Tuesday 8 May 2018

வாசிப்பை நேசிப்போம் : 7

என் சிவப்பு பால் பாயிண்ட் பேனா :
************************************
கடந்த சில மாதங்களுக்கு முன்பு முகநூலில் இந்நூல் விமர்சனத்தை ஒரு ஆசிரியர் சகோதரி பதிவு செய்திருந்தார். அதைத் தொடர்ந்து இன்னும் சில ஆசிரியர்களும் சில சந்தர்ப்பங்களில் இது பற்றிய விமர்சனம் தந்ததை அறிவேன்.

புத்தக தினத்தின் அடுத்த நாள் ஏப்ரல் 24 தங்கை உதயலட்சுமி    எனக்கு இப்புத்தகத்தை*ப் பரிசாகத் தர , ஏப்ரல் 25 அன்று , பத்தாம் வகுப்பு தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிக்கு செல்கையில் கையோடு இந்நூலை எடுத்துச் சென்றேன். பேருந்திலேயே வாசிக்க ஆரம்பித்து விட சரியான சூழலில் இப்புத்தகம் எனது கையில் இருந்தது ... இனி எனது பார்வையில் இந்த சிவப்புப் பால் பாயிண்ட் பேனா ......

பேராசிரியர் ச.மாடசாமி     அவர்கள் எழுதிய 10 கல்விக் கட்டுரைகளின் தொகுப்பே இந்தப் புத்தகம் .முதல் பதிப்பு 2015இல் புக்ஸ் ஃபார் சில்ரன்  வெளியிட்டிருக்க ரூ 70 விலையைத் தாங்கி வந்துள்ளது நூல்.

அட்டைப் படத்தை சற்று கூர்ந்து கவனித்தால் .... இந்த ஆசிரியர் சமூகத்தின் அதிகார ஆயுதமான சிவப்பு இங்க் பேனாக்களின்  உளவியல் உருவங்கள் நம்மை சில நிமிடம் உறைய வைக்கின்றது. அது கூர்மையான கத்தியாக , போரின் வாளாக , வெறி கொண்டு குத்த வரும் ஈட்டியாக, நொடியில் உயிர் மாய்க்கும் துப்பாக்கியாக என ஆசிரியர் கையிலிருக்கும் ..விடைத்தாள்கள்  /பாட நோட்டுகள் திருத்தும் சிவப்புப் பேனா நமக்கு பல ஆயிரம் கதைகளை நொடியில் தந்துவிட ....

சமரசம் செய்யாமல் பக்கங்களைப் புரட்டச் சொல்கிறது மனது.மொத்தக் கட்டுரைகளும் ஆசிரியர் தனது அனுபவக் குறிப்புகளிலிருந்தே தொகுத்துள்ளார். களம் என்னவோ .... பள்ளி மற்றும் கல்லூரிகளின்  வகுப்பறைகளும் சமூகமுமே ....

1. நூலின் முதல் கட்டுரையின்  தலைப்பு தான்  ...." என் சிவப்பு பால் பாயிண்ட் பேனா ..."  இந்தத் தலைப்பை சில வினாடிகள் யோசித்தால் .... இந்தப் பேனா அதன் வாழ்வின் பயணத்தில் என்னென்ன வேலைகளைச் செய்யும் என்று  பள்ளி சென்ற எல்லோராலும் உணர முடியும்.
பள்ளிக்குள் நுழைந்தவுடனேயே , வகுப்பறையில்  கோலோச்சும் முதலாளித்துவம் ,அதிகார துஷ்பிரயோகம் இந்த ஆயுதம் வழியே தானே ஆரம்பமாகிறது என்று வரிக்கு வரி தனது அனுபவத்தைத் தோய்த்து வார்த்தெடுத்துள்ளார் பேரா ச .மா .

எனக்கும் கூட இதைப் படிக்கும் போது , எனது 9 ஆம் வகுப்பு தமிழாசிரியர் திருமதி ஜெயமணி என்பவர் தான் நினைவுக்கு வந்தார். அவர் மெய்யெழுத்து விடுபட்டு இருந்தால் வட்டமிட்டு வட்டமிட்டு , ஒரு பிழைக்குக் கால் மதிப்பெண் குறைத்து விடுவார். இதனால் மதிப்பெண்கள் வேறுபாடு ... மதிப்பெண்கள் நிறைய மாணவிகளுக்குக் குறையும். தர மதிப்பீட்டு அட்டையில் ஒரு மதிப்பெண்  , இரு மதிப்பெண்கள் வேறுபாட்டால்  தர நிலைப் பின்னடைவு ஏற்பட்ட காலங்களும் , அதனால் வீட்டில் திட்டும் அடியும் வாங்கிய கதைகளும் உண்டு ..

