் 1910 இல் வெளிவந்த தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்ட 3 கதைகளை உள்ளடக்கி கற்பனைகளை விதைக்கும் ஹராந்தகன் என்னும் திருடன் கதை , நாடோடிக் கதைகளாக வரும் இரு சகோதரிகள் கதை , தேப்காவின்  கதை ஆகியவை உண்மையிலேயே இப்படி எல்லாம் கற்பனை செய்ய முடியுமா என நம்மை எண்ண வைக்கிறது. தேப்கா புலி கதை நகைச்சுவையாகவும் உள்ளது.
அடுத்து 10 கதைகளை உள்ளடக்கிய சீனத்துக் கதைகளின் வரிசை. இதில் டிராகன் பற்றிய நான்கு கதைகளும் அடக்கம். நல்ல மனைவி கதை புத்திசாலி மனைவி முட்டாளை மன்னனாக்குவாள் , சோம்பேறி மனைவி , துடிப்புள்ளவனை மந்தமாக்குவாள்  என சீனத்துப் பழமொழியை ஒரு இளவரசியின் வரலாற்றைக் கொண்டு விளக்குகிறது , உள்ளபடியே சுவாரஸ்யமாகவே சீனத்துக் கதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. ஆவியை விற்றவன் கதை என்னவோ , படிக்கும் போது வேதாளத்தை சுமந்து செல்லும் ராஜகுமாரன் நமது அம்புலிமாமா கதைகளை நினைவு படுத்துகிறது.
டிராகன்  கதைகள் ஆங்கில திரைப்படங்களில் வரும் காட்சிகளை நினைவுக்குள் எடுத்து வருபவையாக உள்ளன. டிராகன் என்பது சீன கலாச்சாரத்தில் தனி இடம் வகிக்கும் அடையாளமாகவும் , அற்புதங்களும் ஆற்றல் நிரம்பிய உயிரியாகவும் , நினைத்த வடிவங்களை எடுக்கக் கூடியதாகவும் இருக்கின்றன. விலங்கு , பறவை , பாம்பு மற்றும் முதலை ஆகியவற்றாலான கலவை உருவமாகிய டிராகன் நெருப்பினை உமிழ்வதாக இருக்கிறது. டிராகன் என்றால் வளர்ப்புத் தாய் ,பெண்ணிணத்தின் பாதுகாவலன் என குறிப்பிடும் தகவல்கள் இந்நூலில் உள்ளன.

இதில் வரும் நான்கு டிராகன் பற்றிய கதைகளும் மிகச் சிறப்பு வாய்ந்ததாக அமைந்துள்ளது. டிராகன் முட்டைகளை விழுங்கி வருடக் கணக்கில் வயிற்றில் சுமக்கும் பெண் கடுகு விதைகளை விதைத்து மலை முகட்டிற்குச் சென்று வாழ்வதும் , எட்டு டிராகன்கள் அரண்மனைக் கூரையில் ஒன்பதாவது டிராகன் உயிர் பெற்று விடுவதும் , சீனத்தின் பெரு நதிகளாக நாம் படித்துள்ள ,மஞ்சள் நதி  , ஹெய்யோங்யாங் , யாங்ட்ஸி, மற்றும் ஜூஸியாங் நதிகள் மஞ்சள் டிராகான்  , கருப்பு டிராகன் , நீண்ட டிராகன் , முத்து டிராகான் என கதை அமைந்திருப்பதும் கற்பனையின் உண்மை நீட்சிகளாக உள்ளன. மேலும்  ஃபீனிக்ஸ் பறவையும் டிராகனும் இணைந்து கூழாங்கல்லை செதுக்கி முத்தாக மாற்றுவதும் , அதற்கு தனிப் பெரும் சக்தி கிடைத்து நாட்டின் அரசியால் திருடப்படுவதும் மீண்டும் அது டிராகன் , ஃபீனிக்ஸால் கண்டறியப்பட்டு பச்சை ஏரியாய் உருமாறி அதை விட்டுப் பிரிய மனமில்லா டிராகன் மலையும் , ஃபீனிக்ஸ் மலையும் ஏரியின் இரு பக்கங்களில்  தங்கிவிட புவியியல் பாடமே படிப்பது போல் நம்மை அழைத்துச் செல்கிறது.

அடுத்து வரும் ஒரே கதை ஆப்பிரிக்கக் கதை ... ஆமை எவ்வளவு சூதுவாது மிக்க விலங்காக காட்சிப்படுத்தப்பட்டு , பறவைகளை ஏமாற்றி வானத்தில் விருந்துண்ணுகிறது. கிளியால் எப்படி வஞ்சம் தீர்க்கப்பட்டு தனது ஓட்டை கீழே விழுந்து கரடு முரடாக வைத்துள்ளது என காரணக் கதையாக சொல்லப்பட்டிருக்கு இங்கே .

