Thursday 2 January 2020

வாசிப்பு சொல்லால் அழியும் துயர்

சொல்லால் அழியும் துயர்

நூலாசிரியர் : 

எழுத்தாளர் தி.பரமேசுவரி . இவர்  அரசுப் பள்ளியின் தலைமையாசிரியர் , கவிதை நூல்களையும் கட்டுரைகளையும் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். நூலாசிரியர் தி .பரமேசுவரி, மேல்நிலைப் பள்ளி  மாணவர்களுக்கு தமிழாசிரியராகப் பல வருடங்கள் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். அதன் அடிப்படையில் 36 கட்டுரைகளிலும், இன்றைய கல்வி முறை குறித்து மிக விரிவாகப் பேசியுள்ளார். 

நூல்  :

மூன்று வருடங்களாக பாவையர் மலர் மாத இதழில் கல்வி குறித்துஎழுதிய 36 கட்டுரைகளை  பாவை மதி வெளியீடாக வான்மதி வெளியிட்டுள்ளார். 168 பக்கங்களைக் கொண்ட நூல் 2018 டிசம்பரில் முதற்பதிப்பாக வெளிவந்துள்ளது. 

நூல் குறித்து

...

இன்றைய கல்வி முறையின் ஓட்டைகள் , பள்ளிக் கல்வியின்  துயரங்கள் , ஆசிரியரது கடமைகள் அதிலிருந்து விலகிப் போன நிலை. பள்ளிகளின் வகை , பெண் கல்வியின் நிலை , கல்வி மறுக்கப்பட்ட சமூகம் , பொருளாதார ஏற்றத் தாழ்வு சூழ்ந்த சமூக நிலை .அதனடிப்படையில் அமைந்த பள்ளி அமைப்புகள் ,ஆசிரியர் - மாணவர் உறவு முறை , கழிப்பறைகள் காணாத அரசுப் பள்ளிகள் , மதிப்பீட்டு முறைகளின் போதான அனுபவங்கள் அனைத்தும் பேசியிருக்கிறார். பள்ளிகளின்  மொழியின் சிக்கல்கள் , தாய்மொழிவழிக் கல்வி குறித்தான ஆய்வு , ஆசிரியர் - மாணவர் உளவியல் சிக்கல்கள் அனைத்தையும் குறிப்பிட்டுக் கட்டுரைகளை நிறை வாக்கியிருக்கிறார். 

அன்றாட செய்தித்தாளில் ஊடகங்கள் வெளியிடும் பாதிக்கப்பட்ட  பள்ளி மாணவர் , ஆசிரியர் குறித்த செய்திகளை ஆங்காங்கே விளக்கிக் கூறி தனது ஆதங்கத்தையும் வருத்தத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். 

ஆங்கிலக் கல்வி முறை, பிறகு உருவாகிய கல்விக் குழுக்கள் , பள்ளிகளில் மாணவர் ஈடுபடும் அமைப்புகள் , வளாகத்திற்குள் நடக்கும் அனைத்து வகையான பிரச்சனைகள் , மக்கள் நிலை என எல்லாவற்றையும் கட்டுரைகள் பேசியுள்ளன. 

அடிப்படையில் எழுத்தாளராகவும்  தமிழாசிரியராகவும் முனைவராகவும் இருப்பதால் நன்னூல் முதலான இலக்கியங்களில் குறிப்பிட்ட ஆசிரியர் மாணவர் ஒப்பீட்டு இலக்கணம் முதற்கொண்டு திருக்குறள் , பாரதியார் கவிதைகள் அனைத்தையும் ஆங்காங்கே துணைக்கழைத்து கட்டுரைகளை செறிவாக்கி இருக்கிறார். 

ஆசிரியர்கள் அனைவரும் வாசிக்க வேண்டிய முக்கியமான நூல் இது. பெற்றோர்களும் கல்வி அலுவலர்களும் வாசித்தால் கல்வி சிக்கல்கள் கூடுதலாகாமல் காக்க முடியும். அட்டைப்படம் குழந்தைகளது இயல்பான புன்னகையைப் பதிவு செய்கிறது. 

உமா

No comments:

Post a Comment