ஆனால் நான் ஆசிரியரான பிறகு எந்தக் குழந்தையும் எனது சிவப்புப் பேனாவினால் வருத்தப்படாமல் இருப்பதற்கு  மிகுந்த கவனம் எடுத்தேன். எல்லோரது விடைத்தாள்களிலும் நன்று , மிக நன்று என்றே எழுதினேன் (MR Child ,Visually impaired Child என்றாலும் ). கணக்குப் பரீட்சை விடைத்தாள்களில் அவர்களது முகம் பிரகாசமாகவே மலர எப்போதும்  எனது சிவப்பு மை பேனாக்கள் துணை செய்தன , தவறான கணக்குகளை அந்தப் பேனாக்கள் சரியாகப் போட்டுக் காண்பிக்க ...அவர்களது கண்களின் எதிரிலேயே அதே தாள்களிலேயே சரியான வழிமுறையைக் காட்ட என ... அவர்களது குழப்பங்கள் நீங்கியே கண்களும் மனமும் ஒளி பெற்றத் தருணங்களை , டீச்சர் எனக்கு good , very good போடுங்க என இயல்பாக என்னிடம் மாணவர் கேட்க , அல்லது எனது பேனா எழுதிய நேர்மறை கருத்துகளை சக தோழமைகளுக்குள்  பகிர்ந்து மகிழ்ச்சியால் துள்ளவே என் சிவப்புப் பால் பாயிண்ட் பேனாக்கள் உதவி வருகின்றன எனப் பதிவு செய்கிறேன் . ( ஆனால் நானும் பணியேற்றிய முதல் கல்வியாண்டின் முதல்  6 மாதங்கள்  மாணவர்களை சிகப்புப் பேனாவால் சற்று பயமுறுத்தியே வைத்திருந்தேன் என்பது வருத்தமாகவே இருக்கிறது )
எனினும் கட்டுரையின் இறுதி வரிகளில் அதிகாரமற்று இருப்பதைப் போன்ற மகிழ்ச்சி வேறு எதில் இருக்கிறது ? என்ற அழகான கருத்தை எல்லோரும் ....குறிப்பாக ஆசிரியராகப் பாவிக்கும் என்னைப் போன்ற  தோழமைகள் ஆழமாகப் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது என்பதே தேவையானதாகப் படுகிறது .

2. ஒவ்வோர் அவமதிப்பும் ஒரு மரணம் : பேரா  ச.மா அவர்கள் பயன்படுத்தியுள்ள  வார்த்தைகளின் கூர்மை கத்தியே வேண்டாம் தற்கொலை செய்து கொள்ளத் தோன்றும் அளவிற்கு நம்மை சிதைக்கும் உண்மைகள் . எவ்வளவு மரணங்கள் சம்பவிக்க இக்குழந்தைகளை நிர்ப்பந்தித்து வருகிறது இந்த அறிவார்ந்த ஆசிரியர் சமூகமும் பெற்றோரும். இரண்டு பேருமே குற்றவாளிகளே ... நீங்கள் கேட்கலாம் , அப்போ பெத்தவங்க குழந்தைகளை திட்டவோ அடிக்கவோ கூடாதா என ? இதற்கான பதிலை நான் உங்களிடமிருந்து எதிர்பார்க்கவில்லை , ஆனால் உங்கள் சிந்தனையில் எப்போதும் வைத்துக் கொள்ளுங்கள்.

நமக்கு நூலாசிரியர் இங்கு ஒரு புத்தகத்தையும்  அறிமுகம் செய்கிறார் ... சிறு வயது மரணம் ( Death at an early age) கருப்புச் சிறுவர்களை அரவணைத்துக் கற்பித்த ஒரு ஆசிரியர் 1950களில் வந்த வரலாற்றை  எழுதியது .. அதில் ஒரு சிறு பகுதியை விளக்கியிருக்கிறார்.
ஒரு மாணவனின் (ஸ்டீபன்) இயற்கையான ஓவியத் திறமை எப்படி அவமதிக்கப்படுகிறது ? போலச் செய்தலே ஊக்குவிக்கப்படுகிறது என்பதை அழுத்தமாகப் பதிவு செய்துள்ளதைப் பார்க்கும் போது ....

