Friday 16 November 2018

மரண வலி

ஏதேதோ  பேச வேண்டும் என்று தான் எப்போதும்  திட்டமிடுகிறது மனது ....
சந்திக்கும் யாவரிடமும் ...
சிந்திக்கும் ஒவ்வொரு நிமிடமும் ..

சந்திப்பின் இறுதியில் ஏனோ
சலனத்துடனே திரும்பி வர
எதுவுமே பேசவில்லை
என்ற முடிவுக்கு வருகின்றது ...

மனம் விம்மும் சில நொடிகளைக் கூட
மனிதர்களிடம் உள் நுழைந்து
புரிய வைக்க  எந்தவித
அவகாசமுமில்லை ...

அறிவின் மாயை இங்கே அன்பின் உண்மையைப் பிடிவாதமாக
ஏற்றுக்கொள்ள மறுக்கும் மரண
நிமிடங்கள் ....

எதை நோக்கி நகர்கிறது வாழ்வு ...
எங்கிருந்து ஆரம்பித்தன
உறவின் சிக்கல்கள்
உணரக் கூட எண்ணுவதில்லை ..

குழந்தைகளின் இயல்பாக
அகம் தந்த நினைவுகள் யாவும் ...
புறம் தள்ளி இகழப்படும்
புரியாத சூழ்நிலைகள் ...

உமா

Tuesday 13 November 2018

பெண்ணியம்

பெண்ணியம் ..

இருட்டுக் குவியலில் கரி கொண்டு எழுதிப் பார்த்த எழுத்தாய் நீ ....

வெளிச்சச் சிதறலில் கலந்துவிட்ட ஒளிக்கீற்றாய் நீ ....

மழைத் துளிகளின் சாரலில்
சேர்ந்துவிட்ட மேகத் திவலைகளாய் நீ ....

இரைச்சலின் சங்கீதத்தில்
இணங்கி விட்ட ஒலிக் குறியீடாய் நீ ....

தீயின் பரவலில் பற்றிக் கொண்ட காற்றின் மிச்சமாய் நீ ....

பிரம்மாண்டத்தின் நுழைவாயிலில் கால் பதித்த சிறு மூலக்கூறுகளின் மிகச் சிறு அணுக்களாய் நீ ....

உன்னை எங்கிருந்து பிரித்தெடுக்கட்டும்  ....
நினைவுகளின் நிழலாக பத்திரப் படுத்துகிறேன். ...

உமா

Saturday 3 November 2018

Kavithai

புள்ளிகளில் ஆரம்பமாகும் வாழ்க்கை ...
கோடுகளின் வழியிலே பயணித்து....
பல்வேறுஉருவங்களில் சங்கமிக்கிறது ...
வட்டப் பாதையில் இணையும் புள்ளிகள்
வடிவம் பெறும் அழகே தனி தான் ....
வேறொரு கோட்டில் பயணிக்கும் புள்ளிகள்
தொட்டுச் செல்லும் கோடுகளாய் வெட்டுகின்ற நேரங்களில் ....
தொடும் கோணங்களில் உருவாகும் வாழ்க்கை ...மற்றுமொரு பரிமாணம் ...

இவற்றுள் ...
மையப்புள்ளிகளாக சில உறவுகள் ..
வட்ட நாண்களாய் சில உறவுகள் ..
இணையான கோடுகளாய் சில உறவுகள் ..
மையக் குத்துக் கோடுகளாகக் கூட
மையம் செய்து காக்கும் உறவுகள் ..
சுற்று வட்ட மையமாக குடும்ப உறவுகள் ..
செங்குத்து உயரங்களாக சில வழித்துணைகள் ...
மூலை விட்டங்களின் முனைகளாக இருவரை  இணைக்கும்
நேர்க்கோட்டு உறவுகள் ..
பாகை மானிகளாக அளவிடும்
பகுக்கப்பட்ட உறவுகள் ...
சதுரமும் செவ்வகமும் நாற்கரமுமாக
இணைகரம் சாய்சதுரம்  எனக் கூறும்
இன்னும் சில உருவங்களான உறவுகள் ...
வாழ்க்கை ஒரு  வட்டமான கணக்குக்குள்
இன்னும் ஆய்விற்கு உட்பட்டே ..

உமா