Wednesday 21 February 2018

வாசிப்பை நேசிப்போம் .... 4


நாள் : 2

லாலி பாலே - கதைக் கம்பளம்

லாலி பாலே ஒரு சிறுவர்களுக்கான கதைப் புத்தகமாக இருந்தாலும் பெரியவரும் விரும்பி படிக்கலாம் , நூலாசிரியர் பெரும்பாலோருக்குப் பிடித்த எஸ்.ராமகிருஷ்ணன் , இந்தப் புத்தகத்தின் எண்ணம் அவரின் மகன்ஆர்.ஆகாஷின் உரிமை. நாலாவது படிக்கும் அச்சிறுவன து எண்ணங்களுக்கு எழுத்து வடிவம் தந்ததாகக் குறிப்பிடுகிறார். விலை ரூ 25 ,பக்கங்கள் 48 மட்டுமே

நூலாசிரியரின் கதைக் கம்பளம்  7 சிறுவர் புத்தகங்களை உள்ளடக்கியது. அதில் லாலி பாலே அம்  ஒன்று , 2007-இல் முதல் பதிப்பில் வந்த இப்புத்தகம் புக்ஸ் ஃபார் சில்ட்ரன் வெளியிட்ட ஒரு அழகான நூல். இதன் முன்னுரையில் ஆசிரியர் குறிப்பிடும் கருத்துகள் மிக மிக அழகாக இருக்கின்றது. உலகில் மொத்தம் எத்தனை கதைகள் இருக்கின்றன ? எனக் கேட்கிறார்.உலகில் வாழும்  மொத்த மனிதர்களை விடவும் , கடற்கரை மணலை விடவும் கதைகளின் எண்ணிக்கைக் கூடுதலாக இருக்கும் , கொலம்பலை விட ,யுவான் சுவாங்கை விட அதிகமாக உலகம் சுற்றிய பயணி கதையே

கதை எப்போதும் சுவாரஸ்யமானது. இந்தப் புத்தகத்தை வாசிக்கும் போது சிறு வயதில் பள்ளிகளில் சிலேட்டுகளில் பென்சிலால் கதைக்கான உருவங்களை வரைந்து நண்பர்களிடம்  கதை சொன்னது தான் என் மனமெங்கும் ஓடியது. , ஏழுமலை தாண்டி , ஏழு கடல் தாண்டி ஒரு ராணி . கிளி வீடு , அதற்குள் ஒரு குகை ... இப்படி ஒவ்வொரு மனிதருக்கும் பால்ய கால கதைக்கான கதைகள் உண்டு ...

இந்தப் புத்தகம் அந்த நினைவுகளை மீட்டு வருகிறது. இதில் மொத்தம் 6 கதைகள் , அவை
1. லாலி பாலே
2. கியா மியா
3 படித்த எறும்பு
4. காதில்லாத அரசன்
5 .அதிர்ஷ்டம்
6. எலியரசன் லீலீ என்பன .

முதல் கதையைப் பற்றிக் கூற வேண்டுமெனில் ஒரு மண்புழு பாலே நடனம் கற்றுக் கொண்டு மாஸ்கோ செல்கிறது , அங்கும் விடாமுயற்சி, செய்து வெற்றி பெற்று அது வசிக்கும் தும்பா மலைக்குப் பெருமை சேர்க்கிறது , இதை ஒரு சிறிய கதையாக வாசிக்க , கண்களை நகர்த்த முடியவில்லை , இதன் காட்சிகள் நம் கண் முன்னே விரிகின்றன. இந்தக் கதை நிறைய பொருள்களைப் படைத்து இன்னும் ஆழமாகக் காட்டுகிறது. ,

பாலே நடனம் , அதன் பிறப்பிடம் என்ன , செடியில் காற்றுக்கு அசையும் இலை - உடல், இலை உதிர்வது போல நடனம் , பிரான்ஸ் நாட்டில் பாலே நடனம் எவ்வாறு பரவத் தொடங்கியது ? எந்த நூற்றாண்டில் இது வந்தது ? அது எவ்வாறெல்லாம் விதவிதமாக ஆடப்படுகிறது என அழகாக ஒரு செய்தியை இக்கதை போகின்ற போக்கில் தந்து செல்கிறது.
கதாபாத்திரங்களாக வரும் வரிக்குதிரை அண்ணா , நூலகர் எவ்வாறு அந்த ஊர் குழந்தையான லாலியை ஊக்கப்படுத்தி , வழிகாட்டி பாலே கற்றுக் கொள்ள வைத்து அயல் நாட்டுப் போட்டியில் பங்கு பெற வைக்கத் துணை நின்றது என படிக்கும் போது நம்மை சிந்திக்க வைக்கிறது.

கியா மியா

நகரமயமாக்கலில், நீர் நிலைகள்   எவ்வாறு அழிக்கப்படுகின்றன என்ற அரசியலை மறைமுகமாக தொட்டுச் செல்கிறது கியா மியா .அதோடு மட்டுமில்லாமல் பல்லுயிர்ப் பெருக்கத்தின் அழிவும் , இயற்கை சிதைக்கப்படுதலையும் எடுத்துக் காட்டுகிறது. தவளைகளே இல்லாத நகரமாக அரசால் பாராட்டப்பட்டு பரிசு வழங்கும் பரிதாப நிலை , இது இன்றைய அரசின் போக்கை சித்தரிக்கிறது.உலகில் தண்ணீரைப் பூட்டி வைக்கிறவர்கள் மனிதர்கள் தான் என்ற வரிகள் நம்மை ஆழமாக சிந்திக்க வைக்கிறது.

படித்த எறும்பு :

புத்தத் துறவியின் வீண் பிடிவாதமும் எறும்பின் விடா முயற்சியும் எவ்வாறெல்லாம் கதையை அறிமுகப்படுத்துகிறது  என்பதே படித்த எறும்பு , ஒரு எறும்பையாவது விருப்பப் படிவளர்த்து துறவியாக்க விரும்பும் புத்தத்துறவி எவ்வாறு தோல்வியுறுகிறார் என்பதே இக்கதை. இறுதியில் எறும்புகள் மனிதர்களை விட மேலானவை. , மாற்ற நினைப்பது முட்டாள் தனம் , தன்னியல்பில் சுதந்திரமாக வாழ்வது தான் வாழ்க்கையின் முக்கியத்துவம் என்பது இக்கதையின் மூலம் தெளிவு படுத்தப்பட்டிருக்கிறது.

இதே போல் காதில்லாத அரசன் அதிர்ஷ்டம் , எலியரசன் லீலீ என ஒவ்வொரு கதையிலும் பாப்போரைக் கற்பனைக் காட்டுக்குள் மேய விடுகிறது நூல் , பள்ளிக் குழந்தைகளும் , வீட்டுக் குழந்தைகளும் படிக்க வேண்டியது லாலி பாலே .. அட்டைப்படமும் அழகாக இருக்கின்றது.... சிறுவர் நூலகத்தில் இருக்க வேண்டிய நூல் ...

அன்புடன்
உமா
.

No comments:

Post a Comment