இன்றைய தமிழகப் பள்ளிக் குழந்தைகள் அதே போன்று... வகுப்பறைக்குள் தனித் திறமைகளை வெளிப்படுத்த இயலாத சூழல் CCE மதிப்பீட்டு முறையை நாசம் செய்து சமாதி கட்டும் அறியாமை ஆசிரியர்கள் அவற்றை வழி நடத்தாத தலைமையாசிரியர்கள்  , இதன் விளைவுகளைப் பதிவு செய்யாத ஆசிரியப் பயிற்றுநர்கள் , பேராசிரிய வழிகாட்டிப் பெருமக்கள் , எதையுமே  கண்டுகொள்ளாத கல்வித்துறை , பாதிக்கும் அப்பாவி அறியாமைப் பெற்றோர்கள் என இந்த ஒட்டு மொத்த சமூகத்தின்  அவலம் எனக்குள் விரிவதைக் கட்டுப்படுத்த இயலவில்லை .

அதோடு நம் பள்ளிகளில் , வீடுகளில் காணப்படும் வன் புனைபெயர் அழைப்பையும் இந்நூலின் வழியே இக்கட்டுரையில் விளக்குகிறார் ச .மா , ஏய் செவிடு , இரட்டை ஜடைப் பொண்ணு  , கருப்பா ஒரு பையன் , பூனைக்கண்ணன், கருப்பா , காரைப் பல்லு பொண்ணு  ... இப்படி ஏராளமாய் ...

டீச்சர் / ஸார் எனக் கூப்பிடும் குழந்தைகளை ... ஏய் ... சும்மாயிரு என்ற  ஒற்றை  அதட்டலில் ஆரம்பிக்கிறது இந்த அவமதிப்பு .அவரவர் சொந்த வாழ்க்கையை சற்றே திரும்பிப் பார்த்தால் ஒவ்வொருவருக்கும்  லட்சம் மரணங்கள் நிகழ்ந்திருக்கலாம் , நிகழ்ந்து கொண்டுமிருக்கலாம் ... சந்தேகங்களை நிவர்த்தி செய்ய வழியில்லாத வகுப்பறைகள் , அனைத்துக் குழந்தைகளுக்கும்  வாய்ப்புகளை சமமாக வழங்காத பள்ளிகள் , வேலைக்காகத் தயாரிக்கும் எந்திரங்களாய் குழந்தைகளைப் பயிற்றுவிக்க ஆசிரியர்களை நிர்ப்பந்திக்கும் பள்ளிகள் , அதே எண்ணம் வலுப்பெற்ற பெற்றோர்கள் வாழும் வீடுகள் ... என எல்லாமே கல்லறைகளைக் கட்டிக் கொண்டிருக்கும் மரணங்களை வரவேற்கும் இடுகாடுகளே .

ஆர்வமிருந்தும் , வாய்ப்பு தராத விளையாட்டு ஆசிரியரை சந்தித்து இருக்கிறேன் நான் , பள்ளி ஆசிரியர்களுக்கு  அறிமுகமான ஆசிரியப் பெற்றோரின் மகளுக்காக பேச்சுப் போட்டியில்  இரண்டாம் இடம் தள்ளப்பட்ட நாட்களை நான் சந்தித்த போது  சக வகுப்பு மாணவிகளும் அதைத் தங்களுக்கான அநீதியாகப் பார்த்த சூழல்களைக் கடந்து வந்திருக்கின்றேன் நான் , நிற வேறுபாட்டால் புற அழகின் ஈர்ப் பால் அறிவியல் பாட ஆசிரியர் வெள்ளையாய் இருந்த மாணவிக்கு மட்டும் விளக்கம் கொடுத்து , மற்றவரை அழ வைத்த வகுப்பறைகளைக் கடந்த அனுபவம் உண்டு .

தந்தை வங்கி உயர் அலுவலராக இருந்ததால் ஒட்டு மொத்த ஆசிரியர்களால்  கொண்டாடப்படும் ஒரு மாணவியால், அவரே வகுப்புத் தலைவியாக நியமிக்கப்பட்டு  வகுப்பு முழுவதும் அச்சுறுத்தி ஒரு வருடம் முழுவதுமே  மற்ற மாணவிகளை பயமுறுத்தி  ஏய்த்து மன உளைச்சலைத் தந்த சூழலைத் தந்த ஆசிரியர்களது வகுப்பறைகளைக் கடந்து வந்திருக்கின்றேன். இங்கே எல்லாம் நடந்த அவமதிப்புகள் , மரணங்கள் இவற்றுடன் பேரா.ச .மா அவர்களின் இந்தக் கட்டுரையின் பக்கங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கிறேன் ..