அடுத்து வரும் ஐரோப்பியக் கதைகள் நமது ஊரில் சொல்லப்படும்  தேவதைக் கதைகள் , 3கோடாரிகள் வரத்தை நினைவூட்டுகிறது. அதே போல இதே கருத்து வேறு வேறு தேசங்களில் வேறு வேறு மரபுகளில் வழங்கப்படுவதாகவும் , மூன்று ஆசைகள் என்ற ஐரோப்பியக் கதை இரண்டு மூன்று விதங்களில் சொல்லப்பட்டு வருவதாகவும் இந்நூலில் சில குறிப்புகள் தரப்பட்டுள்ளன.
தொடர்ந்து வரும் டென்மார்க்கின் தேவதை கதைகள் , அந்நாட்டு கிராமங்களில் பாட்டிகளால்  சொல்லப்பட்ட கதைகளாக தொகுக்கப்பட்டுள்ளன. நற்காரியங்களின் பலன் என்னவாக இருக்கும் என மனிதன் , பாம்பு , குதிரை , நரி , வாத்துகள் மற்றும் நாய் இவற்றை வைத்து கூறப்பட்ட கதை , உலகத்து உயிர்களின் இயல்பை நம் கண் முன்னே கொண்டு வருகின்றது. அதே போல உல்லாச மனைவியர் என்ற கதையில் மனிதர்களின் முட்டாள்தனத்தை நிரூபிக்க உயிரோடு இருப்பவர் இறந்ததாக ஊரே நம்புவது வியப்பாகவே உள்ளது. அதோடு .... ஆறு சகோதரர்களும் இளவரசியும் மாயாவியிடமிருந்து தப்பித்து நட்சத்திரக் கூட்டமாக்கப்பட்ட ஒரு கதை என நம்மை வேறு வேறு திசைகளில் பயணிக்க வைக்கிறது.
அற்புதங்கள் அள்ளித் தந்த தேவதை கதைத் தொகுப்பை படைத்த டென்மார்க் நாட்டின் எழுத்தாளர் ஆண்டர்சன் பற்றிய குறிப்புகளோடு ஆரம்பிக்கின்றது அடுத்தடுத்தப் பக்கங்கள். கனவு காணும் குழந்தைகள் நல்லவர்களாகவும்  கனவு காணாத குழந்தைகள் தீயவர்களாகவும் முட்டாள்களாகவும் வளருவார்கள் என்றும், அவ்வாறு கனவு காண அவர்களுக்கு தேவதைக் கதைகள் தேவையாக இருக்கின்றது எனக் குறிப்பிட்டு , தேவதைக் கதைத் தொகுப்பை படைத்துள்ளார்.
தேவதைக் கதைகள் அத்தனையும் வாய்மொழி மரபில் வந்தவை. எழுதப்படாத எழுத்துக்கள், எழுதியவர் என்ற ஒரு நபரின்றி காலந்தோறும் தலைமுறை தோறும் வளர்ச்சியும் மாற்றமும் கொண்டு வளர்ந்தவை என்கிறது இந்நூல். பூதம் ஒன்று மாயக் கண்ணாடி செய்த கதை , நைட்டிங்கேல்  கதை என எத்தனையோ கதைகளைக் கொண்ட தொகுப்பிலிருந்து ஆண்டர்சன் தந்த அருவருப்பான வாத்துக் குஞ்சு என்ற கதை வான்கோழியா , வாத்தா அல்லது அன்னமா என மாறி மாறிப் பயணிக்கிறது கதை , அது  இயற்கையோடு  இணைந்து பின்னப்பட்டு அழகான பறவைகள் , பூக்கள் , நீர் நிலைகள் , பசும் புல்வெளிகள் என அழகுபட விரிந்து இறுதியில் கம்பீரமான அன்னப் பறவையாக முடிவுக்கு வரும் கதை நம்மை மகிழ்விக்கின்றது.
புத்தகத் தொகுப்பின் இறுதியாக இடம் பெற்றிருப்பது இத்தாலி நாட்டுக் கதை. இத்தாலி தேசம் கிரேக்கத்தைப் போலவே நீண்ட காலமாக ஐரோப்பிய நாகரீகத்தின்  இல்லமாக இருந்து வந்துள்ளது. ஷேக்ஸ்பியரின் பல நாடகங்களும்  இத்தாலியப் பின்புலத்தைக் கொண்டவை என்பதை நாம் அறிவோம். அதன் நீட்சியாக இங்கு தரப்பட்டுள்ள கதை ,மரணத்தை வெல்ல முடியுமா என்ற வினாவை எழுப்பி சாத்தியமில்லை என்பதை நடைமுறையில் விளக்குகிறது.நமது நாட்டிலும் சாவித்திரி எமனிடமிருந்து சத்தியவான் உயிரை மீட்டு வந்ததாக வாய்மொழிக் கதை உண்டு .
இங்கு " ஒருவர் மடியா தேசம் " என்ற தலைப்பில் அழகாகப் பயணிக்கும் ஒரு கதை ,மரணமே இல்லாத வாழிடத்தைத் தேடி அலையும் ஒரு இளைஞன் எவ்வாறு மரணத்தின் பிடியில் சிக்குகிறான் என்பதை சிறு சிறு கட்டங்களாக நகருகிறது கதை .உள்ளபடியே சிறப்பான கதை .
இவ்வாறு 232 பக்கங்களும் முடித்த போது நம் குழந்தைப் பருவம் முதல் இன்று வரை ஒரு சுற்று சுற்றி வருவதோடு உலக வரைபடத்தின் எல்லா நாடுகளின் மக்களையும் தொட்டு வந்த நினைவலைகளாக மகிழ்கிறது மனம். அறிவியலும் தர்க்க ரீதியான புத்தகங்களும்  நம்மை வேறு விதமாக வழிநடத்தினாலும் , காரணங்களை ஆராயாமல் மகிழ்ச்சியும் குழந்தைத் தன்மையும் நம்முள் கொண்டு வர இப்புத்தகம் உதவுகிறது. சூதாடியும் தெய்வங்களும் பாஸ்போர்ட்  இல்லாமலே நாடுகளுக்குப் பயணிக்க வைத்த நல்ல தொகுப்பு நூல்.
அன்புடன்
உமா

No comments:

Post a Comment