Wednesday 21 February 2018

வாசிப்பை நேசிப்போம் ....2

கதை சொல்லும் கலை .....

இதை  ஒரு விழிப்புணர்வு தரும் கருத்துச் செறிவு மிக்க நூலாகக் கருதுகிறேன். ச.முருகபூபதி அவர்கள் எழுதிய இந்நூல் இந்திய மாணவர் சங்கத்துடன் இணைந்து புக்ஸ் ஃபார் சில்ரன்  வெளியிட்டுள்ளது. இதன் முதல் பதிப்பு 2007 இல் வெளிவந்துள்ளது. விலை ரூ 10 மட்டுமே . மொத்த பக்கங்கள் 24 , ஆனால் 200 பக்கங்களில் சொல்லக் கூடிய அளவு கருத்துகள் நம்மை ஆட்கொள்கின்றன.

கதை இன்று நேற்று பிறந்ததல்ல , அது காலத்தின் தொல் படிவம், மனிதர்களை உயிருள்ள ஜூவன்களாக பல நேரங்களில் இந்தக் கதைகள் வாழ வைக்கின்றன, ஆதிகாலத்தில் கல் ஏடுகளில் பதிக்கப்பட்ட உருவங்கள், பூர்வக் காடுகளில் மரித்துப் போன டைனோசர்கள், முதாதையர்கள் என இந்த உலகம் கதைக்களாலேயே வாழ்கிறது என்றால் மிகையாகாது ,

மாற்றுக் கல்வி குறித்து ஒரு பன்முகப் பட்ட பார்வையைத் தருவதாகக் கூட இந் நூலைக் கடக்கலாம்.

கதை சொல்லுதல் என்பது போதனையல்ல , அது ஒரு கலை , குழந்தைகளின் கற்பித்தல் முறையின் ஒரு பகுதியாக மாற வேண்டும் என்ற கருத்தை பெற்றோர்களும் ஆசிரியரும் உணர வேண்டும் என்பதை இந்நூல் மறைமுகமாக அறிவுறுத்துகிறது.

கதைகள் எழுதி வாழும் பித்தனும் , அவனது மூட்டை மூட்டையான கதைகளும் , பனையோலைக் கதைகளும் , பித்தனின் கதைகள் உலக மொழிகளில் எல்லாம் மொழிமாற்றம் செய்யப்பட வேண்டும் என்ற அவனது அவாவும் ,ராஜாவின் சந்திப்பும் , கதைகள் எரிக்கப்படுவதும் அவ்வாறு எரிக்கப்படும் போது உருவாகும் கதையின்  வாசனை வனமெங்கும் பரவுவதும் , எரிந்த கதைகள் போக எஞ்சிய கதைகளே இன்று நமக்குப் படிக்கக் கிடைத்து இருக்கின்றன என்பதும் மிகப் பெரிய உயிர்ப்பை நம்முள் உலவ விட்டு வாழ வைக்கின்றன.

பள்ளி மாணவர்கள் எவ்வாறு கதை உலகத்தில் தங்களை லயித்துக் கொள்ள விரும்புகின்றனர் என்பதை அவர்களேக் கூறும் கதைகளைக் கொண்டு புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ளன.

விவசாயிகளின் வாழ்வில் கதைகள்  தங்கள் கதவுகளைத் திறந்து , விதைப்பு , அறுவடைக் காலங்களில் பயணம் செய்யும் காட்சிகளையும் நம் கண் முன்னே கொண்டு வருகிறது. சமூகத்தின்  ஒவ்வொரு அங்கமும் பிறப்பு முதல் இறப்பு வரையிலான அனைத்து சடங்குகளிலும் கதைகளே ஒளிந்து கொண்டு மனிதர்களை இயக்க வைப்பதாக நம்மை உணர வைக்கிறது.

குழந்தைகள் தங்களின் உலகை , கதை வழியே சுமந்த பாடல்களால் அறிந்து கொள்கின்றனர் என்பதும் , கதை வெளிதான் தங்களுக்கான வாழ்விடம் என்பதையும் நம்பிக் கொண்டுள்ளதை அவர்களின் ஆசை பொம்மைகளையும் , விளையாட்டு சாமான்களையும் கொண்டு உணரலாம் என்பதையும் இந்நூல் பதிவு செய்கிறது. கதையில்லாதவற்றைத் தங்களிடம் வைத்திருக்க விரும்புவதேயில்லை என்பதும் எல்லாக் கதைகளையும் அடுத்தடுத்த நபர்களுக்கு பயணிக்கச் செய்கின்றனர் என்பதும் அழகான வரிகள்.

கதைகளின் கற்பனையை பூதாகரமாக்கி சிறு அணுவாக விவரிக்கிறது இந்நூல்.கதைகள் நம்மோடு வாழ்பவை ,நிஜக்கதை , கற்பனைக் கதை , திகில் கதை என அடுக்கிக் கொண்டே போகலாம். என்பதை மிக அழகாக வரிக்கு வரி வார்த்தைக்கு வார்த்தை இயம்புகிறது இந்நூல் .

இப்புத்தகம் குழந்தைகளுக்கும் வாழ்க்கைக்கும் கதைக்குமான தொடர்பை திரும்பத் திரும்ப வலியுறுத்துகிறது , கதைகளின் தாயகமே இந்தியா தான் இங்கிருந்த கதை சொல்லல் கலையை பாரசீகர்கள் கற்று அராபியர்களிடையே பரப்பி பூமி முழுக்க முளைத்ததாகக் கூட ஒரு கதை உண்டு.
கதைகள் சிலந்தி போல உதடுகளால் பின்னப்பட்டு மறு உருவாக்கம் செய்யப்பட்டுக் கொண்டே இருக்கின்றன, அவை ஓயாது முடிவுறா நூற்கப்படும் கம்பளமாக விரிந்து கொண்டே செல்கின்றன என்பன போன்ற வரிகள் மனதை விட்டு அகல மறுக்கின்றன .

பண்பாடு ,புராணம் , மரபு என ஒவ்வொன்றிலும் பல நூறு கதைகள் மறைந்து வாழ்ந்து வருகின்றன என்பதையும் இந்நூல் நினைவூட்டுகிறது.
பல நேரம் மறை எண்ணங்களைத் தரும் இந்நூல், கதைகள் சொல்லும் பழக்கங்கள் தொலைக்காட்சிப் பெட்டியால்  அழிந்து சுயமாகக் கதைகளை சிந்தனை செய்யும் படைப்பாக்கம் காணாமல் போய் விட்ட  எதிர்மறை விளைவுகளையும் கடுமையாக விமர்சிக்கின்றது.

இப்பழக்கத்தை குழந்தைகளிடம் எவ்வாறு மீட்டெடுக்கலாம் எனவும் செயல்பாடுகளைப் பட்டியலிடுகிறது இந்நூல் ,
ஆகச் சிறந்த பொருண்மையுள்ள நல்ல நூல் ...

Day: 2

No comments:

Post a Comment