எப்போதும் இவை  போன்ற வேறுபாடுகளால் ஏற்படும் மரண வலிகள்  எனது மாணவர்களைத் தாக்கா வண்ணம் பாதுகாப்பதே எனது முதலும் முக்கியமான கடமைகளாகப் பயின்றும் பயன்படுத்தியும் வருகிறேன் என்பதில் சற்றே திருப்தி .. கட்டுரையின் இறுதி வரிகளில் பேரா .ச. மா தொடுக்கும் வினா ... பள்ளிகளிலும் வீடுகளிலும் சத்தமில்லாமல் நிகழும் மரணங்களை எப்போது நாம் வாசிக்கப் போகிறோம் ????

3. பங்கஜம் சொன்ன கதை :

இந்தக் கட்டுரையில் முழுக்க முழுக்க ஆசிரியர்களின்  உரையாடல்கள் இடம் பெறுகின்றன. இதை வாசிக்க வாசிக்க ஆசிரியர்களின் ஓய்வறைகளில் நாம் தினசரி எதிர்நோக்கும்  சம்பாஷனைகளே கண் முன் விரிகின்றது. மிக இயல்பாக மாணவர் பற்றியும் வகுப்பறைகள் பற்றியும் ஆசிரியர்களது பார்வையில் உள்ளன எனவ எனவும் , எப்போதும் ஆசிரியர்களாகிய நாம் நம்மை  சுய பரிசோதனை செய்து கொள்ளவும் , விவாதங்களில் வகுப்பறை சூழலை விவாதப் பொருளாக  எடுத்தால் பல பள்ளிகள் மாணவரது நலன் நோக்கி செயல்பட ஆரம்பிக்கத் தொடங்கி விடும் என்பதையும் மறைமுகமாக உணர்த்துகிறது இக்கட்டுரை .

மாணவர்கள் ஆர்வமாக வகுப்பறைகளை அணுக வேண்டுமெனில் உள்ளூர் வளங்களை /பள்ளிக்கு அருகிலிருக்கும் (அ) பள்ளியிலிருக்கும்  வளங்களை மிக அதிகமாகப் பயன்படுத்தக் கற்றுத் தருகிறது இக்கட்டுரை . நாற்காலிக்கு பேர் வச்ச கதையை மாணவி எப்படி மெக்கானிக்ஸ் கான்செப்டாகப் பார்க்கிறார் என ஒரு ஆசிரியர் வியந்து பேசியது பதிவு செய்யப்பட்டுள்ளது அருமை.

மேலும் பேரா ச.மா இங்கு Constructng School knowledge என்றொரு புத்தகத்தை அறிமுகம் செய்கிறார். ஒரு விவாதமும் , ஒரு வாக்குவாதமும் , ஒரு சமாதானமும் ஒரு அழைப்பும் தொடக்கமும் இணைந்ததாக அமைந்து நம்மை சிந்திக்க வைக்கின்றது இந்த.... பங்கஜம் சொன்ன கதை... கட்டுரை.

4. தப்பித்த குரங்குகள் முக்கியமானவை :

எவ்வளவு பெரிய உண்மையை வெறும் நான்கு பக்கங்களில் கொடுத்துள்ளார் ... வடிவமைக்கப்படாமல் எது தப்பித்ததோ அதுவே தப்பித்த குரங்குகளாகப் பார்க்கப்படுகின்றன.  திரும்பத் திரும்ப கல்வி முறையின் கோணல்கள் இங்கும் பதிவு செய்யப்பட்டுள்ளன.  பள்ளிக் கூடங்களே உலகத்தின் மிகப் பெரிய நிறுவனம் , அசல் முகத்தைத் திட்டமிட்டுக் கரைக்கிற இடம் ,... ஆசிரியர்களால் புடமிட்ட முகம் , பாடத்திட்டத்தால் சிதைந்து போன முகம் , வேலை வாய்ப்புகளால் விற்கப்பட்ட முகம் , இப்படி எல்லா முகங்களும் இருக்க ஒரிஜினல் முகம் எங்கே ? அந்த முகங்களே தப்பித்த குரங்குகளின் முகங்களாய் .....
கல்வி உரிமைச் சட்டங்கள் போன்றன அதட்டல் அதிகாரங்கள் மீது கேள்விகள் எழுப்பினாலும் நுட்பமான அதிகாரங்கள்  என்பவற்றைப் பல வடிவங்களில் இருப்பதைக் குறித்து நாம் யோசித்துப் பார்ப்பதேயில்லை. மதிப்பிடுவதே ஒரு அதிகாரம் என்கிறார். பிஸியான பிள்ளைகள் எங்கே சிந்தித்தது  ? படிப்பும் பள்ளிக் கூடமும் கற்றுத் தந்தது என்ன ? விளம்பரங்களை நம்பும் மூளைகளைத் தானே வடிவமைத்து இருக்கின்றன ... இப்படியான கேள்விகள் நம் முன் குழப்பத்தையும் சிந்தனையையும் மாறி மாறி விதைக்கின்றன ...

எனில் .... உன் எதிர்காலத் திட்டம் என்ன என மாணவர்களைக் கேட்பது கூட அபத்தம் தானே எனத் தோன்றுகிறது. பாடங்களைப் படித்து தவறில்லாமல்  எழுதி மதிப்பெண் பெறும் முறைகளே இந்த நுட்பமான அதிகாரத்தின் பக்கங்களைத் தானே நிரப்புகின்றன. நான் எப்போதும் அரசுப் பள்ளி மாணவர்களை ... காட்டுச் செடிகள் என்று குறிப்பிடுவேன். அவர்களால் எந்த சூழலையும் சந்திக்க முடியும். ஒரு வகுப்பறையில் பயப்படும் தோரணையில் இருந்தாலும் ( ஆசிரியர் மதிப்பீடு ) அவரது   வாழ்வின் பிரச்சனைகளை மிக தைரியமாக எதிர் கொள்ளும் மன உறுதி படைத்தவராகவே வளருகிறார்கள் .(அனிதா போன்றோர் விதிவிலக்கு )

அரசுப் பள்ளிகளில் சுதந்திரப் பொதுவெளி இருப்பதைப் பதிவு செய்கிறார் பேரா .ச .மா .உண்மையும் அதுவே ... அங்கும் தாய்மொழி வழிக் கல்வியில் தான் அந்த சுதந்திர வெளியும் இயல்பாய் நசுக்கப்படாமல் பாதுகாக்கப் படுகிறது என்பது என்னுடைய தனிப்பட்டக் கருத்து . தாய் மொழி அல்லாமல் ஆங்கில வழி வகுப்புகள் வற்புறுத்தப்பட்டு நாடெங்கிலும் அரசுப் பள்ளிகளும் வர்த்தக நிர்ப்பந்தங்களுக்கு  தனது சுதந்திர வெளியைப் பறிகொடுத்துப் புலம்பும் ஆசிரியர்களைப் பரவலாக சந்திக்கலாம். இப்படியான நிர்ப்பந்தத்தின் மொத்த உருவங்களாக கல்விக் கொள்கைகள் , பயிற்சிகள் , பாடங்கள் என இருக்கும் சூழலில் உள்ளபடியே தப்பித்த குரங்குகள் முக்கியமானவைதான்.

5. பரிசோதனைக் காலத் தனிமையும் வாசிப்பின் தோழமையும் :

இந்தக் கட்டுரையில் பேரா.ச.மா... ஆசிரியர்களது வாசிப்பையும் , வகுப்பறைகளில்  தினந்தோறும் நாம் எடுத்துச் செல்ல வேண்டிய கற்பித்தல் முறைகளையே பரிசோதனை முறையாகவும் வலியுறுத்துகிறார். இங்கு பகல் கனவு , டோட்டோ - சான் என்ற இரு புத்தகங்களை அறிமுகம் செய்கிறார். இரண்டுமே ஆசிரியரோடு சேர்ந்து, கல்வித் துறை அதிகாரிகளும் அதோடு   பெற்றோரும் சேர்ந்து  படிக்க வேண்டிய புத்தகங்கள் என்றால் மிகையாகாது.
பகல் கனவை நான் சரியாகப் பத்து வருடங்களுக்கு முன்பு 2008 இல் வாசித்தேன். சந்தோஷமாக இருந்தது. ஏனெனில் அந்த புத்தகத்தில்  வரும் கிஜுபாய்  பக்கத்துக்குப் பக்கம் என்னைப் பிரதிபலித்தார். எங்கள் ஒவ்வொரு நாள்  வகுப்பறையும்  பகல் கனவு புத்தகத்தின் வகுப்பறைகளாகவே இருக்கும். அதனால் பள்ளியில் 6,7 ,8 வகுப்புகளுக்கு நான் சென்றாலும் 12 ஆம் வகுப்பு மாணவர்களும் என்னைத் தேடி வருவார்கள் , அன்பு பரஸ்பரம் பரிமாறப்படும். காலை பள்ளி கேட் (gate) இல் நுழையும் போது எனக்கு ஓடி வந்து குட் மார்னிங் சொல்லும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் உண்டு , ஆசிரியர்கள் அறையில் இது பற்றிய விவாதமும் நடக்கும் , மூத்த  ஆங்கில ஆசிரியை ஒருவர் நான் தான் அவனுக்கு இங்கிலீஷ் டீச்சர் , க்ளாஸ்  டீச்சரும்  உங்கள விஷ் ( wish) பண்றான் , பக்கத்துலேயே வரும் என்னைக் கண்டுக்கவே மாட்டேன் என்கிறானே என்று வருத்தப்படுவார் , குழந்தைகளை ஆசிரியராக அணுகாமல் குழந்தையாகவே அணுகும் சூட்சுமத்தைக் கற்றுக் கொள்ள அவர் அறியாதது தான் இந்த ஆதங்கத்துக்குக் காரணம் என அன்று எனக்கு சொல்லத் தெரியவில்லை.

பகல் கனவு முழுவதும் உங்களை நீங்கள் சுய பரிசோதனை செய்து கொள்ள உதவும் முக்கிய நூல் , அதோடு  ஜன்னலில் ஒரு சிறுமி படிக்கப் படிக்க  நம்மை  மிகப் பெரிய புரிதலுக்கு அழைத்து அது தான் பள்ளி என்று உணரச் செய்யும் , ஒரு சிறிய உதாரணம் ... கடந்த மார்ச் மாதம் எனது ஆறாம் வகுப்பு மாணவிகளிடம் இக்கதையின் முதல் 5 தலைப்புகளைக் கதைகளாகக் கூறக் கூற ... மிஸ் இது மாதிரி பள்ளி எங்க இருக்கு  ...? சொல்லுங்க நாங்க அங்க போய் படிக்கறோம் என்று கூச்சலாகக் கத்தி தங்கள் விருப்பத்தையும் நமது இன்றைய பள்ளிகளின் கல்வியின் மீது எதிர்ப்பையும் பதிவு செய்தனர் என்றால் பாருங்களேன்.

அதோடு கதை சொல்லி இரண்டு மணி நேரம் கழித்து அவர்களது வகுப்பிற்கு. அவர்களின் வகுப்பு ஆசிரியை வருகிறார் ... அவரிடம் மிஸ்... உங்க லஞ்ச் என்ன ? கடலிலிருந்து கொஞ்சமும் மலையிலிருந்து கொஞ்சமும் கொண்டு வந்தீர்களா ? எனக் கேட்க அவர்களுக்குப் புரியாமல் விழிக்க நானும் குழந்தைகளும் நமட்டுச் சிரிப்பு சிரிக்க , அந்த ஆசிரியைக்கு ஒரு மாணவி டோட்டோ சானின் இந்த முடிச்சை அவிழ்த்தாள்.  உங்களுக்கும் தெரிந்து கொள்ள வேண்டுமெனில் உடனே கையில் எடுங்கள் .. டோட்டோ சானை. ...

நண்பர்களே ... இவ்விடத்தில் மிக முக்கிய செய்தியைப் பதிவு செய்ய ஆசைப்படுகிறேன்  , மிகச் சிறந்த புத்தகங்களான இவ்விரண்டிலும் எல்லாக் குழந்தைகளும் மிக மகிழ்ச்சியாகக் கற்றுக் கொண்டு சுதந்திரமான சூழலில் தங்கள் பள்ளிகளை நேசிக்கின்றனர் , காரணம் ஆசிரியர்களே ... ஓரிடத்தில்  கூட தொழில் நுட்ப வகுப்பறைகளைக் கோடிடவில்லை , நாம் தான் ICT வகுப்பறையும் ஆங்கிலப் புலமையும் தான் தலை சிறந்த கற்பித்தலாய் பறை சாற்றி பழி வாங்கிக் கொண்டிருக்கிறோம் குழந்தைகளை என்பதை நினைவு கூறுங்கள்.

6. வகுப்பறை உறவு : நெருக்கமும் இடைவெளிகளும்

இங்கே ஆசிரியர் அதிகாரம் குறித்து மாணவர் பேச வேண்டும் என்கிறார், பேரா .ச. மா , TEACHER என்ற நூலை அறிமுகம் செய்து , அடுத்த புரிதலுக்கு அழைத்துச் செல்லும் பாங்கு ஆசிரியர் - மாணவர் உறவு முறைக்கு மிக முக்கியத்துவம் தருகிறது. ஆதிவாசிச் சிறுவர்களுக்குக் கற்பித்த ஒரு ஆசிரியை சில்வியா என்பவரது அனுபவமே இந்த நூல் .

பள்ளிகளில் மொழி - இடைவெளி எவற்றை உருவாக்கும் , ஆசிரியருக்கும் மாணவருக்கும் அதனால் எவ்வளவு பிரச்சனை ,வேடிக்கையாகத் தெரிந்தாலும்  அதன் விளைவுகள் என்னென்ன என நாம் உணர்ந்து கொள்ள அழைக்கிறது இக்கட்டுரை . பள்ளி கற்பிக்கும் லட்சியத்துக்கும் பள்ளியில் நடக்கும் எதார்த்தத்திற்கும் உள்ள இடைவெளியைக் காட்ட முயற்சி செய்துள்ளார்.

நான் முதன் முதலில் ஆசிரியப் பணியேற்ற பள்ளியில் இப்பிரச்சனை மிகப் பெரியதாக இருந்தது. அது சேலம் மாவட்டத்தில் ஒரு கிராமப் பகுதி பள்ளி , வந்திருந்த ஆசிரியரோ நாகர்கோவில் ..அவர் செல்லும் வகுப்பிலுள்ள மாணவர்கள்  எனது வகுப்பு மாணவர்களிடம் மனம் திறந்து பேசியிருக்கின்றனர் , அது என்னிடம் வந்தது ... இது தான் செய்தி ... அந்த டீச்சரின் பெயர் சொல்லி ... அவங்க பேசறதே புடிக்கலடா , இந்த க்ளாஸ்க்கு வந்துட்டா பரவாயில்ல ... இங்க டீச்சர் கண்ணு , தங்கம் எனக் கூப்பிடறாங்க , அந்த டீச்சர் " எலே " ன்னு கூப்பிடறாங்க ... சனியன்னு திட்டறாங்க , நிறைய வார்த்தைப் புரியல ... பாடம் நடத்தினா புரியல.... இதுக்குக் காரணம் அந்த ஆசிரியரின் மொழி நடைதான். இந்த ஊரில் "எலே " என்பது திட்டும் வார்த்தை ... ஆனால் அந்த ஆசிரியரோ  சாதாரணமாகத் தான் இதைப் பயன்படுத்த மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி துன்பப்பட்ட கதைகளும் உண்டு.

ஆசிரியரின் இயல்பான முகமும் , போராட்ட முகமும் எவ்வாறு இருக்கும் எனவும் வகுப்பறையின் உள் நிகழும் உள் வகுப்பறையை அவர் உணர்ந்த சந்தர்ப்பங்களையும் பதிவு செய்திருக்கிறார்.

நான் கூட இந்த வகுப்பறையின் உள்ளே உருவாகும் உள் வகுப்பறைகளை உணர்ந்திருக்கிறேன். நான் படிக்கும் போது ஒரே ஊரிலிருந்து வரும் மாணவிகள் ஒரே இடத்தில் தான் அமர்வார்கள் , ஒரு மொழி பேசும் இனத்தவர் ஒன்றாகவே இருப்பர் , ஒரு குறிப்பிட்ட சாதி இனத்தைச் சார்ந்த மாணவிகள் மற்றவரோடு பழக மாட்டார்கள் ,  இது இன்றும் அப்படித்தான் உள்ளது. நகரங்களை விட கிராமங்களில் இது மிகத் தெளிவாகத் தெரியும்.
அதோடு  சமூக இடைவெளிகள்  நிரப்பாத வகுப்பறை உறவுகள் பற்றியும் , வசதியும் வறுமையும் தனியார் பள்ளிகளிலும்  அரசுப் பள்ளிகளிலும் உருவாகும் இடைவெளி குறித்தும் தொடர்ச்சியாக  வாசிக்காத ஆசிரியர்களது வறட்சியான வகுப்பறை உருவாக்கும்  அரைத்த மாவுப் பேச்சும் என சிலவற்றைப் பதிவு செய்துள்ளார் .

இறுதியில் ஆசிரியரும் மாணவரும் இரு அதிகாரங்களாகத் தொடர்வது பிரச்சனைகளை உருவாக்கும் என இக்கட்டுரை முடிகிறது.
7. பள்ளியும் பண்பாட்டுப் புரட்சியும் : சீனப் புரட்சி - மாவோவின் கல்விப் புரட்சி நடைமுறை , கலாச்சாரப் புரட்சிக்கு அடிப்படை உடல் உழைப்பைப் புறக்கணித்தக் கல்வித் திட்டம் தந்த ஏமாற்றம் பொதுக் கல்வி நடைமுறை , பாடத்திட்டத்தில் கம்யூனிசச் சிந்தனை புகுந்தது என உலகளாவிய புரட்சி மாற்றங்களைப் பதிவு செய்துள்ளார்  பேரா ச.மா அவர்கள்

8 . பொய்களுக்கும் ஓர் இடம் : GPF கடன் வாங்க ஆசிரியர்கள் பொய் சொல்வது தவறில்லை ஆனால் மாணவன் பொய் சொல்ள விட்டால்  அங்கே ஒலிக்கும் அபாயக் குரல்கள் எத்தனை எத்தனை ... இது குறித்தும் வகுப்பறைகள் ஏன்  சிரிப்புடன் கூடிய விசாலமாக இருக்கக் கூடாது என சிந்திக்க வைக்கும் ஆசிரியர்களது உரையாடலாய்  அமைந்துள்ளது  இக்கட்டுரை . இது போன்ற உரையாடல்கள் ஆசிரியர்களாகிய  நமது மனதை விசாலமாக்கும் என்ற கருத்தை முன்வைத்து முடிகிறது இக்கட்டுரை .
9. ஜென் வகுப்பறைகள் : யாரும் வாங்கிக் கொள்ளாத வார்த்தைகளாகத்தான் நமது வகுப்பறைகள் இருக்கப் பழகிவிட்டன. ஆசிரியர்களுக்காக ஒரு ஜென்  கதையை தந்திருப்பது சிறப்பு .நம்பிக்கைகளும் உணர்ச்சிகளும் புதிய அனுபவங்களை நோக்கிப் போவதற்குத் தடை என்கிறார். இது சற்றே ஆழமாக சிந்திக்க வேண்டிய வாக்கியம்.
இப்படி ஒரு நூலை வாசித்து விவாதிக்கக் கூறுகிறார் what dial you ask at School today -  Kamala V Mukunda எழுதியது ... கடந்து போக வேண்டிய சில நிமிடங்கள் பற்றிக் கூறுவதில் ஆசிரியர் - தலைமையாசிரியர், மாணவர் இவர்களது கோபங்கள் , அவை கடந்து போகும் நிமிடங்கள்  என சில நல்ல அனுபவங்களை ஜென் கதைகளின்  வழியாகவும் நிகழ்ச்சிகளின் வழியாகவும் பதிவு செய்துள்ளார்.

10. வீதியில் விதைத்த நம்பிக்கை : இந்தக் கட்டுரை எழுத்தறிவு இயக்கமான அறிவொளி இயக்கத்தில் பேரா ச .மாவின் அனுபவத்தைப்  பதிவு செய்துள்ளது. றெக்கை முளைச்சதில் ஆரம்பிச்சு எதற்காகக் கல்விக் கூடங்கள்  என்பதில் முடித்திருப்பதில் பல கதைகள் உள்ளன.

இவ்வாறு ஒரு கட்டுரைத் தொகுப்பு வாசித்த பிறகு ஆசிரியர்களது புரிதல்........ அதை உள்வாங்கி.... புதிய பரிமாணத்தில் சிந்திக்கத் தொடங்கும் ஆரம்பப் புள்ளியாக இருக்க முயற்சி செய்ய உதவியுள்ளது இந்நூல் . எனது அனுபவங்கள் சிலவற்றையும் நினைவு கூர்ந்திட ஆங்காங்கே வழிவகுத்துள்ளது என் சிவப்புப் பால் பாயிண்ட் பேனா ...

அன்பும் நன்றியும்
உமா

No comments:

Post a Comment